premalatha vijayakanth new dmdk general secretary
வைஃபை ஆன் செய்ததும் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடந்த தேமுதிக பொதுக்குழு காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,
“இதுவரை தேமுதிகவின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக இருந்த விஜயகாந்த் இன்று (டிசம்பர் 14) முதல் நிறுவனத் தலைவராக மட்டுமே தொடர்கிறார், கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.
விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகான சில நாட்களில் அவரது உடல்நிலை சீரற்ற தன்மையோடு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியி,ட அனைவரிடமும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. விஜயகாந்த் உடல்நிலை பற்றி பல்வேறு தகவல்கள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் வர ஆரம்பித்தன.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி விஜயகாந்த் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று மருத்துவமனை அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்த அதே 11ஆம் தேதி தேமுதிகவின் பொதுக்குழு டிசம்பர் 14ஆம் தேதி திருவேற்காட்டில் கூடுகிறது என்று அறிவிப்பும் வந்தது.
தமிழ்நாடு முழுவதும் கட்டமைப்பை கொண்டிருக்கிற ஒரு அரசியல் கட்சி மூன்றே நாட்களில் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. இது பற்றி தேமுதிக வட்டாரங்களில் விசாரித்த போது, ’இந்த வருடத்திற்குள் பொதுக்குழு நடத்தி முடிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. அந்த அடிப்படையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொதுக்குழுவுக்காக சில நாட்களை தேர்வு செய்து வைத்திருந்த நிலையில் தான் கேப்டன் உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது.
அதனால் ஏற்கனவே திட்டமிட்ட தேதிகளில் எந்த தேதியிலும் பொதுக்குழு கூடலாம், தயாராக இருங்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு பிரேமலதா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படியே அவர்களும் காத்திருந்தனர். டிசம்பர் 11ஆம் தேதி கேப்டன் டிஸ்சார்ஜ் ஆனவுடன் உடனடியாக ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்டிருந்த தேதிகளில் ஒன்றான டிசம்பர் 14ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் என்று அறிவிக்கப்பட்டது’ என்ற பின்னணியை கூறினார்கள்.
விஜயகாந்த் மருத்துவமனைக்கு சென்று திரும்பி நிலையில் அவரை நேரில் பார்ப்பதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என அனைத்து தரப்பு நிர்வாகிகளும் இன்று பொதுக்குழு மண்டபத்தில் திரண்டனர். பொதுக்குழு கூட்டம் என்பதை விட அவர்களுக்கு கேப்டன் தரிசனம் என்பதே முக்கியமாக இருந்தது.
கூட்டம் தொடங்கிய அரை மணி நேரத்தில் விஜயகாந்தை சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வரும்போது ஒட்டுமொத்த கூட்டமும் ‘கேப்டன்… கேப்டன்’ என்று ஆர்ப்பரித்தது. அந்த முழக்கங்களைக் கேட்ட விஜயகாந்த், தொண்டர்களை பார்த்து கைகளை உயர்த்த முயற்சித்தாலும் அவருடைய உடல்நிலை காரணமாக அவரால் கைகளை ஓரளவுக்கு மேல் அசைக்க முடியவில்லை. இந்த நிலையில் விஜயகாந்தை பார்த்து தொண்டர்களும் நிர்வாகிகளும் கண் கலங்கினார்கள்.
‘கேப்டனை பாத்துட்டோம். கேப்டன் இருக்குறாரு. எங்களுக்கு அதுபோதும். அவர் சொன்னதால கட்சிக்கு வந்தோம். இன்னிக்கு வரைக்கும் அவருக்காகத்தான் இருக்கிறோம். கேப்டனைப் பாத்துட்டதால ரொம்ப நிம்மதி. நாங்க கேப்டன் கேப்டன்னு கத்துறதை அவர் புரிஞ்சுக்குறாரு. ஆனா பதில் சொல்ல முடியல. அவரை பாத்ததே எங்களுக்கு போதும்’ என்பதுதான் பெரும்பாலான நிர்வாகிகளின் மனநிலை.
இந்த நிலையில் தான் தேமுதிகவின் புதிய பொதுச் செயலாளராக பிரேமலதாவை தேர்வு செய்வது என்ற தீர்மானம் விஜயகாந்த் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. பொதுச் செயலாளராக தேர்வு பெற்றதும் விஜயகாந்தின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார் பிரேமலதா. இதன் மூலம் தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகளில் ஒரே பெண் பொதுச் செயலாளர் என்ற பெருமையைப் பெறுகிறார் பிரேமலதா.
அதற்குப் பிறகு பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் 2024 இல் நாம் நமது எம்பி கணக்கை துவங்குவோம். தேமுதிக இல்லாமல் எந்த கூட்டணியும் அமையாது. கூட்டணி அமைக்கும் போது ராஜ்யசபா ஒப்பந்தமும் போடுவோம்’ என்றெல்லாம் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி முதன்மையானதாக இருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால்… பாஜக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் ஒரு அணி என்று அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இந்த நிலையில் தேமுதிக எந்த அணியில் இடம் பெறும் என்ற ஒரு கேள்வி நிலவுகிறது.
தமிழ்நாட்டில் இப்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி ஹவுஸ்புல் ஆக இருக்கிறது. இதே கூட்டணியை சிந்தாமல் சிதறாமல் நாடாளுமன்ற தேர்தலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் ஸ்டாலினுடைய திட்டம். எனவே மற்ற கட்சிகளான பாமக, தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று அதிமுக கூட்டணி அல்லது பாஜக கூட்டணி என்ற வாய்ப்புகளை பெற்றுள்ளன.
இந்த நிலையில், 2021 தேர்தலில் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தொகுதிகள் பிரச்சனையால் வெளியேறியது தேமுதிக. அப்போது விஜயகாந்தை சந்திப்பதற்காக அப்போதைய அமைச்சர்கள் வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடியின் பிரதிநிதிகளாக சென்றிருந்தனர்.
விஜயகாந்தின் உடல் நிலையை நேரில் கண்ட வேலுமணி அதிர்ந்துபோய் எடப்பாடியிடம், ’அண்ணே விஜயகாந்த்தால இந்த முறை பிரச்சாரத்துக்கு வரவே முடியாது. அதனால அவங்களுக்கு அதிக தொகுதிகள் கொடுப்பது சரியான விஷயமா இருக்காது’ என்று தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே தேமுதிகவை கழற்றிவிட்டது அதிமுக. அதன் பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்தது.
இந்த நிலையில் இப்போது நாடாளுமன்ற தேர்தலில் ஒன்று திமுக பக்கம் இருக்க வேண்டும் அல்லது பாஜக பக்கம் இருக்க வேண்டும் என்று கருதுகிறார் பிரேமலதா. திமுக பக்கம் ஏற்கனவே கூட்டணி நிரம்பி வழிவதால் அநேகமாக பிரேமலதாவின் பார்வை பாஜக பக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தாக்குதல்: நான்கு பேருக்கு போலீஸ் காவல்!
வெள்ள பாதிப்பு: சாலையோர பெண் வியாபாரிகளுக்கு உதவும் அறக்கட்டளை!
premalatha vijayakanth new dmdk general secretary