வைஃபை ஆன் செய்ததும் ஏப்ரல் 11 ஆம் தேதி இரவு கோவை ஆவாரம்பாளையத்தில் இரவு 10 .40 மணிக்கு பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் செய்த விவகாரம் பற்றிய காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன,
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாட்டிலேயே கோவை தொகுதிதான் அதிக கவன ஈர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதற்குக் காரணம் அங்கே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதுதான். கவன ஈர்ப்பு என்பதைத் தாண்டி நேற்று இரவு முதல் பதற்றத்துக்கு உள்ளான தொகுதியாகவும் மாறத் தொடங்கியிருக்கிறது கோவை.
நேற்று (ஏப்ரல் 11) இரவு கோவை தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் தமிழக பாஜக தலைவரும் பாஜக வேட்பாளருமான அண்ணாமலை இரவு 10.40 மணிக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார் என்று திமுக, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சியினர் காவல்துறையிடமும், தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தனர். இதையறிந்த வேட்பாளர் அண்ணாமலை அங்கிருந்து தனது காரில் வேகமாக புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து பாஜகவினருக்கும் திமுக கூட்டணியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கை கலப்பும் ஏற்பட்டது. இதில் திமுக கூட்டணியினர் தாக்கப்பட்டனர்.
இதுபற்றி இன்று (ஏப்ரல் 12) செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், ‘தோல்வி பயத்தால் பாஜக வெளியூர் ஆட்களை கொண்டுவந்து இறக்குமதி செய்து பிரச்சினை செய்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. தோல்வி பயத்தால் வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
தேர்தல் ஆணையம், காவல்துறை இரண்டுமே நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். பாஜகவினர் ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டி அதிகாரத்தைக் கையிலெடுக்கிறார்கள்’ என்று கூறினார். இந்த விவகாரத்தில் திமுகவினரின் புகாரின் பேரில் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது. இன்று அண்ணாமலை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
திமுக வேட்பாளரின் இந்த கடுமையான புகார்கள், பதிலுக்கு அண்ணாமலையின் திமுக மீதான வார்த்தைத் தாக்குதல் ஆகியவை கோவையின் டென்ஷனை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.
அண்ணாமலை என்ற நபருக்காக இவ்வளவு தூரம் அதிகார வர்க்கம் செயல்படுகிறதா என்று விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்களில் பேசும்போது… அண்ணாமலை மோடியிடம் என்ன மாயம் போட்டாரோ, மந்திரம் .போட்டாரோ தெரியவில்லை. மோடியின் கையில், ஜெயிக்க வேண்டும் என்ற பட்டியலில் இருக்கும் முக்கிய தலைவர்களில் அண்ணாமலையின் பெயரும் இருக்கிறது.
அண்ணாமலை கோவையில் ஜெயிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங்கள், பாஜக ஆகியவற்றுக்கு மோடியே சிறப்பு உத்தரவிட்டிருக்கிறார். அண்ணாமலை மீது சிறப்பு கவனம் எடுத்துதான் பிப்ரவரி 27 ஆம் தேதி கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் அண்ணாமலையின் பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றார். மார்ச் 18 ஆம் தேதி மீண்டும் கோவை வந்து ரோடு ஷோ நடத்தினார். அதன் பின் ஏப்ரல் 11 ஆம் தேதி கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்தினார்.
இப்படி அண்ணாமலையையும், கோவையையும் மையமாக வைத்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என தொடர்ந்து வந்திருக்கிறார் மோடி. இதெல்லாம் வெளிப்படையாக ஜனநாயக ரீதியாக, தேர்தலை ஒட்டி நடந்திருக்கிற விஷயங்கள். இதையும் தாண்டிய சில முக்கியமான ஏற்பாடுகளை அண்ணாமலைக்காக கோவையில் மோடி செய்து வைத்திருக்கிறார். தொடர்ந்து செய்தும் வருகிறார்.
அண்ணாமலைக்காக அப்படி என்ன செய்கிறார் மோடி?
கோவையின் தொகுதியின் தேர்தல் பார்வையாளராக மார்ச் மாதம் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார் வினோத் ராவ். இவர் யார் என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
ஆந்திராவில் பிறந்த வினோத் ராவ், குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இன்னும் விசேஷம் என்னவென்றால் 2014 ஆம் ஆண்டு மோடி முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி, குஜராத்தின் வதோத்ரா ஆகிய இரு தொகுதிகளில் நின்றார். இரண்டிலும் வென்றார்.
மோடி போட்டியிட்ட வதோதரா தொகுதியின் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தி, மோடியிடம் வெற்றிச் சான்றிதழை வழங்கியவர்தான் இப்போது கோவை தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் வினோத் ராவ்.
குஜராத் முதலமைச்சராக இருக்கும்போதே மோடியால் பல முறை பாராட்டப்பட்டவர். மோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் வினோத் ராவ். வதோதரா கலெக்டராக இருந்து, பின் வதோத்ரா மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி இப்போது குஜராத் அரசின் ஆரம்பக் கல்வி மற்றும் இடை நிலைக் கல்வித் துறை செயலாளராக பணிபுரிகிறார்.
