வைஃபை ஆன் செய்ததும் சென்னை மழை வெள்ள பணிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஈடுபட்டிருக்கும் போட்டோ, வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை ஒரு பார்வை பார்த்த வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கியிருக்கும் வடகிழக்கு பருவமழை அடுத்து வரும் நாட்களில் தீவிர அதிகனமழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 15 ஆம் தேதி இரவுக்குப் பின் மிக கனமழை இருக்கும் என்றும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை, சேலம் போன்ற மற்ற பகுதிகளிலும் பணிகள் நடக்கின்றன.
மழையின் வீரியம் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதும் சென்னை மாநகராட்சி சார்பில் உடனடியாக மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதும் மின்னம்பலம் குழுவினரின் கள ஆய்வு மூலம் தெரிய வருகிறது.
குறிப்பாக இந்த மழை சீசனில் துணை முதலமைச்சர் உதயநிதியின் வேகமான பணிகள் பாராட்டுகளுக்கும் இன்னொரு பக்கம் விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றன.
அக்டோபர் 14ஆம் தேதி இரவு தொடங்கி நள்ளிரவு தாண்டி விடிய விடிய துணை முதலமைச்சர் உதயநிதி சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் விசிட் அடித்து ஆங்காங்கே இருக்கும் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க உத்தரவிட்டு வருகிறார். நேற்று இரவு தொடங்கிய அவரது மழைப் பயணம், இன்று இரவு வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
மழை குறித்தான ஆய்வுக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களே இல்லாமல் உதயநிதி மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். உடனடியாக இதற்கு பதிலளித்து அமைச்சர் நேரு அறிக்கை வெளியிட்டார். அதில் அமைச்சர்களோடு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களை பட்டியலிட்டிருந்தா.ர்
இந்நிலையில் உதயநிதியின் மழை ஆய்வுகள் துறை அதிகாரிகள் மத்தியில் வேகத்தைக் கூட்டியிருக்கின்றன. உதயநிதி தமிழ்நாட்டில் எங்கே மழை வெள்ள பாதிப்புகள் இருந்தாலும், தடுப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் உடனடியாக தனக்கே நேரடியாக தகவல் தெரிவிக்கும்படி இளைஞரணியினருக்கும், தன்னார்வலர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறார்.
இளைஞரணி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை உறுதி செய்துகொண்டு உடனடியாக உதயநிதிக்கு ஃபார்வர்டு செய்கிறார்கள். அதேபோல தன்னார்வலர்களும் உதயநிதியோடு நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள்.
இந்த வகையில் அதிகாரிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு பணிகளை வேகப்படுத்துகிறார் உதயநிதி. தன்னிடம், முதல்வர் ஸ்டாலின் எப்படி ஒரு பணியைக் கொடுத்தால் அதை முடிக்கும் வரை ஃபாலோ செய்துகொண்டே இருப்பாரோ அதேபோல, அதிகாரிகளிடத்திலும் அந்த பணிகள் முடியும் வரை ஃபாலோ செய்துகொண்டே இருக்கிறார் உதயநிதி.
நேற்று இரவு கோவிலம்பாக்கம் பகுதிக்கு சென்ற உதயநிதி, அம்பேத்கர் சாலை கால்வாய் பிரச்சினை எப்போது சரி செய்யப்படும் என்று அதிகாரிகளிடம் கேட்டார். அவர்கள் அக்டோபர் 15 பிற்பகலுக்குள் முடிக்கப்பட்டு விடும் என்று சொன்னார்கள். அதேபோல சரிசெய்யப்பட்டுவிட்டதா என்று இன்று பிற்பகல் ,மீண்டும் அங்கே விசிட் அடித்துள்ளார். முதலில் சென்ற பகுதிகளில் தனது உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை நேரடி விசிட் மூலமாக மீண்டும் அங்கே சென்று உறுதிப்படுத்திக் கொள்கிறார் உதயநிதி. இதனால் அதிகாரிகளும் வேகமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள், சில இடங்களுக்கு உதயநிதி செல்வது அமைச்சர்களுக்கே கூட தெரியவில்லை என்கிறார்கள்.
கடந்த மழைக் காலத்தில் முதல்வர் ஸ்டாலின் மிகத் தீவிரமாக இறங்கி பணிகளை ஆய்வு செய்தார். ஆனால் இந்த முறை., ‘நீங்க ஹெல்த்தைப் பாத்துக்கிட்டு அலையாம இருங்க. நானே பாத்துக்குறேன்’ என்று ஸ்டாலினிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் உதயநிதி.
அமெரிக்கா செல்வதற்கு முன்பு வரை அப்பல்லோ மருத்துவரான டாக்டர் நீரஜா முதல்வரின் தனி மருத்துவராக இருந்தார். அமெரிக்க பயணத்துக்குப் பிறகு இப்போது டாக்டர் எழிலன் தான் முதல்வரின் தனிப்பட்ட மருத்துவராக இருக்கிறார். மருத்துவர்களும் மழைக் காலத்தில் ஸ்டாலின் கடுமையாக அலைய வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் முதல்வருக்கு பதிலாக தானே சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கிறார் உதயநிதி. .
இன்று மாலை முதல்வருக்கு உயர் அதிகாரிகள் அளித்த ரிப்போர்ட்டில், ‘சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் எல்லாமே மூன்றில் ஒரு பங்குதான் நிரம்பியுள்ளன. ஏரிகள் நிரம்பி வழிந்தால்தான் சென்னைக்கு வெள்ள அபாயம் ஏற்படும். இப்போது அதற்கு வாய்ப்பில்லை. அக்டோபர் 15 ஆம் தேதி இரவிலும், அக்டோபர் 16 ஆம் தேதியும் மழை எப்படி இருக்கும் என்பதை கணிக்கமுடியவில்லை, மழையின் அளவு மிகவும் அதிகரிக்காதவரை பெரிய அளவு பிரசிச்னை இல்லை, எல்லா முன்னெச்சரிக்கைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்சாரம் குறித்த புகார்கள்தான் அதிகமாக வருகின்றன. அவற்றை, தொடர்ந்து கவனித்து வருகிறோம்., அக்டோபர் 16 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மழை தொடர்பான பணிகளை இன்னும் விரைவாக செய்யலாம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
களத்தில் உதயநிதி இருந்தாலும் முதல்வர் ஸ்டாலினும் சளைக்காமல் பணிகளின் முன்னேற்றத்தை விசாரித்து வருகிறார். இன்று இரவு பத்து மணியளவில் அறிவாலயம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கே அமைக்கப்பட்டுள்ள வார் ரூம் மை பார்வையிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரைத் தொடர்புகொண்டு மழை முன்னெச்சரிக்கைப் பணிகள், தண்ணீர் வடிய வைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…