டிஜிட்டல் திண்ணை: கையை மூடிவைத்த ராமதாஸ்… ஸ்டாலின் காட்டிய மாஸ்… செங்கோட்டையன் எடுத்த திடீர் முடிவு!

Published On:

| By Aara

digital thinnai No-confidence motion give clear image of dmk and admk

வைஃபை ஆன் செய்ததும் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. digital thinnai No-confidence motion give clear image of dmk and admk

அவற்றை பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“தமிழ்நாடு சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் பேசும்போது வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அப்படியே பேசினாலும் அவை தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படுவதில்லை என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் அப்போதைய சபாநாயகர் தனபால் மீது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் போல, இப்போதைய சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி வாக்கெடுப்பு நடத்தினார். இதில் அதிமுகவின் தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 154 வாக்குகளும் விழுந்தன. அந்த வகையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று இருக்கிறது. எனவே இந்த தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்ததுதான்.

ஆனாலும் இன்றைய சட்டமன்ற நிகழ்வில் திமுக கூட்டணி பற்றிய தெளிவும் அதிமுக கூட்டணி பற்றிய குழப்பமும் வெளிவந்துள்ளன. digital thinnai No-confidence motion give clear image of dmk and admk

திமுக கூட்டணியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 159. சபாநாயகர் அப்பாவு இந்த தீர்மானத்தில் கலந்து கொள்ளவில்லை, எனவே 158. இந்தத் தீர்மானத்தின் போது சபையை நடத்தியவர் துணை சபாநாயகர் பிச்சாண்டி. எனவே திமுக தரப்பின் பலம் 157. இந்த 157 பேரில் அமைச்சர் காந்தி உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் ஆளுங்கூட்டணித் தரப்பில் ஆப்சென்ட் ஆனார்கள்.

ஆக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு 154 வாக்குகள் திமுக கூட்டணி தரப்பில் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் திமுக கூட்டணி உறுதியாகவும் தெளிவாகவும் இப்போது வரை இருப்பது தெரியவருகிறது.

அதே நேரம் அதிமுக தரப்பில் சில திருப்பங்களும், குழப்பங்களும் நடைபெற்றன. அதிமுகவிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட, அதிமுக உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை நடத்தி வருகிற ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு எதிரான இந்த தீர்மானத்தை தானாகவே முன்வந்து ஆதரித்தார்.

சமீப நாட்களாக, அதிமுகவை ஒன்றிணைக்க சர்வபரி தியாகத்திற்கும் நான் தயார் என்று ஓபிஎஸ் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதாவது மீண்டும் அதிமுகவில் இணைவதற்காக எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை என்பதையும் அவர் எடப்பாடி பழனிசாமியிடம் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் தான், அதிமுக கொண்டு வந்த இந்த தீர்மானத்தை ஓபிஎஸ் ஆதரித்தார்.

மேலும் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான முரண்பாட்டிலே இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் அவையின் மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் இந்த தீர்மானத்தை ஆதரித்ததோடு, தீர்மானத்தை முன்மொழிந்தவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினரான செங்கோட்டையன் அவை விதிகளை நன்கு அறிந்தவர். சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த இந்த தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தாலோ அல்லது அதை எதிர்த்து வாக்களித்தாலோ அதிமுக சட்டமன்ற கொறடாவின் உத்தரவை மீறிய செயலாகும். அப்படி செய்தால் அது ஒழுங்கு நடவடிக்கைக்கு தன்னை உட்படுத்துவதற்கு ஏதுவாகிவிடும். எடப்பாடி பழனிசாமிக்கு அந்த ஒரு அட்வான்டேஜை கொடுக்கக் கூடாது என்பதால் தான் சபை விதிகளை நன்கு அறிந்த செங்கோட்டையன் இன்று இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளார்.

மேலும், எடப்பாடியோடு தான் தனக்கு முரண்பாடே தவிர கட்சியோடு அல்ல என்பதையும் இந்த நடவடிக்கை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் செங்கோட்டையன்.

இவர்கள் தவிர முன்னாள் சபாநாயகர் தனபால், இசக்கி சுப்பையா, அமல் கந்தசாமி ஆகிய 3 அதிமுக உறுப்பினர்கள் இன்று அவைக்கு வரவில்லை.

இது ஒரு பக்கம் என்றால் தற்போது அதிமுக கூட்டணியில் இல்லாத பாஜக கூட்டணியிலும் இல்லாத பாட்டாளி மக்கள் கட்சி இன்று இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவே இல்லை.

பாஜகவோடு கூட்டணி இனி இல்லை என பாமகவின் புத்தாண்டு பொதுகுழுவிலேயே சூசகமாக அறிவித்துவிட்டார் டாக்டர் ராமதாஸ். இதையடுத்து அதிமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து வருவதாக இரு கட்சி வட்டாரங்களிலும் நம்பிக்கையோடு இருந்தனர்.

இந்நிலையில் வருகிற ஜூலை மாதம் அன்புமணியின் ராஜ்யசபா எம்பி பதவி காலம் முடிவடைவதை ஒட்டி, மீண்டும் அவருக்கு ராஜ்ய சபா எம்பி வாய்ப்பு வழங்க வேண்டும் என சில வாரங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய சேலம் வீட்டில் சென்று சந்தித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி. digital thinnai No-confidence motion give clear image of dmk and admk

இதேநேரம் தே.மு.தி.கவும் தனக்கு அதிமுக கூட்டணியில் ராஜ்ய சபா சீட்டு உறுதி என கருதியது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவும் இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் நம்பிக்கையாக பேசி வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி யாருக்கும் அப்படி எந்த வாக்கும் நாங்கள் கொடுக்கவில்லை என செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக தெரிவித்துவிட்டார். இதனால் கசந்து போன பிரேமலதா சமீப நாட்களில் திமுக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுக்கத் தொடங்கிவிட்டார்.

தேமுதிகவுக்கு இல்லை என்ற ஆனதும் இரண்டு ராஜ்யசபா இடங்களில் ஒன்றை தனக்கு எடப்பாடி தருவார் என பாமகவும் நம்பியது. ஆனால் இப்போதைய உட்கட்சி சூழலில் இரண்டு ராஜ்யசபா இடங்களையும் அதிமுகவினருக்கே தருவது என எடப்பாடி ஆலோசித்து வருவதாக பாமகவுக்கு தகவல் கிடைத்தது. இது பற்றி அதிமுக புள்ளிகளிடமும் ஜிகே மணி உரையாடி இருக்கிறார். ராஜ்யசபா பற்றி எந்த உத்தரவாதமும் இல்லாததால்… சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது என்ன நிலைப்பாடு எடுப்பது என டாக்டர் ராமதாஸிடம் விவாதித்திருக்கிறார் ஜிகே மணி.

இந்த சூழலில் சட்டமன்றத்தில் நாம் என்ன முடிவெடுத்தாலும் அது நமது கூட்டணி வியூகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்து விடும், அதுவே நமக்கு பலவீனமாகவும் ஆகிவிடும். எனவே இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என ராமதாஸ் அறிவுறுத்த அதன்படியே பாட்டாளி மக்கள் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும் இன்று அவைக்கே செல்லவில்லை.

இப்படியாக திமுக கூட்டணி உறுதியாக இருப்பதும், அதிமுக கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் குழப்பத்தில் இருப்பதுமே இன்றைய சட்டமன்ற வாக்கெடுப்பு மூலம் தெரிய வருகிறது” மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share