வைஃபை ஆன் செய்ததும், மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்ட கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழா காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் கேபினட்டில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ராஜ்நாத் சிங் வந்து வெளியிட்டிருக்கிறார்.
வெளியிட்டதோடு விழாவில் யாரும் எதிர்பாராத வகையில் அரங்கத்தில் அனைவரையும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்தச் சொல்லி, கலைஞரின் குடும்பத்தினரையும் திமுக தொண்டர்களையும் நெகிழ வைத்துவிட்டார்.
வாஜ்பாய் அமைச்சரவைக்கு கலைஞர் கொடுத்த ஆதரவு பற்றி நினைவுகூர்ந்த ராஜ்நாத் சிங், ‘இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் கலைஞரிடம் பாடம் படிக்க வேண்டும்’ என்று கூறினார். மேலும் கலைஞரின் பல்வேறு திட்டங்களை நினைவுகூர்ந்து பேசினார்.
நாணய வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு முன்பே… மெரினாவில் இருக்கும் கலைஞர் நினைவிடத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் முருகன் ஆகியோரோடு சென்று மரியாதை செலுத்தினார் ராஜ்நாத் சிங்.
இந்த சம்பவங்கள் எல்லாமே ஏதோ திமுகவும் பாஜகவும் இந்த விழாவைத் தாண்டிய நெருக்கத்தோடு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
திமுகவின் டெல்லி புள்ளிகள் இந்த விழா குறித்து சில வாரங்களுக்கு முன்பே நாடாளுமன்றம் நடக்கும்போது பிரதமர் மோடியிடம் பேசியிருக்கிறார்கள். அப்போது பிரதமர் மோடி…ஒரு சம்பவத்தை அவர்களிடம் நினைவுகூர்ந்திருக்கிறார்.
அதாவது, ‘நான் குஜராத் முதல்வராக இருந்தபோது கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். அப்போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். டெல்லியில் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் நான் கலைஞரை சந்தித்து கை குலுக்கி பேசிக் கொண்டிருந்தேன்.
அதே கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கையும் கலைஞர் சந்தித்து பேசினார். மறுநாள் தமிழ்நாட்டின் அனைத்து செய்தித் தாள்களிலும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலைஞர் இருக்கும் படம் வராமல், ‘நானும் (மோடி) கலைஞரும் சந்தித்து கைகுலுக்கும் படம்தான் வெளிவந்தது. இது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. என் மீது ஏனோ கலைஞர் அன்பு செலுத்தினார்;’ என்று அந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு நெகிழ்ந்திருக்கிறார் பிரதமராக இருக்கும் மோடி.
டெல்லி வட்டாரங்களில் மேலும் விசாரித்தபோது, ‘தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், தேர்தலுக்குப் பின் திமுகவே இருக்காது, காணாமல் போய்விடும் என்று பேசினார். ஆனால், இப்போது கலைஞர் நாணய வெளியீட்டு விழாவுக்கு ராஜ்நாத் சிங்கை அனுப்பியதோடு இதுகுறித்து திமுக புள்ளிகளிடமும் தனிப்பட்ட முறையில் பேசினார்.
அதோடு கலைஞர் பற்றி பாராட்டிப் போற்றி விரிவான வாழ்த்துக் கடிதம் எழுதியிருக்கிறார்.
மோடி இப்படியெல்லாம் திமுக மீது திடீர் பாசம் காட்டுவதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது.
ராஜ்யசபாவில் இப்போதுள்ள 229 மொத்த இடங்களில், பாஜகவுக்கு 87 எம்பிக்கள் இருக்கிறார்கள். கூட்டணியை சேர்த்து பாஜகவுக்கு 105 எம்பி.க்கள் இருக்கிறார்கள். 6 பேர் நியமன உறுப்பினர்கள். அவர்கள் அரசுக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள். அந்த வகையில் பாஜகவுக்கு 111 பேர்தான் ராஜ்யசபாவில் இருக்கிறார்கள். மெஜாரிட்டிக்கு 115 இடங்கள் தேவை.
எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ் 26 ராஜ்ய சபா எம்.பி.க்களை பெற்றிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளோடு சேர்த்து இந்தியா அணி 58 இடங்கள் பெற்றிருக்கிறது. இப்போது பாஜகவுக்கு எதிராக இருக்கும் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் 11 இடங்கள், நவீன் பட்நாயக்கின் பிஜேடி 8 இடங்கள் ராஜ்யசபாவில் பெற்றுள்ளன. திமுக ராஜ்யசபாவில் 10 இடங்கள் வைத்துள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சேர்த்தால் திமுக 11 இடங்கள்.
இந்நிலையில் ராஜ்யசபாவில் மோடி அரசால் எந்த மசோதாவையும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால்தான், அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அரசியல் சூழலில்தான் திமுகவின் கலைஞர் நாணய கோரிக்கையை ஏற்ற பிரதமர்… இந்த விழாவுக்கு, தனது கேபினட்டில் தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் ராஜ் நாத் சிங்கையும் அனுப்பி வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல விழாவின் போது கலைஞரை பற்றி மனம் திறந்து பாராட்டுப் பத்திரமும் வாசித்திருக்கிறார்.
ராஜ்யசபாவில் திமுக, முக்கிய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால், வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவிக்கலாமே என்ற மெசேஜை திமுகவுக்கு பாஜக அனுப்பியிருக்கிறது. அதன் முடிவை எதிர்பார்த்துதான் இப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
திமுக தலைமையில் இதுகுறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ‘பாஜகவோடு எந்த உறவும் இல்லை என்று அதிமுக அறிவித்துவிட்டது. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் இப்போதே தேர்தல் சீசன் போல பாஜக அரசுடன் மோதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நிர்வாக ரீதியாக அவர்களுடன் இணக்கம் காட்டி தமிழ்நாட்டின் நிதித் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்’ என்று விவாதிக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 3 ஆம் தேதி 12 ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் கணிசமான இடங்களை பாஜக வென்றால் கூட, திமுகவின் ‘வெளிநடப்பு எதிர்ப்பு’ பாஜகவுக்கு ராஜ்யசபாவில் தேவைப்படுகிறது. ஆனால் இதற்கு ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது அந்த சமயத்தில்தான் தெரியும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிவ்தாஸ் மீனா மாற்றம்: புதிய தலைமைச் செயலாளராகிறார் முருகானந்தம்?
“நாணயமிக்க கலைஞருக்கு நூற்றாண்டு நினைவு நாணயம்” – ஸ்டாலின்