வைபை ஆன் செய்ததும் திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் மீண்டும் மாற்றப்பட்ட தகவல் இன்பாக்ஸில் வந்து விழுந்தது. digital thinnai : mkstalin strong message to dmk via dharma selvan
அதை பார்த்துக்கொண்டே வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தர்மசெல்வன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஒரு மாதத்திற்குள் அதாவது மார்ச் 23ஆம் தேதிக்குள்ளாகவே தர்ம செல்வன் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, தற்போது தர்மபுரி எம்.பி. மணி புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவில் இதுபோன்ற உடனடி பதவி பறிப்புகள் அசாதாரணமானவை. தர்மபுரி மாவட்ட செயலாளராக இருந்த தர்ம செல்வன் எதிர்கொண்ட சர்ச்சைகள் பற்றி மின்னம்பலத்தில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.
அவர் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே முன்னாள் மாவட்ட செயலாளர் இன்ப சேகரன் ஒரு ஆடியோவை தனது சமூகத்தள பக்கத்தில் வெளியிட்டார். அதாவது இன்ப சேகரனை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி ஒருவரிடம் தர்மசெல்வன் பேசிய ஆடியோ தான் அது.
இந்த சூழலில் முதலமைச்சரிடம் மாவட்ட செயலாளர் பதவி பெற்றதற்காக வாழ்த்து பெற அறிவாலயம் சென்றார் தர்ம செல்வன். அப்போது அவரிடம் ஸ்டாலின், ‘தம்பி சொன்னார் என்பதால் தான் உங்களை போட்டு இருக்கேன். எச்சரிக்கையா இருந்துக்கங்க’ என்று வாழ்த்தும்போதே எச்சரிக்கையும் விட்டார்.
இந்நிலையில் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார் மாவட்ட செயலாளர் தர்ம செல்வன். digital thinnai : mkstalin strong message to dmk via dharma selvan

அரசு ஊழியர்களை மிரட்டுகிற ஆடியோ, தர்மபுரியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஒன்றிய செயலாளருடன் மோதல் என தொடர்ந்து கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் சர்ச்சைகளில் சிக்கினார்.
இந்த நிலையில் இவரை வைத்துக்கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் தர்மபுரியில் திமுகவுக்கு மேலும் பின்னடைவு தான் ஏற்படும் என உளவுத்துறையும் ரிப்போர்ட் அளித்தது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருடன் ஆலோசித்து தர்ம செல்வனை நீக்கி, புதிய மாவட்ட செயலாளராக எம்.பி மணியை அறிவித்துள்ளார் ஸ்டாலின்.
தர்மசெல்வன் மாவட்ட செயலாளர் பதவி பெற்றதும் வாழ்த்து பெற சென்றபோது தம்பி சொன்ன காரணத்தால் தான் உங்களை போட்டு இருக்கேன் என்று ஸ்டாலின் சொன்னது பற்றி திமுக நிர்வாகிகள் மத்தியில் விசாரித்த போது.. digital thinnai : mkstalin strong message to dmk via dharma selvan

‘அமைச்சர் அன்பில் மகேஷ் தான் தர்மசெல்வனை மாவட்ட செயலாளர் பதவிக்கு சிபாரிசு செய்து இருக்கிறார். அவர் துணை முதலமைச்சர் உதயநிதியிடம் சொல்ல, அன்பில் மகேஷ் பேச்சை தட்டாமல் உதயநிதியும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையிலேயே தர்மசெல்வன் இப்பதவிக்கு வந்தார்.
ஆனால் அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்ததால் 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றி ஒன்றே இலக்கு என்ற அடிப்படையில் யாருடைய சிபாரிசாக இருந்தாலும் கட்சி நலனை முன்னிறுத்தியே முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த நடவடிக்கை மூலம் காட்டியிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.
.