டிஜிட்டல் திண்ணை: பாஜகவிடம் சிக்கியது எப்படி? ராஜ்யசபா தேர்தலில் செங்கோட்டையன் ஓட்டு யாருக்கு?

Published On:

| By Aara

digital thinnai how sengottaiyan set to be target of bjp

வைஃபை ஆன் செய்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விவகாரம் தொடர்பான தொலைக்காட்சி செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. digital thinnai how sengottaiyan set to be target of bjp

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“அதிமுக முன்னாள் அமைச்சர் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் செங்கோட்டையனுக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

மார்ச் 15ஆம் தேதி, வலதுசாரி ஆதரவாளராக அறியப்பட்ட பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் சேனல் ஆறாவது ஆண்டு விழாவில் பேசிய செங்கோட்டையன், தற்போதைய அதிமுகவின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிக்காமலும் பேசினார்.

மேலும் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து அவர் அதிமுக கொறடாவின் உத்தரவுக்கு மாறாகவும் நடந்து வருகிறார்.

நேற்று சாணக்யா விழாவில் கலந்து கொண்ட செங்கோட்டையனை பாஜக பிரமுகர்கள் பலரும் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த நம்பிக்கையில் தான் அவரும் தன் உரையை முடிக்கும் போது, ‘நான் வேடிக்கை மனிதரைப் போலே வீழமாட்டேன்’ என்று பேசினார். அப்படி என்றால் நான் ஓபிஎஸ்ஐ போல இல்லை என்னுடைய அணுகுமுறை வேறு மாதிரி இருக்கும் என்று அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தான் பேசினார் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.

எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் என்னதான் பிரச்சனை? செங்கோட்டையன் பாஜகவின் வலையில் விழுந்தது எப்படி…  என்பது பற்றி எல்லாம் ஈரோடு முதல் சென்னை வரை விசாரித்த போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

ஈரோடு அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் செங்கோட்டையன். எம்ஜிஆர் ஜெயலலிதா என அதிமுக சாம்ராஜ்யங்களின் தளபதியாக இருந்தவர்.

அப்போதே சீனியர் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினரான வி கே சின்னச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் ஆகாது. இருவருக்கும் இடையே ஈரோடு அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகம். இந்த நிலையில் தான் முன்னாள் எம்.பி.யான வி.கே சின்னச்சாமி 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாத இறுதியில் அதிமுகவின் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில் செங்கோட்டையனின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த இருவர் இடம் பெற்றிருந்தனர். அந்தப் பெயர்கள் செங்கோட்டையனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

செங்கோட்டையனின் பழைய எதிரியான வி.கே. சின்னசாமியின் மகன் சிவக்குமார் மற்றும் அந்தியூர் முன்னாள் எம்எல்ஏ இ.எம்.ஆர். ராஜா ஆகிய இருவருக்கும் எடப்பாடி பழனிசாமி பதவி கொடுத்தது செங்கோட்டையனுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

கடந்த 2021 தேர்தலில்  அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் ஆயிரத்து சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்று போனதற்கு காரணம் ராஜாவின் உள்ளடி வேலைதான் என செங்கோட்டையன் எடப்பாடியிடம் புகார் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க சொன்னார்.

இப்படிப்பட்ட பின்னணியில்தான் செங்கோட்டையனுக்கு பிடிக்காத இந்த இருவரையும் செங்கோட்டையன் மாவட்டத்திற்குள் மாநில நிர்வாகிகளாக எடப்பாடி பழனிச்சாமி நியமித்தார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் கே சி கருப்பணன் சிபாரிசில்தான் தனது மாவட்டத்திற்குள் இவ்வாறு எடப்பாடி விளையாடியிருக்கிறார் என கடும் கோபம் கொண்டார் செங்கோட்டையன்.

ஜனவரி இறுதி வாரத்தில் செங்கோட்டையனுக்கு ஏற்பட்ட இந்த கோபம்தான் பிப்ரவரி 9ஆம் தேதி அவிநாசி அத்திக்கடவு திட்ட பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க காரணம். ஆனால் அதை வெளியே சொல்லாமல் எம்ஜிஆர் ஜெயலலிதா படம் அழைப்பிதழில் போடவில்லை என்று ஒரு காரணத்தை சொல்லி எடப்பாடிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.