வதோத்ரா மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது… வதோதரா ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தை இடிக்க முடிவு செய்த மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு சென்றனர் குத்தகை தாரர்கள். அந்த வழக்கு நடந்துகொண்டிருந்தபோது, ’
சில நபர்களின் குறுகிய நலன்களுக்கு எதிராக, பெரிய பொது நலனைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தை தகுதியின் அடிப்படையில் தீர்க்க வேண்டும்” என்று நீதிபதி சுக்லாவுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியிருக்கிறார் வினோத் ராவ். இதை நீதிமன்றத்தில் தெரிவித்த நீதிபதி சுக்லா, ‘ஏன் வினோத் ராவ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து ஒரு வழக்கு குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அந்த விசாரணையை நடத்தும் நீதிபதிக்கு தனிப்பட்ட மெசேஜ் அனுப்புவது முறையற்ற செயல் என்பதை உணர்ந்துகொண்டேன். நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பியவர்தான் இந்த வினோத் ராவ். அதாவது யாரையும் எப்படியும் அணுகுகிறவர் என்பதுதான் இவர் மீதான மதிப்பீடாக ஐஏஎஸ் வட்டாரங்களில் இருக்கிறது.
மோடியின் சித்தாத்தங்களோடு ஒத்துப்போகிறவர் என்பதால் இவர் மீது மோடிக்கு தனி அபிமானம் உண்டு என்று ஐ.ஏ.எஸ்., வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட பின்னணி கொண்ட வினோத் ராவ் கோவை தொகுதி தேர்தல் பார்வையாளராக இருக்கிறார்.
கோவை கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமாக இருக்கிற கிராந்திகுமார் ஐ.ஏ.எஸ்,சும் ஆந்திராவைச் சேர்ந்தவர்தான். அண்ணாமலை நீதித்துறை சார்ந்த பணிகளுக்கான முத்திரைத் தாளில் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார், அதனால் அது செல்லாது என்று அதிமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தபோதும் அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்றவர் கிராந்தி குமார். இது அப்போதே சர்ச்சையானது.
நேற்று முன் தினம் (ஏப்ரல் 10) தேர்தல் பிரச்சாரத்துக்காக மேட்டுப் பாளையம் வந்தார் மோடி. அப்போது கோவை, நீலகிரி பாஜக சார்பில் அவரிடம் தேர்தல் பிரச்சாரத்துக்கான சில குறிப்புகளை முன்கூட்டியே கொடுத்திருந்தனர். இதையும் தாண்டி கோவை தொகுதி தேர்தல் பார்வையாளரான வினோத் ராவும் தன் தரப்பில் சில குறிப்புகளை மோடிக்கு கொடுத்திருக்கிறார். அதை கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மூலமாகவே திரட்டியிருக்கிறார் என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.
இப்படிப்பட்ட பின்னணியில்தான் அண்ணாமலை எப்படியாவது கோவை தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் மோடி.
ஒரு தொகுதியின் தேர்தலை நடத்துவதற்கும் அல்லது தள்ளி வைப்பதற்கும் அந்தத் தொகுதியின் ஜெனரல் அப்சர்வர் அதாவது பொது பார்வையாளர் கொடுக்கும் அறிக்கைதான் முக்கிய காரணி.
அதேநேரம் அண்ணாமலை தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘திமுக, அதிமுகவினர் இஷ்டம் போல செயல்பட முடியாது. அப்படி ஒரு வேளை அவர்கள் செயல்பட நேர்ந்தால் 2019 இல் வேலூருக்கு எப்படி தனியாக தேர்தல் நடந்ததோ அதேபோல இப்போது கோவைக்கு தனியாக தேர்தல் நடந்தாலும் நடக்கலாம் என்று சொல்லிவருகிறார் என்கிறார்கள் பாஜகவினர்
அண்ணாமலை வேட்பு மனு மீதான சர்ச்சை, நேற்று கோவையில் நடந்த சம்பவம், அதைத் தொடர்ந்து இன்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கொடுத்த பேட்டி, அண்ணாமலையின் கடுமையான திமுக தாக்குதல் இதையெல்லாம் பார்த்தால் தேர்தல் ஆணையர், தேர்தல் பார்வையாளர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் மீதான சந்தேகமும் அதிகரிக்கிறது என்கிறார்கள் கோவையின் உள் நிலவரம் அறிந்த அதிகாரிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறுவது காதில் பூ சுற்றும் கதை” : அண்ணாமலை
கள்ளக்குறிச்சி: மலையேறும் மலையரசன்… போராடும் குமரகுரு
ஈரம் ஸ்டைலில் அடுத்த படம்..! சப்தம் டீசர் எப்படி?
கோவையில் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்ற மறுப்பா?: பாமக மா.செ.விளக்கம்!