வைஃபை ஆன் செய்ததும் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் அப்டேட்டுகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
”முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அரசுப் பணிகள் பற்றி அவ்வப்போது தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரிடம் ஸ்டாலின் கேட்டறிந்துகொள்கிறார்.
இந்நிலையில், திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் இன்று (செப்டம்பர் 1) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றிருக்கிறார். கட்சிக்குள்ளேயே பலரும் அறியாத நிலையில் துரைமுருகனின் இந்த சிங்கப்பூர் பயணம் அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அமெரிக்காவில் இருக்கும்போது… அவருக்கு அடுத்த நிலையில் இருக்கிற துரைமுருகன் தமிழ்நாட்டில் இல்லாமல் ஏன் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், முதல்வர் அமெரிக்கா சென்று சேர்வதற்குள் துரைமுருகனுக்கு நெருக்கமானவரான எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி, 908 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த நிலையில் துரைமுருகனின் திடீர் சிங்கப்பூர் பயணம் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து துரைமுருகன் வட்டாரத்தில் பேசியபோது, ‘அமைச்சர் துரைமுருகன் சிங்கப்பூர் பயணம் என்பது திடீர் பயணம் அல்ல, அது ஏற்கனவே திட்டமிட்டப்பட்டதுதான். கடந்த ஆகஸ்டு 19 ஆம் தேதியே துரைமுருகன் சிங்கப்பூர் செல்வதாக இருந்தது.
அவருக்கு நெருக்கமான இதய நிபுணர் டாக்டர் ஜெயராமன் சிங்கப்பூரில் இருக்கிறார். ஏற்கனவே அவரிடம் இதய செக்கப் செய்துள்ளார் துரைமுருகன். சென்னையில் அப்பலோ, ரேலா மருத்துவமனைகளுக்கு ரெகுலராக சென்று செக்கப் செய்து வருபவர் துரைமுருகன். சின்ன பிரச்சினை என்றால் கூட உடனடியாக டாக்டரிடம் செல்லக் கூடிய இயல்புடையவர் துரைமுருகன்.
இந்த நிலையில்தான் வருடத்துக்கு ஒருமுறை சிங்கப்பூருக்கு வந்து முழு உடல்நிலை செக்கப் செய்துகொள்ளுமாறு டாக்டர் ஜெயராமன், துரைமுருகனை வற்புறுத்தியுள்ளார். அந்த அடிப்படையில் கடந்த 19 ஆம் தேதி சிங்கப்பூர் செல்வதாக ஏற்கனவே திட்டமிட்டார் துரைமுருகன்.
ஆனால், கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா போன்ற முக்கியமான நிகழ்ச்சிகள் இருந்ததால் அவரால் திட்டமிட்டபடி செல்ல முடியவில்லை. முதல்வர் ஸ்டாலினிடமும் தனது சிங்கப்பூர் பயணம் பற்றி பேசியிருக்கிறார் துரைமுருகன். அவரும், ‘நான் அமெரிக்கா செல்வதற்குள் நீங்க போயிட்டு வந்துடுங்க’ என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் துரைமுருகனின் சிங்கப்பூர் பயணம் தள்ளிப் போனது.
இடையில் அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு. அதற்கு துரைமுருகனின் பதில் என்று சர்ச்சையாகிவிட்டது. அதனால் ஸ்டாலின் -துரைமுருகன் இடையே மனஸ்தாபம் ஆகிவிட்டது.
ஆகஸ்டு 26 ஆம் தேதி வேலூரில் விஐடி பல்கலைக் கழகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முரசொலி செல்வம், கனிமொழி உள்ளிட்டோருடன் கலந்துகொண்டார் துரைமுருகன்.
அன்று இரவே சென்னை வந்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். ரஜினிக்கு துரைமுருகன் கொடுத்திருந்த கடுமையான பதிலால், கோபமாக இருந்தார் ஸ்டாலின். அந்த நிலையில் ஸ்டாலினை சந்தித்த துரைமுருகன்… வேலூரில் செல்வம் சில விஷயங்களை சொன்னாரு என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அப்போது, ‘நீங்க முக்கியமான வெளிநாட்டுப் பயணமான அமெரிக்கா கெளம்புற நேரத்துல உங்க இதயத்துல ஒரு கரும்புள்ளி மாதிரி ரஜினி பத்தி நான் பேசின பேச்சு அமைஞ்சுடுச்சு. உங்க அப்பா ஸ்தானத்துல இருந்து சொல்றேன்… அப்படி நான் திட்டமிட்டு பேசல… அதுக்காக என்னை மன்னிச்சிடுங்க’ என்று ஸ்டாலினிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் துரைமுருகன்.
உடனே ஸ்டாலின் எழுந்து, ‘உங்களை நானும் என்னோட அப்பா ஸ்தானத்துலதான் வச்சிருக்கேன்’ என்று துரைமுருகனை கட்டித் தழுவியிருக்கிறார்.
அப்போது, ‘அமெரிக்காவுல போய் ரொம்ப அலையாதீங்க. உடம்பை பாத்துக்கங்க. நானும் ஹெல்த் செக்கப்புக்காக சிங்கப்பூர் போக வேண்டியிருக்கு. போயிட்டு வந்துடறேன்’ என்று துரைமுருகன் சொல்ல, அதற்கு ஸ்டாலினும் பாத்து போயிட்டு வாங்க என்று கூறியிருக்கிறார்,
இந்த பின்னணியில்தான் செப்டம்பர் 1 ஆம் தேதி காலை புறப்பட்டு சிங்கப்பூர் சென்றிருக்கிறார். செப்டம்பர் 4 ஆம் தேதிதான் துரைமுருகன் சென்னை திரும்புகிறார்.
துரைமுருகன் சிங்கப்பூர் செல்லும் இதே நாளில் இன்று திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியும் சிங்கப்பூரில்தான் இருக்கிறார். சிங்கப்பூரில் கலைஞர் என்ற நூல் வெளியீட்டு விழாவுக்காக கனிமொழி சிங்கப்பூர் சென்றுள்ளார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநரை சந்தித்தது ஏன்? – ஹெச்.ராஜா விளக்கம்!
“டைரக்டர் ரஞ்சித் எனக்கு வாலிபரின் நிர்வாண போட்டோ அனுப்பினாரா?” – ரேவதி சொல்லும் விளக்கம்