இதன் பிறகு தொடர்ந்து செங்கோட்டையன் சலசலப்பாக பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையனுக்கு மிக நெருக்கமான மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ், ’சாணக்யாவின் ஆறாவது ஆண்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்’ என ஒரு வேண்டுகோளை வைத்தார். அதை செங்கோட்டையனும் அப்போதைய சூழ்நிலையில் எடப்பாடிக்கு ஒரு செக்  வைத்தது மாதிரி இருக்கும் என ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையே…. செங்கோட்டையன் எடப்பாடி உடன் பெரிய மனக்கசப்பில் இருப்பதை அறிந்த சசிகலா, செங்கோட்டையனுடன் பேசினார். 

‘எம்ஜிஆர் காலத்து சீனியர் உங்களுக்கே இந்த கதியா? 2017 இல் உங்களைத்தான் நான் முதலமைச்சராக பதவி ஏற்குமாறு சொன்னேன். ஆனால் அப்போது உங்களிடம் அதற்கான பொருளாதார வசதி இல்லை என்று மறுத்து விட்டீர்கள். அன்று நீங்கள் அந்த பொறுப்பை ஏற்றிருந்தால் இவ்வளவு சிக்கல் இன்று ஏற்பட்டிருக்காது.

இப்போதும் ஒன்னும் கெட்டுப் போகவில்லை… எடப்பாடிக்கு எதிராக எம்ஜிஆர் காலத்து சீனியரான நீங்கள் குரல் கொடுத்தால் அது வலிமையானதாக இருக்கும். மீண்டும் அதிமுக ஆட்சி வரவேண்டும் என்றால் நமக்கு பாஜகவின் தயவு தேவை. ஆனால் அவருக்கு வேண்டும்போது பாஜகவை பயன்படுத்திக் கொண்டு இப்போது வேண்டாம் என்கிறார்.

பாஜகவினர் என்னிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எடப்பாடிக்கு எதிராக நீங்கள் குரல் கொடுங்கள். அதன் பிறகு எல்லாம் நல்லதாகவே நடக்கும்’ என்று செங்கோட்டையனிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் தனக்கு ஈரோடு மாவட்டத்தில் செக் வைத்த எடப்பாடிக்கு எதிராக மாநில அளவில் செக் வைப்பதற்கு இந்த விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டார் செங்கோட்டையன்.

மார்ச் ஐந்தாம் தேதி கோபியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக சிலர் புகார் தெரிவித்தார்கள். அவர்கள் இ.எம் ஆர். ராஜாவின் ஆட்கள் என அந்த கூட்டத்திலேயே செங்கோட்டையன் தெரிவித்தார். தனக்கு எதிரானவர்களை தன்னுடைய மாவட்டத்தில் மாநில நிர்வாகிகளாக நியமித்து தனக்கு எதிராக அரசியல் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி என்ற அதிருப்தியில்தான் இதனை சட்டமன்றம் வரை வெளிக்காட்டி இருக்கிறார் செங்கோட்டையன்.

பாஜகவின் கொள்கைகளை ஆதரித்தும் மோடியை ஆதரித்தும் செங்கோட்டையன் பேசிய நிலையில் அவரைப் பற்றி எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம் இன்று ஆலோசித்திருக்கிறார்.

அப்போது, ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2023 இல் நடந்தபோது அதற்கு அதிமுகவின் பொறுப்பாளராக இருந்தவர் செங்கோட்டையன் தான். அப்போது தேர்தல் பேனரில் மோடி படத்தையே வைக்க வேண்டாம் என்று சொன்னவர் தான் செங்கோட்டையன். இப்படிப்பட்ட செங்கோட்டையன் இன்று மோடியை பாராட்டுகிறார் என்றால் அவருடைய அரசியல் லாபத்துக்காக செய்கிறார்.

வருகிற ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் அதிமுகவின் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கும் முக்கியம். இந்த நிலையில் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்று சிலர் கோரிக்கை வைக்கிறார்கள். ராஜ்யசபா தேர்தல் வரை பொறுத்திருந்து பார்ப்போம். நாளை சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவரது நடவடிக்கை என்னவென்று பார்ப்போம்’  என்று எடப்பாடி வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share