வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பொதுக்குழு பற்றிய எடப்பாடியின் அறிவிப்பு இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 27 ஆம் தேதி அறிவித்திருக்கிறார். அதிமுகவின் பைலா அதாவது சட்ட விதிகளின்படி பொதுக்குழுக் கூட்டத்துக்கான அறிவிப்பு 15 நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட வேண்டும். அதை பூர்த்தி செய்யும் வகையில் அதற்கும் மூன்று நாட்கள் கூடுதலாகவே 18 நாள் அவகாசத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை அறிவித்திருக்கிறார் எடப்பாடி .
ஏற்கனவே ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவுடைய பொதுக் குழுக்கள் எடப்பாடி, பன்னீர் செல்வம் ஆகியோரின் பலத்தைக் காட்டும் போட்டிக் கூட்டங்களாகவே இருந்தன. மேலும் இரட்டைத் தலைமையாக இருந்ததை மாற்றி ஒற்றைத் தலைமையாக அறிவித்த பொதுக்குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை சென்றார் ஓபிஎஸ். ஆனாலும் எடப்பாடிக்கு சாதமாகவே நீதிமன்ற, தேர்தல் ஆணைய தீர்ப்புகள் அமைந்தன.
இந்த பின்னணியில்தான் கடந்த பொதுக்குழுக்களை போல அல்லாமல் இம்முறை சிறப்பு அழைப்பாளர்களுடன் கூடிய அதிமுகவின் வழக்கமான, விரிவான பொதுக்குழுவைக் கூட்டுகிறார் எடப்பாடி.
நவம்பர் 6 ஆம் தேதி நடந்த அதிமுக மாசெக்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ’இதுவரை நாம் கூட்டிய பொதுக்குழுக்களில் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க முடியாமல் போனது. விரைவில் கூட்டப்படும் பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்களோடு சிறப்பு அழைப்பாளர்களும் அழைக்கப்பட்டு பிரமமண்டமாக நடத்தப்படும்’ என்று பேசியிருந்தார். இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் பொதுக்குழு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சிறப்பு அழைப்பாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு மொத்தமாக ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ளும் விரிவான பிரம்மாண்டமான பொதுக்குழுவாக இருக்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
இந்நிலையில்தான் அதிமுக பொதுக்குழுவுக்காக தீர்மானம் தயாரிப்புக் குழு, வரவேற்பு குழு, உணவு உபசரிப்பு குழு உள்ளிட்ட ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பொதுக் குழுவில் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது பற்றி பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்ற தீர்மானமும் மத்திய பாஜக அரசு, மாநில திமுக அரசு இரண்டையும் கடுமையாக கண்டிக்கும் தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்கிறார்கள்.
இதுமட்டுமல்ல… அதிமுகவில் சமீப நாட்களாக கள ஆய்வுக் கூட்டங்கள் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகின்றன. இந்த கள ஆய்வுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், மாவட்ட மறு சீரமைப்பு தொடர்பாக நிர்வாகிகளின் கருத்துகள் ஆகியவை தொகுக்கப்பட்டு வரும் டிசம்பர் முதல் வாரத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் கள ஆய்வுக் குழுவினரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அதிமுகவில் மாவட்ட மறு சீரமைப்பு செய்யப்பட்டு மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவும் செயற்குழு, பொதுக்குழுவில் முக்கிய பொருளாக விவாதிக்கப்பட இருக்கிறது என்றும் அதிமுக நிர்வாகிகள் கூறுகிறார்கள். பொதுக் குழுவுக்குப் பின்னால் அதிமுகவில் மாசெக்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும், அதுவும் இளைஞர்களின் வாக்குகளை குறி வைக்கும் வகையில் அதிமுகவில் இளைஞர்களுக்கு அதிக பதவிகளை கொடுக்க எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார் என்றும் அதிமுக தலைமைக் கழக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய பாம்பன் ரயில் பாலத்தில் குறைபாடுகள் : ஆய்வுக்குழு அமைத்த மத்திய அரசு!
ட்விஸ்ட் கொடுத்த ஃபெங்கல் புயல் : வானிலை ஆய்வு மையம் அப்டேட்!