ஃவைபை ஆன் செய்ததும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை அக்கட்சியின் நிர்வாகிகள், வேட்பாளர்கள், அமைச்சர்கள் சந்திக்கும் புகைப்படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்தபடி வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ கடந்த மார்ச் 20-ஆம் தேதி திமுகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின் அதற்கு பிறகு காணொலி முறையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.
அந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘நாற்பது தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். நமது கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி, கூட்டணி கட்சி வேட்பாளர்களாக இருந்தாலும் சரி, எந்த பாரபட்சமும் பார்க்காமல் பணியாற்ற வேண்டும்.
எந்த தொகுதியில் நமக்கு வாக்கு குறைந்தாலும், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் ஆகியோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பேன்’ என்று எச்சரித்திருந்தார் ஸ்டாலின்.
இந்த எச்சரிக்கையுடன் தேர்தல் பணிகளை தொடங்கிய அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் ஒரு வழியாக தேர்தல் பணிகளை ஏப்ரல் 19-ஆம் தேதியோடு முடித்துவிட்டனர்.
தேர்தலுக்கு பிறகு ஒவ்வொரு மக்களவை தொகுதியை அடிப்படையாக வைத்து வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில், ஸ்டாலினுக்கு ரிப்போர்ட்டுகள் சென்றுள்ளன.
அதில், சில தொகுதிகளில் திமுகவின் வெற்றி வித்தியாசம் குறுகியதாக இருக்கக்கூடும் என்றும் இந்த குறைந்த வித்தியாசம் 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அந்த ரிப்போர்ட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன் எதிரொலியாக தன்னை சந்திக்க வருகின்ற அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களில் சிலரிடத்தில் தனது அதிருப்தியையும், எரிச்சலையும் கூட வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்டாலின்.
இந்த ரியாக்ஷன்களின் அடிப்படையில் தான் தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவை மாற்றம், மாவட்ட செயலாளர்கள் மாற்றம் இருக்கக்கூடும் என்று சில அமைச்சர்களே கூட தங்களுக்குள் விவாதித்து வருகின்றனர்.
அமைச்சர்களின் இந்த சந்தேகம் பற்றி முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தான் முதலமைச்சரும் உறுதியாக நம்புகிறார். ஆனால், அது மாநில அமைச்சரவை மாற்றமல்ல, மத்திய அமைச்சரவை மாற்றம்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்று புதிய ஆட்சி அமையும் என்றும் அதில் திமுகவை சேர்ந்தவர்கள் யார் யாருக்கு கேபினட் அமைச்சர் வழங்குவது? யார் யாருக்கு இணை அமைச்சர் வழங்குவது? என்பது பற்றிய ஆலோசனையில் தான் முதலமைச்சர் இப்போது இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் கூறியபடியே, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் திமுக அமைச்சர்கள் பொருளாதார ரீதியாகவும், தேர்தல் பணி தொடர்பாகவும் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள்.
இந்தநிலையில், இப்போது அமைச்சரவையை மாற்றி சில அமைச்சர்களை நீக்கி, சில அமைச்சர்களை சேர்த்தால் விரைவில் வர இருக்கிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார் ஸ்டாலின்.
இது எல்லாவற்றையும் விட நடந்து முடிந்த தேர்தலில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. ஒருவேளை வெற்றி வித்தியாசம் குறைந்தால் கூட அதற்கு காரணம் தேர்தல் பணியில் சுணக்கம் அல்ல, ஓட்டுக்கு பணம் கொடுக்காததாகத்தான் இருக்கும் என்று சில சீனியர் அமைச்சர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டனர்.
எனவே, அமைச்சரவை மாற்றம் என்ற எண்ணம் இப்போது முதல்வருக்கு இல்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.