டிஜிட்டல் திண்ணை:  எடப்பாடிதான் அதிமுக- 85 பக்க தீர்ப்பு சொல்வது என்ன?  பாமக டபுள் கேம்- சிறுத்தைகள் ரியாக்‌ஷன்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெற்றிக் கொண்டாட்ட படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அத்தோடு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு அளித்த 85 பக்க தீர்ப்பின் பிடிஎஃப்  ஃபைலும் இன்பாக்ஸில் வந்தது.

அவற்றை ஆராய்ந்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

ADVERTISEMENT

“ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க கோரியும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிவடைந்து மார்ச் 28ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் பன்னீர்செல்வம் தரப்பினரின் அத்தனை கோரிக்கைகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

85 பக்க தீர்ப்பின் சாராம்சம் என்னவென்றால் கட்சி நலனா? தனிநபர்கள் நலனா?  என்று பார்த்தால் கட்சி நலன்தான் முக்கியம் என்று கருதி உள்ளது நீதிமன்றம். பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்றாலும் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டவர்கள்.

ADVERTISEMENT

கட்சி மீது பற்று கொண்டிருப்பதும் கட்சி மீது பாசம் கொண்டிருப்பதும் ஒரு பக்கம் என்றால் கட்சியின் விதிகளுக்கு உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் என்று எடப்பாடி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் வாதங்களை முன் வைத்துள்ளனர்.

இந்த வகையில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நால்வரின் கோரிக்கைகளை ஊக்குவித்தால் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கோடியே  55 லட்சம் உறுப்பினர்களை கொண்ட அதிமுக என்ற கட்சி பாதிப்புக்கு உள்ளாகும். அக்கட்சியின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகும்.

ADVERTISEMENT

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இது போன்ற ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடுகளை பற்றி எழுப்பிய கவலையை இந்த உயர் நீதிமன்றமும் கவனிக்கிறது என்று குறிப்பிட்டு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த வழக்கு பன்னீருக்கும் எடப்பாடிக்கும் இடையே நடக்கும் வழக்கு என்பதாகத்தான் வெளியே சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த தீர்ப்பின் மூலமாக பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகர் ஆகியோர் அதிமுகவுக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர் என்றும் அதிமுகவின் பொது நலன் கருதி இந்த வழக்கு அவர்களின் கோரிக்கைகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது அதிமுக என்றால் எடப்பாடி பழனிச்சாமி,  எடப்பாடி பழனிசாமி என்றால் அதிமுக என்பதை இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் தனிப்பட்ட நபர்கள் என்பதையும் இந்த தீர்ப்பு சொல்லாமல் சொல்கிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அப்போது மெசஞ்சர் ஒரு தகவலை டைப் செய்யத் தொடங்கியது.  “மார்ச் 28 ஆம் தேதி வெளியான இந்தத் தீர்ப்பை அடுத்து எடப்பாடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.  அதிமுகவோடு கூட்டணியை முறித்துக் கொண்ட பாமக தலைவர் அன்புமணியும் எடப்பாடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வெளியே எடப்பாடிக்கு அன்புமணி வாழ்த்து தெரிவித்த அதேநாளில்  சட்டமன்றத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தமிழக முதல்வர் ஸ்டாலினையும், உதயநிதியையும் வெகுவாக புகழ்ந்தார்.

பெண்களுக்கான உரிமைத் தொகைக்காகவும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான நிதி அதிகரிப்புக்காகவும் ஸ்டாலினையும் உதயநிதியையும் பாராட்டினார் ஜி.கே.மணி.  அவரது இந்த பேச்சைக் கேட்டு விடுதலை சிறுத்தை உறுப்பினர்களும் தவாகா தலைவர் வேல்முருகனும் நெருடலுக்கு உள்ளானார்கள்.

ஏற்கனவே திமுக கூட்டணிக்கு பாமக வர துரைமுருகன் மூலம் முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கேற்றார்போல  ஜி.கே.மணியின் புகழுரைகள் இருப்பதைப் பற்றி விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் பேசியபோது,

’பாமக வெளியே எடப்பாடியை  வாழ்த்திவிட்டு சட்டமன்றத்துக்குள் ஸ்டாலினை வாழ்த்துகிறது. இது தேர்தல் நெருங்கும் நிலையில் அவர்கள் ஆடும்  டபுள் கேமின் ஒரு பகுதி. கடந்த நான்கு தேர்தல்களாக விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருக்கிறோம்.  இந்த கூட்டணி இப்படியே தொடர்வதைத்தான்  ஸ்டாலின் விரும்புகிறார்.

இந்த நிலையில்  திமுக தலைவர் பாமகவை பாராட்டினால்தான் நாங்கள் சந்தேகப்பட வேண்டும்.  முதல்வரை பாமக பாராட்டியதற்கு நாங்கள் ஏன் சந்தேகப்படவேண்டும்?’ என்று கேட்கிறார்கள். இந்த நிலையில்தான் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்” என்ற மெசேஜை தட்டிவிட்டு ஆஃப் லைன் போனது.

நடிகரை அட்ஜெஸ்ட்மென்டுக்கு அழைத்த பிரபல நடிகை!

பற்களை பிடுங்கிய விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

Digital thinnai aidmk what does the 85 page judgment say
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share