டிஜிட்டல் திண்ணை: திமுகவின் ஊழல் பட்டியல்.. மதுரை மீட்டிங்கில் அமித்ஷா தந்த ‘அந்த’ ரியாக்‌ஷன் – ஆடிப் போன பாஜக!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், மதுரை பாஜக கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த ‘ரியாக்‌ஷன்கள்தான்’ ஹாட் டாப்பிக் என்றபடியே மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

மதுரையில் ஜூன் 1-ந் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலின், “அதிமுக ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது. madurai meeting amit shah reaction

அடுத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார். நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘out of control’-தான்” என அமித்ஷாவை விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், அரசியலில் அடுத்த உயரத்துக்கு செல்வதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனத்துக்கு அமித்ஷா திட்டமிட்டிருந்தார். இதனை பயன்படுத்தி பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜூன் 8-ந் தேதி காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு பின்னர் கிராண்ட் ஜிஆர்டி ஹோட்டலில் நடைபெற்ற பாஜக மையக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை அடுத்தடுத்து முன்வைத்தனர். ஆனால் அமித்ஷாவோ, கேப்பே விடாமல் ‘தக் லைஃப்’ பதில்களை தந்து கொண்டிருக்க ‘அப்படியே ஷாக்… ஆகிட்டேன் பாரு’ என்பதைப் போல ஆடிப் போய்விட்டனராம் பாஜக நிர்வாகிகள்.

சரி அப்படி என்னதான் பாஜகவின் மையக்குழு கூட்டத்தில் நடந்தது? யார் என்ன பேசினார்கள்? அமித்ஷா என்னதான் பதில் தந்தார்?

அமித்ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்த மையக் குழு கூட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஆலோசனை சொல்லுங்க என அமித்ஷா கேட்டுக் கொண்டாலும் பாஜகவின் தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன், மாஜி தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் என பலரும் அமைதியாக இருந்தனராம்.

இதன் பின்னர் ஏஜி சம்பத் பேசுகையில், நடிகர் விஜய் கட்சியை நம்ம கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என வேண்டுகோள் வைத்தாராம்.

கேபி ராமலிங்கம் பேசும்போது, அதிமுக- பாஜக கூட்டணிதான் சிறப்பான கூட்டணி. வெற்றிக் கூட்டணி என அதிமுக கூட்டணியை வரவேற்று பேச அமித்ஷா உன்னிப்பாக கவனித்தாராம்.

விபி துரைசாமி பேசும் போதுதான் அமித்ஷாவின் தக் லைஃப் ஆட்டம் மெல்ல தொடங்கியதாம். சென்னை அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தை இன்னும் வேற லெவலில் பெருசாக்கிவிட்டிருக்கனும். சிபிஐ விசாரணைக்கு எல்லாம் கொண்டு போயிருக்கனும் என்றாராம். அப்போது குறுக்கிட்ட அமித்ஷா, சரி.. அப்படி வேற லெவலுக்கு கொண்டு போனால் என்ன நடந்துவிடும்? சிபிஐ விசாரணை நடத்திவிட்டால் என்ன பிரயோஜனம் இருக்கு? என எதிர்கேள்விகள் கேட்டாராம்.

பாலகணபதி பேசுகையில், நம்ம பூத் ஏஜெண்டுகளுக்கு இப்ப இருந்தே பணப் பட்டுவாடாவை தொடங்கிவிட்டாதான் நல்லது என்கிற கருத்தை முன்வைக்க, இதற்கு, பூத் கமிட்டிக்கு இப்பவேவா பணம் தருவாங்க? ஜனவரி மாதம் இதை பற்றி யோசிப்போம் என ஒரே போடாகப் போட்டாராம் அமித்ஷா.

இதே பாணியில், திமுக மீதான ஊழல் புகார்களை கையில் எடுத்து சிபிஐ, ஈடி, ஐடி எல்லாவற்றையும் மொத்தமாக களமிறக்கிவிட்டு திமுகவை ஆட வைக்கனும் என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டதாம்.

இதற்கு சட்டென பதில் தந்த அமித்ஷா, சிபிஐ, ஈடி, ஐடி எல்லாத்தையும் நினைச்சமாதிரி இப்ப இறக்கிவிட முடியாது. அத்தனையையும் உச்சநீதிமன்றமே உன்னிப்பாக கவனிச்சுகிட்டு இருக்கு. அதோட திமுகவின் ஊழல்களை முன்வைத்து மட்டுமே பிரசாரம் செஞ்சா நம்மால ஜெயிக்க முடியாது. அதனால வேற வியூகம் ஏதாவது இருந்தா சொல்லுங்க என்றாராம்.

அப்போது, அதிமுகவிடம் இந்த முறை கூடுதலான தொகுதிகளை வாங்கி நம்ம பலத்தைக் காட்டனும் என்கிற குரலும் வந்ததாம். விடுவாரா ‘சாணக்யர்’ அமித்ஷா? ‘கூடுதலாக இடங்கள் வாங்கிட்டோம் என சொல்வது ஒன்னும் பலமில்லை. குறைவான தொகுதிகளை வாங்கினாலும் அத்தனை இடத்திலும் ஜெயிக்கிற வழியைப் பார்க்கனும். அதுதான் பலம் என கிளாஸ் எடுத்துவிட்டாராம்.

இப்படி பாஜகவினர் வியூகம், யோசனை என்ற பெயரில் எந்த கருத்தை முன்வைத்தாலும், பட் படாரென பதிலடி தந்தபடியே அமித்ஷா இந்தக் கூட்டத்தை நடத்தி முடிக்க, என்னங்க ஜி, நம்ம ஜி இப்படி பேசி வாயடைக்க வைக்கிறாரு? அவரு வேற என்னமோ ஒரு கணக்குப் போட்டு காய்நகர்த்துறாரோ? என காதைக் கடித்தபடியே நகர்ந்தனராம்.

ஆனால் இதன் பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுகவை ஊழல் கட்சி என கடுமையாக விமர்சித்துப் பேசிய அமித்ஷா, தமிழ்நாட்டில் 2026-ல் பாஜக -அதிமுக கூட்டணி ஆட்சிதான் அமையும் என ஆவேசமாகப் பேசினார்.

அமித்ஷாவின் இந்த பேச்சு, அதிமுகவினரை ரொம்பவே கொதிக்க வைத்துவிட்டதாம். தமிழ்நாட்டில் அதிமுகவின் ஆட்சிதான். கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது; அமித்ஷா எப்போதும் அப்படி சொல்லவே இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சீரியசாக பேசிக் கொண்டிருக்க, அமித்ஷா இப்படி பேசிவிட்டாரே என்பதுதான் அந்த கொந்தளிப்புக்குக் காரணமாம்.

இன்னும் சில அதிமுகவினரோ, ஆஹா.. இதுதான் சரியான சான்ஸ்.. பாஜக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் நம்ம கழன்று கொள்வதற்கான வாய்ப்பை அமித்ஷாவே தந்துவிட்டாரே என்கிற குதூகுலத்தையும் பார்க்க முடிகிறதே என டைப் செய்தபடியே Sent பட்டனைத் தட்டிவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப். madurai meeting amit shah reaction

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share