டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு… கூட்டணி ராக்கெட்டில் ஸ்டாலின்… எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சாத்தியமா?

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பு வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது
“கடந்த டிசம்பர் 14ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரான ஈ வி கே எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அடுத்த சில நாட்களிலேயே அந்த தொகுதியை காலியான தொகுதியாக சட்டமன்ற செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்தது.

இன்னமும் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் பொதுத் தேர்தலுக்கு அவகாசம் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்த தேர்தல் ஆணையம், இன்று ஜனவரி 7ஆம் தேதி டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்போடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது.

பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு, பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இடையில் பொங்கல் பண்டிகை அன்று வேட்பு மனு தாக்கல் இருக்காது என மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். எனவே கட்சிகளுக்கு குறுகிய கால அவகாசமே இந்த இடைத்தேர்தலில் இருக்கிறது.

திமுக கூட்டணியை பொறுத்தவரை இந்த தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற, காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பை மீண்டும் வழங்குவது என்பதுதான் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினுடைய எண்ணம். அதே நேரம், ’ஈ வி கே எஸ் இளங்கோவன் அளவுக்கு வலிமையான வேட்பாளர்கள் இப்போது காங்கிரஸ் கட்சியிடம் இங்கே இல்லை. எனவே இடைத்தேர்தலில் மிகப்பெரிய செலவு செய்யப் போகிற திமுகவே இந்த தொகுதியில் காங்கிரஸின் சம்மதத்தை பெற்று போட்டியிடலாம்’ என திமுகவின் இளைஞர் அணி நிர்வாகிகள் உதயநிதியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

கூட்டணி கட்சித் தலைவர்களிடம் பேசி முதலமைச்சர் இது பற்றி முடிவு செய்வார் என இன்று துணை முதல்வர் உதயநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில்… இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மாநில தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஈரோடு கழக இடைத்தேர்தல் குறித்து தேசிய தலைமையிடமும் திமுக தலைமையிடமும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே திமுக கூட்டணி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட்டு விடும் என்கிறார்கள் அறிவாலயத்தில். ஈரோடு இடைத்தேர்தலில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பங்கு பெரிதாக இருக்குமென்று இப்போதே கரூர் வட்டாரத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

வருகிற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்றால் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வலிமையான கூட்டணி அமைய வேண்டும் என பாஜக, அதிமுக இரு தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. சமீபத்தில் டெல்லி சென்ற முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான டாக்டர் தமிழிசை அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து, ‘2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலிமையான கூட்டணி அமைத்தால் தான் திமுகவை தோற்கடிக்க முடியும். அதற்கேற்றவாறு தமிழக பாஜகவின் அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து வந்திருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோடு தொடர்ந்து இதுகுறித்து தொடர்பில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால் அதிமுக இப்போது வரை பாஜக உடனான தனது உறவு புதுப்பிக்கப்படுவது பற்றி வெளிப்படையாக பேசவில்லை.

அதே நேரம் அம்பேத்கர் சர்ச்சையில் தொடங்கி, தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் சர்ச்சை வரை அதிமுகவின் நிலைப்பாடு பாஜகவின் நிலைப்பாட்டுக்கு எதிர் நிலையில் இல்லை. இதனால்தான் இன்று, திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் கூட ஆளுநரையும், பாஜக -அதிமுக கள்ளக் கூட்டணியையும் கண்டித்து என்றே அறிவித்து நடத்தப்பட்டுள்ளது.

இப்படி ஒரு அரசியல் சூழலில் ஈரோட்டுக்கு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வி அக்கட்சி நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது. ஆளுங்கட்சியின் அதிகாரபலம் பணபலத்துடன் நடக்கும் இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை என்பதால் புறக்கணிப்பதாக அதிமுக அப்போது அறிவித்தது. அதே நிலைப்பாட்டை இப்போது எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அதிமுக தரப்பில். ஏற்கனவே இது குறித்து டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 11ஆம் தேதி இதுகுறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கான சாம்பிள் கூட்டணி அமைப்பதற்கான சந்தர்ப்பமாக இந்த இடைத்தேர்தலை எடப்பாடி கருதவில்லை.

இடைத்தேர்தல் இலக்கணப்படி ஆளுங்கட்சி தான் வெற்றி பெறப்போகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டு அதில் தோல்வி அடையும் பட்சத்தில், அது 2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கான கூட்டணிக்கு தலைமை தாங்குவதில் அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். மேலும் ஆளுங்கட்சி மிக தாராளமாக செலவு செய்யும் இந்த இடை தேர்தலில் அதிமுகவின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் ஏன் விரயம் செய்ய வேண்டும் என்றும் தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் ஏற்கனவே கேட்டு இருக்கிறார் எடப்பாடி. இன்று காலை சட்டமன்றத்தில் பேசிக் கொண்ட கொங்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட விக்கிரவாண்டி பாணியில் புறக்கணிக்க வாய்ப்பிருப்பதாகவே பேசிக் கொண்டிருந்தனர்.

அதே நேரம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டு, அதிமுக போட்டியிடவில்லை என்றால்… அதிமுகவின் மறைமுக ஆதரவு பாஜகவுக்கு என்று திமுக பிரச்சாரம் செய்யும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜனவரி 11ஆம் தேதி நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக ஒரு முடிவெடுக்கும் என்கிறார்கள் கட்சியின் நிர்வாகிகள்.

எனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்பதற்கான சாத்தியங்கள் இப்போது வரை தென்படவில்லை” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஞானசேகரனின் மாவுக்கட்டு : அதிர வைக்கும் புதிய தகவல்கள்!

ஈரோடு கிழக்கு… திமுகவுக்குள் பேசப்படும் குறிஞ்சி சிவகுமார்

கம்யூனிச தலைவர்களை சீண்டிய ஆ.ராசா… கண்டனம் தெரிவித்த பெ.சண்முகம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share