டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்… எடப்பாடி முக்கிய முடிவு!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த வீடியோ காட்சி இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை உள்ளிட்ட விஷயங்கள் மின்னம்பலத்தில் தனி செய்தியாக வந்துள்ளது.

எடப்பாடியின் செய்தியாளர் சந்திப்பு இது சம்பந்தமானது என்றால்… சில நாட்களுக்கு முன் ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடியை சென்னையில் சந்தித்துள்ளனர்.

அப்போது அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருப்பதை சுட்டிக்காட்டி, ‘பூத் கமிட்டி உள்ளிட்ட பணிகளை அதிமுக தொடங்கி விடலாமா?’ என்று எடப்பாடியிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு எடப்பாடி, ‘கொஞ்சம் பொறுமையாக செயல்படுவோம். நான் சொன்னதும் வேலைகளை ஆரம்பிக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி பற்றி எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறார்.

அதாவது சில மாதங்களுக்கு முன்பு நடந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது. ஆளுங்கட்சியின் அதிகார பலம், பண பலம் ஆகியவற்றை கொண்டு இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்ற அடிப்படையில் இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று அறிவித்திருந்தார் எடப்பாடி.

இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் எடுத்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்து விடலாம் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அவர்களிடம் விசாரித்தபோது, ‘ விக்கிரவாண்டி இடைத் தேர்தல் சூழல்தான் இப்போதும் இருக்கிறது. அதிமுக அன்று இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதற்காக சொன்ன அந்தக் காரணிகள் அப்படியே இருக்கின்றன. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் திமுகவின் அனைத்து அமைச்சர்களும் அங்கே முகாமிடத் தான் போகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை பிரித்து எடுத்துக் கொண்டு தினம் தினம் மக்களை குளிப்பாட்டத்தான் போகிறார்கள். விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் அதிமுகவினரின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் ஏன் விரயமாக்க வேண்டும் என்ற கேள்வியும் எடப்பாடியிடம் இருக்கிறது.

அதையெல்லாம் விட முக்கிய காரணம்… ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நின்றாலும் நிச்சயம் தோல்வியடைய தான் போகிறது. அப்படி அதிமுக தோல்வி அடைந்தால், சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி என்பதற்கு அந்தத் தோல்வி, பெரும் பின்னடைவாக அமையும். கூட்டணி விவகாரத்தில் மட்டுமல்ல உட்கட்சிக்குள் கூட எடப்பாடிக்கு எதிரான விமர்சனங்கள் வலிமை ஆவதற்கு அந்த தோல்வி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

எனவே அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைவதற்கு ஏதுவாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை விக்கிரவாண்டி பாணியில் புறக்கணிப்பது என்ற எண்ணத்தில் இருக்கிறார் எடப்பாடி’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்’ என்கிற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து வாட்ஸ் அப் ஆஃப்லைன் போனது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் : எடப்பாடி

‘ஒரு சிறந்த மனிதர், உண்மையான நண்பர்’ : மன்மோகன் சிங் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share