டிஜிட்டல் திண்ணை: கண்டுகொள்ளாத அண்ணாமலை… நயினாரின் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஆபத்தா?

Published On:

| By Selvam

வைஃபை ஆன் செய்ததும், தேர்தல் பரப்புரை காலத்தில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்பானவர்களிடம் விசாரணை நடத்திய செய்தி இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தோடு பயணித்துக் கொண்டிருந்த 3 பேரை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றிருந்தபோது பிடித்தனர் தேர்தல் பறக்கும் படையினரும், தாம்பரம் போலீசாரும். தொடர் விசாரணையில் பணத்தை எடுத்து வந்த மூன்று பேரில் ஒருவர் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு போன் பேசியதும் கோவர்த்தன் டிரைவரிடம் போன் பேசியதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

இதற்கிடையே அந்த நான்கு கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்த தமிழ்நாடு பாஜகவின் தொழில் பிரிவு தலைவர் கோவர்தனிடமும் போலீஸார் விசாரித்து சில தகவல்களைப் பெற்றனர். இந்த நிலையில் வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் மாற்றப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தாம்பரம் போலீசார் சிபிஐசிடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

நயினார் நாகேந்திரனும், பாஜகவின் மாநில பொருளாளர் சேகரும் கோவர்த்தனிடம், ‘நீங்க பிசினஸ் பண்றவர்தானே…இது உங்க பிசினஸுக்கான பணம்னு கணக்கு காட்டுங்கள். மத்ததை பாத்துக்கலாம்’ என்று கேட்டுள்ளனர்.

அப்போது கோவர்த்தன், ‘நான் பெட்ரோல் பங்க் போனாலே கார்டை ஸ்வைப் பண்ணிதான் பெட்ரோல் போடுவேன். நான்கு கோடி ரூபாய் ரொக்கத்துக்கு என்னால கணக்கு காட்ட முடியாது’ என சொல்லியிருக்கிறார்.

இந்த பின்னணியில் விரைவில் சிபிசிஐடி விசாரணையில் ஆஜராகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நயினார் இதுகுறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது கோவர்தன் சொல்லியது பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நயினாருக்கு  வேண்டப்பட்ட சிலர், ‘ அவங்ககிட்ட ஏன் கேட்கணும்? நீங்கதான் அகில இந்திய அளவுல பிசினஸ் பண்றீங்களே… அது உங்க பிசினஸுக்காக எடுத்துவந்த பணம்னு சொல்லி கணக்கு காட்டினா இந்த விவகாரத்தை ஈசியா முடிச்சுடலாமே… ஏன் இவ்வளவு தூரம் சிக்கலாக்கணும்?’ என்று யோசனை சொல்லியுள்ளனர்.

இதுபற்றி யோசித்த நயினார் நாகேந்திரன் உடனடியாக தனது வழக்கறிஞர்களிடம் ஆலோசித்தார். அதற்கு வழக்கறிஞர்கள், ‘பணம் கைப்பற்றப்பட்டது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலகட்டம். இந்த நிலையில் அந்த பணம் என்னுடையதுதான், எனது பிசினஸுக்காக கொண்டுவரப்பட்ட பணம் என்று நீங்கள் சொல்லிவிட்டால் அது அரசியல் ரீதியாகவும் உங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, சட்ட ரீதியாக இப்போது நீங்கள் வகித்து வரும் எம்.எல்.ஏ. பதவிக்கே வேட்டு வைத்துவிடும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது 4 கோடி ரூபாயை எடுத்துச் சென்றால் அதை வைத்தே சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உங்களது பதவியை தகுதி இழப்பு செய்துவிட சிலர் முயற்சிக்கலாம், அதில் வெற்றியும் அடையலாம்.  அதனால் நாம்  அப்படியெல்லாம் யோசிக்கவே வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலையை ஏற்கனவே கோவர்தனும், நயினாரும் தொடர்புகொண்டிருக்கிறார்கள். ‘அண்ணா… ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு பிறகு அதை பத்தி பேசிக்கலாம்ணா’ என்று மெசேஜ் அனுப்பினாராம் அண்ணாமலை. ஆனால் முதல் கட்டத் தேர்தல் முடிந்து, அடுத்தடுத்த கட்ட தேர்தல்களும் முடிந்துவிட்ட நிலையில் அண்ணாமலையிடம் இருந்து இதுகுறித்து எந்த பதிலோ, ஆலோசனையோ கிடைக்கவில்லை.

இதனால் சிபிசிஐடி விசாரணையை எதிர்கொண்டிருக்கக் கூடிய நயினார் நாகேந்திரன் தொடர் சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறார்” என்ற மெசேக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா தீபக் சஹார்?

திருவிழா தகராறு… தீவட்டிப்பட்டியில் நடந்தது என்ன? எஸ்.பி விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share