டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு வேட்பாளர்… ஸ்டாலினிடம்  உதயநிதி கேட்கும் ஒரே விஷயம்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றிய தலைவர்களின் கருத்துக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப்  தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஏற்கனவே தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்குக்கும், மேலிட பொறுப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் ஈரோடு திமுக நிர்வாகிகள் குறிப்பாக இளைஞரணி  நிர்வாகிகள்  இந்த முறை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுகவே  நிற்க வேண்டும் என்று இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

’ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை நிறுத்தினால், பெரும் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற முடியும். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிடுவதை விட உதயசூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர் போட்டியிட்டால் நமது கட்சியினரின் உழைப்பு இன்னும் அதிகமாக இருக்கும். வேகம் இன்னும் அதிகமாக இருக்கும்.

காங்கிரஸ் கட்சிக்கு நாம் எவ்வளவு செய்தாலும் நன்றியில்லை. அவர்களுக்காக நாம் பணத்தையும் உழைப்பையும் செலவு செய்து கடும்பாடுபட்டு வெற்றியை ஈட்டித் தருகிறோம். ஆனால், வெற்றி பெற்றவுடன் அவர்களுடைய அணுகுமுறை மாறிவிடுகிறது.

https://twitter.com/manickamtagore/status/1876862310469259405?t=xCo6gJYYagvD3v1MQoT7bw&s=08

விருதுநகர் தொகுதியில் எவ்வளவு போராடி மாணிக் தாகூரை ஜெயிக்க வைத்தோம். ஆனால், இன்று அவர் தனது  எக்ஸ் தளத்தில்,  ‘இது சரியா… மாண்புமிகு ஓம் பிர்லா அவர்களின் வழியில்’ என்று ஒரு பதிவிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு சட்டமன்ற நேரலையில் எதிர்க்கட்சியினர் விட்டுப் போவதை சுட்டிக் காட்டி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வழியில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செயல்படுவதாகக் கூறியுள்ளார்.

கூட்டணி விஷயத்தில் நாம் மிகவும் பெருந்தன்மையோடுதான் தொடர்ந்து கொண்டு வருகிறோம். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நேரடியாக திமுக வேட்பாளரே  போட்டியிட்டால்  திமுகவினர் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள். மற்ற அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க வைக்க முடியும். இதன் மூலம் கொங்கு  மண்டலத்தில் திமுக சட்டமன்ற பொதுத்  தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஈரோடு கிழக்கு வெற்றி நமக்கு ஒரு அச்சாரமாக அமையும்.

அதுவும் குறிப்பாக ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு பெண்ணை வேட்பாளராக நிறுத்தினால் இன்னமும் திமுகவுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்று உதயநிதியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.  

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் முத்துசாமி ஆகியோரிடமும் இந்த கோரிக்கையை திமுக நிர்வாகிகள் தலைமையிடம் வலியுறுத்துமாறு கேட்டு இருக்கிறார்கள்.

திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளரும் ஈரோடு எம்.பி.யுமான பிரகாஷ்  ஈரோடு கிழக்கில் திமுக நிற்க வேண்டும் என்று  துணை முதலமைச்சர் உதயநிதியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

 உதயநிதியும் இதில் இருக்கும் நியாயத்தையும் லாஜிக்கையும் உணர்ந்து திமுக தலைவரும் முதலமைச்சருமான  ஸ்டாலினிடம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது பற்றி தொண்டர்களின் நிர்வாகிகளின் உணர்வை கோரிக்கையாக வைத்திருக்கிறார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் தவிர வேறு யாராவது கட்சிக்காரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஈரோடு மாவட்ட நிர்வாகி மக்கள் ராஜன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் மயூரா  ஜெயக்குமார், முன்னாள் மொடக்குறிச்சி எம்எல்ஏ ஆர்.எம்.பழனிச்சாமி, மொடக்குறிச்சி காங்கிரஸ் புள்ளி கே.பி.முத்துக்குமார், 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருப்பூர் கோபிநாத் உள்ளிட்டோர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் ஆவதற்காக கடும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இவர்கள் டெல்லி வரைக்கும் சென்று வேட்பாளர் ஆவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள்.

சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக்குவது என்று ஒரு தரப்பு, அவர் அல்லாமல் வேட்பாளர் ஆவது என்று சிலரும்  என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதேநேரம் திமுகவிலும் ஈரோட்டிலிருந்து உதயநிதிக்கு தொடர் அழுத்தம் சென்றுகொண்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட்  கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

சீமான் வீட்டுக்கு செல்லும் கோவை ராமகிருஷ்ணன்… என்ன தான் பிரச்சனை?

ஆளுநர் உத்தரவு… அண்ணா பல்கலையில் அதிரடி மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share