வைஃபை ஆன் செய்ததும், ”ஆடுகளம்னா இப்படி இருக்கனும்யா” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னப்பா கிரிக்கெட் விவகாரமா?
நமக்கு எதுக்குய்யா கிரிக்கெட்? நம்ம அரசியல் களமே அப்படித்தான் கணிக்கவே முடியாத ஆட்டமா இருக்கே..

என்ன விவகாரமாம்?
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகனை டெல்லிக்கு சிபிஐ டிச.29-ந் தேதி வர சொல்லி இருக்குன்னு நாமதான் முதல்ல சொன்னோம்.. இந்த விவகாரம்தான் இப்ப ரொம்ப பரபரப்பா பேசப்படுது..
டெல்லிக்கு தவெக டீம் போகுதா இல்லையா?
தவெக டீமைப் பொறுத்தவரை டெல்லி போறதுன்னு உறுதியா இருக்காங்க..
தவெகவினருடன் கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம்ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணனையும் ஆஜராக சொல்லி சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கு..
தவெக தரப்புல நாம விசாரிப்ப, “சிபிஐ எந்த இடத்துக்கு விசாரணைக்கு கூப்பிட்டாலும் எங்களுக்கு என்ன? என்னதான் கேட்கிறாங்கன்னு பார்ப்போம்னு சொல்லித்தான் புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேரும் டெல்லிக்கு போய் சிபிஐ முன் ஆஜராக போறாங்க..
தளபதியோட ’ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸுக்காக மலேசியா போயிருக்கும் புஸ்ஸி ஆனந்தும் ஆதவ் அர்ஜூனாவும் அங்கிருந்தே டெல்லிக்கு நேரா போறாங்க..
இந்த விசாரணை நடக்கப் போற டிசம்பர் 29-ந் தேதியன்னைக்கு டெல்லியில சிபிஐ ஹெட் ஆபீஸ் முன்னாடி எங்க கட்சி நிர்வாகிகள் கூடி மாஸ் காண்பிக்க போறாங்க.. சென்னையில் இருந்து ’கட்டளை’ எல்லாம் பறந்துருச்சு
எங்களைப் பொறுத்தவரைக்கும் ஏனோ தானோன்னு இந்த விசாரணைக்கு போகாம ரொம்பவே ‘ஸ்டிராங்கான’ ஆதாரங்களுடன் போகப் போறோம்…

அதுல, விஜய் லேட்டா வந்ததுதான் 41 பேர் பலியாக காரணம்னு திமுக அரசு சொல்லுது இல்லையா? இதை மறுக்கிறதுக்கு ஆதாரமா, கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையாவோட ‘வாய்ஸ் மெசேஜ்’ எங்ககிட்ட இருக்குது
அந்த வாய்ஸ் மெசேஜில், ”வேலுசாமிபுரம் ஸ்பாட்டுக்கு விஜய் பொறுமையா வந்தா போதும்.. அந்த ஸ்பாட்டுக்கு 15 நிமிஷம் லேட்டா வாங்கன்னு” ஜோஷ் தங்கையா சொல்லி இருக்கிறார்..
இதே மாதிரி கரூர் கலெக்டர் தங்கவேலுவும், சம்பவம் நடந்த உடனே விஜய்யை உடனே கரூரை விட்டு வெளியேற சொன்னதுக்கும் ஆதாரம் வெச்சிருக்கோம்..

இப்படி மொத்தமா 43 டாக்குமெண்ட்ஸை எங்க இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் கலெக்ட் பண்ணி கைவசம் வெச்சிருக்காரு.. அதை அப்படியே சிபிஐகிட்ட கொடுக்கப் போறோம்.. எங்க கட்சியில இப்ப சேர்ந்த சீனியர் லாயர் சத்தியகுமாரும் எங்க டீமுக்கு ஹெல்ப் செஞ்சுகிட்டு இருக்காரு ”ன்னு சொல்றாங்கப்பா..

ஓஹோ.. டெல்லி போற தவெக டீமுக்கு யாரு சப்போர்ட்டாம்?
அதுக்குதான் ‘ஆடுகளம் கணிக்கவே முடியாததா இருக்குதே’ன்னு சொன்னேன்..
டெல்லி போற தவெக டீமுக்கு ‘எல்லா வகையிலும்’ உதவி செய்ய ரெடியா இருப்பவர் பெயர் கேபி பைஜூ.. இந்த பேரை எங்கோ கேட்ட மாதிரி இருக்கா?
இந்த பைஜூ வேறு யாருமில்ல.. ராகுல் காந்தியின் மிக முக்கியமான ஆலோசகர்.. ராகுல் காந்தியின் பாதுகாப்புக்கான அதிகாரியாக (SPG) இருந்தவரு.. சில வருஷத்துக்கு முன்னாடி அந்த வேலையை விட்டு ராகுல் காந்தியுடன் ஐக்கியமாகிட்டார்..

இப்பவும் ராகுல் காந்தி பாதுகாப்பு விவகாரங்களை பார்த்துக்கிறவர் பைஜூதான்.. ராகுலின் பிரசார திட்டங்களுக்கு பொறுப்பானவரும் அவருதான்.. பாரத் ஜோடோ யாத்திரையப்ப, அஸ்ஸாமில் பிரச்சனையாச்சு.. அப்பவும் பைஜூ பேரு ரொம்பவே அடிபட்டுச்சு.. ராகுல் காந்தியின் ‘சர்க்கிளில்’ ரொம்பவே முக்கியமானவர்.
இந்த பைஜூ பத்தி இன்னொரு தகவலும் இருக்கு.,.
கரூரில 41 பேர் இறந்தப்ப விஜய் ரொம்பவே அப்செட்டாகி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தாரு இல்லையா? அப்ப விஜய்யை போனில் கூப்பிட்டு பேசி ஆறுதல் சொன்ன ராகுல் காந்தி.. அதே கையோட பைஜூவையும் சென்னைக்கு அனுப்பி வைச்சாரு..
சென்னையில 3 நாட்கள் தங்கியிருந்த பைஜூ, விஜய்யை சந்திச்சு ஆறுதல் சொல்லிகிட்டு இருந்தாரு.. எல்லாத்தையும் ‘ராகுல்ஜி’ பார்த்துக்குவாருன்னு விஜய்க்கு உறுதியான நம்பிக்கை கொடுத்தவரும் சாட்சாத் இந்த கேபி பைஜூதான்…
அந்த பைஜூதான் இப்பவும் டெல்லி போகிற தவெக டீமுக்கு ‘உதவிக் கரம்’ நீட்ட ‘வெயிட்டிங்காம்’.. ’கூட்டி கழிச்சு ’பார்த்தா எல்லா கணக்கும் ஒன்னு சேருகிற இடம் எலக்ஷன்தான்யா.. என்றபடியே செண்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் அப்.
