வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. digital thinnai – dmk sudden support to annamalai
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றப்பட இருக்கிறார் என்றும், அவருக்கு பதிலாக புதிய தலைவர் யார் என்றும் ஊடகங்களில் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
மார்ச் 25ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். மறுநாள் மார்ச் 26 செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, ’உள்துறை அமைச்சரிடம் அதிமுக -பாஜக கூட்டணி பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டு மக்கள் பிரச்சினைகளைப் பற்றிதான் பேசினோம்’ என்று தெரிவித்தார்.
ஆனால் மார்ச் 28ஆம் தேதி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை அழைத்து சந்தித்த அமித்ஷா, அதன் பிறகு டைம்ஸ் நவ் சம்மிட் நிகழ்ச்சியில், ’அதிமுக- பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவோம்’ என்று கூறினார்.
‘அதிமுகவோடு பாஜக கூட்டணி அமைத்தால் என்னுடைய மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்’ என முதன்முதலாக அண்ணாமலை கட்சி நிர்வாகிகளின் உள்ளரங்க கூட்டத்தில் பேசியதை முதன்முதலாக மின்னம்பலத்தில் வெளிப்படுத்தி இருந்தோம்.

இப்போது அந்த விஷயம் பூதாகரமாகி அதிமுகவோடு பாஜக கூட்டணி அமைத்தால் அண்ணாமலையை மாற்றிவிட்டு அதிமுகவுக்கு இணக்கமானவரே மாநிலத்தலைவராக நியமிக்கப்படுவார் என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.
அண்ணாமலையும் தான் மாற்றப்படுவேன் என்பதைத்தான் சூசகமாக செய்தியாளர்களிடம் கூறி வருகிறார்.
இந்த நிலையில் ’அண்ணாமலையை மாற்றக்கூடாது’, ’அண்ணாமலை தான் தமிழக பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார், அவர் மூன்று மாதம் லண்டன் சென்றபோது ஊடகங்களில் தமிழக பாஜக பற்றி எந்த பேச்சும் இல்லை. அவர் வந்த பிறகு தான் மீண்டும் பாஜகவை பற்றிய விவாதங்கள் நடந்தன. எனவே அண்ணாமலை தான் பாஜக தலைவராக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு சமூகவலைதள அக்கவுண்ட்களில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து அகற்றினால், அது தமிழக பாஜகவுக்கு பெரும் இழப்பாகும் என்றும் வீடியோக்கள், போட்டோக்கள் மூலமாக அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல்கள் சென்றுள்ளன. அப்போது வெளிநாடுகளில் இருந்து இத்தகைய பதிவுகள் இடுவோர் வழக்கமான அண்ணாமலை ஆர்மியை சேர்ந்தவர்களோ அல்லது அண்ணாமலையின் ஆதரவாளர்களோ இல்லை என்ற அதிர்ச்சி தகவல் டெல்லி பாஜக வட்டாரத்துக்கு கிடைத்துள்ளது.
அப்படி என்றால் அண்ணாமலைக்கு ஆதரவாக பதிவிடுபவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது.
இந்த விஷயத்தில் நேரடியாக சம்பந்தப்படாமல் திமுகவின் சில புள்ளிகள் அண்ணாமலைக்கு ஆதரவாக வெளிநாடுகளில் இருந்து சமூகவலைத்தளங்களில் பதிவுகளை இடுவதற்கு ஊக்குவிக்கின்றனர் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்.
இதை திமுக புள்ளிகள் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டபோது, ‘அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால்… இன்னும் பல ஸ்டண்டுகள் அடிப்பார். அவர் அதிரடியாக பேசுவார். அதன் மூலம் திமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று நினைப்பவர்கள் கூட திமுகவுக்கு ஓட்டு போட முடிவு செய்வார்கள்.
எப்படி ஆளுநர் ரவி தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும், அப்போதுதான் எங்களது தொண்டர்கள் எழுச்சியாக இருப்பார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்கமாக மேடையில் பேசினாரோ..
அதேபோல அண்ணாமலையும் மாநில தலைவராக நீடிப்பது தான் திமுகவுக்கு அரசியல் ரீதியான ஆதாயத்தை கொடுக்கும்’ என்கிறார்கள்.

மேலும் அவர்கள், ‘அண்ணாமலை எங்களுக்கு வேண்டும். எதிர்க்கட்சியான அதிமுக, திமுக அரசுக்கு எதிராக பெரிய அளவு போராட்டங்கள் நடத்தாமல் இருந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ’யார் அந்த சார்’ என்ற கேள்வியோடு திடீர் போராட்டத்தை அதிமுக நடத்தியது. இது இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது
திமுக தலைமை வரை அதிமுகவின் இந்த நகர்வால் அதிர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் தான் ஆபத்பாந்தவனாய் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு யார் அந்த சார் சர்ச்சையை தன்னை மையமாக வைத்து மடை மாற்றினார். அது திமுகவுக்கு மிகப்பெரிய ரிலீஃப் ஆக இருந்தது.
இப்படியாக தேர்தல் வரைக்கும் அண்ணாமலை வேறு வேறு வேலைகள் செய்வார். அதன் மூலம் திமுகவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த நிலையில் அண்ணாமலையை மாற்றினால் எங்களுக்கு இழப்புதான். அதனால்தான் இப்படி ஒரு மூவ் வெளிநாடுகளில் இருந்து நடக்கிறது’ என்கிறார்கள் அவர்கள். அரசியலில் இப்படிப்பட்ட விசித்திரங்களும் நடக்கின்றன” மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸப்.