வைஃபை ஆன் செய்ததும், ‘டெல்லி ரொம்பவே பரபரப்பாகிடுச்சே’ என வாசித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
துணை ஜனாதிபதி தேர்தல் பரபரப்பா?
ஆமாம்.. பாஜக கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அப்போது முதலே எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’ வேட்பாளர் யாராக இருக்கும்? என்பதுதான் கவனிக்கப்பட்டு வந்தது.
இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலில் திருச்சி சிவா இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலவின. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானி- சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பெயர் பலமாக அடிபட்டது. தற்போது ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிகம் அறியப்படாத சுதர்சன் ரெட்டி எப்படி தேர்வானாராம்?
இதுபற்றி நாம் விசாரித்த போது, பாஜகவுக்கு டஃப் பைட் கொடுக்க சி.பி.ராதாகிருஷ்ணனின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரையை நிறுத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தவர் சிஎம் ஸ்டாலின். தமிழரான சிபிஆருக்கு திமுக வாக்களிக்க வேண்டும் என்ற நெருக்கடியை தவிர்ப்பதற்காக இப்படி ஒரு மூவ் மேற்கொண்டாராம் ஸ்டாலின். இதனையடுத்து இந்தியா கூட்டணி தலைவர்களிடம், மயில்சாமி அண்ணாதுரையை வேட்பாளராக அறிவிப்பதற்காக திமுக எம்பிக்கள் டீம் லாபி செய்திருக்கிறது.

திமுகவின் இந்த முயற்சியை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்தவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. “பாஜக வேட்பாளர், நம்ம வேட்பாளர் இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தால் சரியாக வராது.. பிற மாநில எம்பிக்களின் வாக்குகள் கிடைக்காமல் போகும்.. அதனால் மகாத்மா காந்தி குடும்பத்தில் ஒருவர் என்பது போல பொதுவான ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம்” என சொல்லி இருக்கிறார் மமதா.
மயில்சாமி அண்ணாதுரையின் பெயரை மமதா நிராகரித்ததில் திமுகவுக்கு அப்ட்செட்தான்.
இருந்தாலும் ‘இந்தியா கூட்டணி’ கூட்டத்தின் இறுதி முடிவுக்காக காத்திருந்தது திமுக.
இப்படி திமுக ஒரு பக்கம் லாபி செய்து கொண்டிருக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சைலன்ட்டாக, ஆந்திராவை சேர்ந்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கான லாபியை ‘கச்சிதமாக’ செய்து முடித்திருந்தார்.

ஆர்.எஸ்.எஸ். காரர் சி.பி. ராதாகிருஷ்ணனா? அரசியல் சாசன பாதுகாவலர் சுதர்சன் ரெட்டியா? என்ற முழக்கத்தை முன்வைத்தால் ஒர்க் அவுட் ஆகும் என்று சொல்லியே ‘சுதர்சன் ரெட்டி’க்கான ஆதரவை பெற்றுவிட்டாராம் கார்கே. இது கை கொடுக்க, சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார்.
இதனால்தான் கனிமொழி. ரவிக்குமார் உள்ளிட்ட ‘இந்தியா கூட்டணி’ எம்பிக்கள் ஜனாதிபதி தேர்தல் ஒரு தத்துவார்த்த – கருத்தியல் போட்டி என பிரசாரத்தை தொடங்கி வைத்துள்ளனர்.. இந்த பிரசாரம் எவ்வளவு தூரம் கை கொடுக்கும் என்பதே அரசியல் வட்டாரங்களின் எதிர்பார்ப்பு என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
