வைஃபை ஆன் செய்ததும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்ந்து இன்பாக்ஸில் வந்து விழுந்து கொண்டிருந்தன.
அவற்றை பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “நானூறு இடங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த தேர்தலை எதிர்கொண்ட பாரதிய ஜனதா கட்சி 240 இடங்கள் என்ற அளவிலேயே மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது.
பாஜகவுக்கு தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்து கிடைத்திருக்கிறதே தவிர, 2019 இல் பெற்ற மெஜாரிட்டி இன்று அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து தான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். கடந்த பத்தாண்டுகளில் நாங்கள் செய்த நன்மைகள் மக்கள் நலத்திட்டங்கள் இனி தொடரும் என்றும் மோடி அறிவித்திருக்கிறார். அதாவது மீண்டும் தனது தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கும் என்பதை மோடி சொல்லி இருக்கிறார்.
அதே நேரம் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ’இந்த தேர்தலின் மூலம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை நாங்கள் காப்பாற்றி விட்டோம். இந்தியா கூட்டணி இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு நன்றி.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பலத்தோடு அதிகார பலத்தோடு மத்திய அரசின் ஏஜென்சிகள் பலத்தோடு உளவுத்துறை பலத்தோடு இந்த தேர்தலை சந்தித்தது. ஆனால் இந்தியா கூட்டணி நாங்கள் மக்களை மட்டுமே துணை கொண்டு இந்த தேர்தலை சந்தித்தோம்’ என்று கூறி இருக்கிறார்.
இந்தத் தேர்தலில் கேம் சேஞ்சர்களாக இருப்பவர்கள் ஆந்திராவின் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவும், பிகார் முதல்வர் நிதிஷ்குமாரும் தான். இவர்களால் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க உதவவும் முடியும், பாஜக ஆட்சி அமையாமல் தடுக்கவும் முடியும், ஏனெனில் பாஜகவின் 240 தொகுதிகளோடு சந்திரபாபு நாயுடுவின் 16 தொகுதிகள், நிதிஷ்குமாரின் 12 தொகுதிகளும் சேர்ந்தால் தான் மற்ற சிறு கட்சிகளோடு சேர்ந்து அக்கட்சியால் மெஜாரிட்டியை தொட முடியும்.
இந்த நிலையில் ராகுல் காந்தியிடம், ‘இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரோடு பேசுவீர்களா?’ என்று கேட்டதற்கு, ’இது பற்றியெல்லாம் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்படும்’ என்று மட்டும் குறிப்பிட்டார்.
தற்போது மோடியின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் சந்திரபாபு நாயுடு நிதிஷ் குமார் ஆகியோரிடம் இன்று பிற்பகலில் இருந்தே இந்தியா கூட்டணி தரப்பில் தலைவர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இரவு வரை தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
டெல்லியில் இருந்து சோனியா காந்தி மும்பையில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சென்னையில் இருந்து திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் ஆகியோர் சந்திரபாபு நாயுடுவையும் பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரையும் தொடர்பு கொண்டு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கேட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் மோடியை மட்டுமே முழுமையாக முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்தித்த போதும் பாஜகவுக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கூட கிடைக்கவில்லை என்பதால், மோடி அல்லாமல் வேறு ஒருவரை பிரதமர் ஆக்கலாமா என்ற ஆலோசனையும் ஆர்எஸ்எஸ் வட்டாரத்தில் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இதை உணர்ந்து கொண்ட பிரதமர் மோடி இன்று மாலை பாஜகவின் தேசிய தலைமை அலுவலகத்திற்கு வந்து மக்களிடம் உரையாற்றினார். அதில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்த அவர் கடந்த 10 ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்கள் தொடரும் என்றும் பேசினார்.
இதன் மூலம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தானே தலைமை ஏற்று நடத்தப் போவதாக ஆர்எஸ்எஸ் க்கும் மெசேஜை கொடுத்திருக்கிறார் மோடி. இதற்கிடையே இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோருமா, அதற்கான நம்பர்களை திரட்டும் வேலைகளில் ஈடுபடுமா என்பது நாளை நடைபெற இருக்கிற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.
ஆனால் அதிகாரபூர்வமற்ற வகையில் இன்று இரவே இந்த முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. இன்று தேர்தல் முடிவுகள் வந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ’நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொள்ளும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு டெல்லி செல்கிறார். ஜூன் 5 காலை 8.50க்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்படுகிறார்.
ஏற்கனவே அதிகாரப்பூர்வமற்ற வகையில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரோடு இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேசி வரும் நிலையில்… இன்று மாலை சந்திரபாபு நாயுடு தன்னை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அவர் இந்தியா கூட்டணியின் அழைப்பை மறுத்துவிட்டார் என்ற ஒரு கருத்தும் பாஜக தரப்பில் முன்வைக்கப்படுகிறது. இருந்தாலும் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று இரவு இரு கேம் சேஞ்சர்களையும் தங்கள் பக்கம் தூக்கும் திட்டம் தீவிரமாகியிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…