வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. digital thinnai : Edappadi sengottaiyan clash again
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.ஜிஆர். காலத்து சீனியருமான செங்கோட்டையன் சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கி வருகிறார். அதன் உச்சகட்டமாக இன்று சட்டமன்றத்திலேயே எடப்பாடியை புறக்கணித்திருக்கிறார் செங்கோட்டையன்.
அத்திக்கடவு – அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த மாதம் 9ஆம் தேதி பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ”விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை. எனவே எனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை” என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து சில நாட்கள் சலசலப்பை உருவாக்கும் வகையிலேயே பேசி வந்தார் செங்கோட்டையன், தான் பேசும்போது எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்வதைக் கூட அவர் தவிர்த்தார். அப்போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் எல்லாம் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஒரு மாதம் கழித்து மார்ச் 10 ஆம் தேதி கோயம்புத்தூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மகன் விஜய் விகாஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி வரும்போது அங்கே இருப்பதை கவனமாக தவிர்த்தார் செங்கோட்டையன்.
இந்ந நிலையில்தான் இன்று சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிப்பதை ஒட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 8.45 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடைபெறும் என அதிமுக கொறடாவான வேலுமணி அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை எடப்பாடி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகத்தின் 4 ஆம் நம்பர் கேட் வழியாக உள்ளே சென்றனர். அதன் அருகே இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குள் சென்றனர். அங்கே எடப்பாடி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத் தொடரின் போதும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கும் என்பது சீனியர் சட்டமன்ற உறுப்பினரான செங்கோட்டையன் அறியாதது அல்ல. ஆனாலும் அவர், கூட்டம் தொடங்கிய 8.45 மணிக்கு தான் தனது வீட்டில் இருந்தே சட்டமன்றத்துக்குப் புறப்பட்டார். அதாவது எடப்பாடி தலைமையில் நடக்கிற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்ற திட்டத்தோடுதான் அவர், கூட்டம் தொடங்கியதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே வீட்டில் இருந்து புறப்பட்டார்.
தலைமை செயலகத்துக்கு சென்றதும் முதல்வர் கார் நிறுத்தும் போர்டிகோ அருகே இருக்கும் மூன்றாம் நம்பர் கேட் வழியாக உள்ளே சென்றார் செங்கோட்டையன்.
முதலில் அந்த வழியாக ஓபிஎஸ் உள்ளே சென்றார். அவர் சபாநாயகர் அப்பாவு அறைக்கு சென்று அவரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு சட்டமன்றத்துக்கு சென்றார். அதைத் தொடர்ந்து செங்கோட்டையனும் சபாநாயகர் அப்பாவுவின் அறைக்கு சென்றார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. சபாநாயகரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு அதன் பின் செங்கோட்டையனும் சட்டமன்றத்துக்குள் சென்றார். இந்த நிலையில்தான் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு அதிமுக எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்துக்குள் வந்தார்கள்.
பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசிக்க ஆரம்பித்ததுமே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி எழுந்து, ’டாஸ்மாக் ஊழல் பற்றி அமலாக்கத் துறையின் அறிக்கைக்கு அரசின் பதில் என்ன? ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார். அதிமுக எம்.எல்.ஏ.க்களும் எழுந்து சத்தமிட்டனர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமாரும் எழுந்து, ’சபாநாயகர் மீது நான் கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இன்றே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார். ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்தார். எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைவரின் மைக்குகளும் ஆஃபில் இருந்தன.
எடப்பாடி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று பேசிக் கொண்டிருந்தபோது ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் அமைதியாக இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் உடல் நலக் குறைவால் இன்று சட்டமன்றத்துக்கு வரவில்லை.

செங்கோட்டையன் அமர்ந்திருப்பதை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர். சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார். அப்போது தன்னருகே இருக்கும் பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரியிடம் தான் கையில் வைத்திருந்த ஒரு ஃபைலைக் கொடுத்தார். செங்கோட்டையன் கொடுத்த ஃபைலை கையில் வைத்திருந்த பண்ணாரி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தபோது எடப்பாடியோடு சென்றுவிட்டார்.
ஆனால் செங்கோட்டையன் உடனடியாக வெளிநடப்பு செய்யவில்லை. சில நிமிடங்கள் கழித்து ஓபிஎஸ் வெளி நடப்பு செய்த நிலையில் அவர் பின்னாலேயே செங்கோட்டையனும் சென்றார். இந்நிலையில் ஃபைலை கையில் வைத்திருந்த பண்ணாரி அங்குமிங்கும் செங்கோட்டையனைத் தேடிக் கொண்டிருந்தார்.
வெளிநடப்புக்குப் பின் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குச் சென்று அமர்ந்து பட்ஜெட்டை கவனிக்க ஆரம்பித்தார். இதற்கிடையே ஓபிஎஸ்சும் செங்கோட்டையனும் எங்கே சென்றனர் என்பதை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் தேடித் தேடிப் பார்த்தனர். அதன் பின் செங்கோட்டையன் புறப்பட்டுவிட்டார் என்று எடப்பாடியிடம் சென்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சொன்னார்கள்.,
அவினாசி அத்திக் கடவு திட்ட பாராட்டு விழாவை முதலில் புறக்கணித்தார் செங்கோட்டையன். அதே போல வேலுமணி மகன் திருமண வரவேற்பிலும் எடப்பாடியை சந்திப்பதை தவிர்த்தார். இவை இரண்டும் கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளே தவிர, கட்சி நிகழ்ச்சிகள் அல்ல. ஆனால் இன்று செங்கோட்டையன் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கும் வரவில்லை. எடப்பாடி வெளிநடப்பு செய்தபோதும் அவரோடு சேர்ந்து வெளிநடப்பு செய்யவில்லை, தொடர்ந்து எடப்பாடியை அவர் தவிர்த்து வருகிறார்.
ஏற்கனவே ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்த ஒருங்கிணைந்த அதிமுகவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் செங்கோட்டையன். ‘நான் தெளிவாக இருக்கிறேன். தன்னலம் கருதாது, இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபடக்கூடியவன் நான். என்னை சோதிக்காதீர்கள். அதுதான் நான் விடுக்கும் வேண்டுகோள்’ என்று கடந்த மாதமே கூறியிருந்தார். இந்நிலையில் சட்டமன்றத்திலேயே எடப்பாடியை புறக்கணித்து, அவருக்கு எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார் செங்கோட்டையன்.
செங்கோட்டையனுக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்றும், அடுத்தடுத்து அதிமுகவில் எடப்பாடிக்கு சிக்கல் அதிகமாகும் என்றும் டிடிவி வட்டாரத்தில் அடித்துக் கூறுகிறார்கள்.
அதுபோலவே இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக ஏற்கனவே இருக்கிறது. திமுகவுக்கு எதிரான கட்சிகள் அது அதிமுகவாக இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வரவேண்டும். அது வித் பழனிசாமியா, வித்தவுட் பழனிசாமியா என்று தெரியாது. செங்கோட்டையன் அதிமுகவின் 90% மேலான தொண்டர்கள் நிர்வாகிகளின் மன ஓட்டத்தைத்தான் வெளிப்படுத்தி வருகிறார்’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் செங்கோட்டையனை மையமாக வைத்து அதிமுகவுக்குள் அதிரடி ஆக்ஷன் விரைவில் பலமாக வெடிக்கும் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.