டிஜிட்டல் திண்ணை: அதிமுக பொதுக்குழு – ’காத்திருக்கும்’ கலகம்? ஓபிஎஸ், டிடிவி குறித்து தீர்மானம்?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ”ஒரு தாய் மக்கள் நாம் என்போம்” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னய்யா ஒற்றுமை கீதம் இசைக்கிறீரு? அதிமுக சங்கதியா?

ADVERTISEMENT

ஒற்றுமையாக இருக்கிறது நல்லதுதானே.. நாடும் நாட்டு மக்களும் இதுவரை காணாத புதுமையான ‘ஒற்றுமையை’ காணப் போகிறோம்யா.

அது என்னய்யா ‘புதுமை ஒற்றுமை’?

ADVERTISEMENT

அப்படி பொறுமையாக கேளும்.. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளைக்கு டிசம்பர் 10-ந் தேதி நடக்குது.. இந்த பொதுக்குழுவுல என்ன நடக்கப் போகுது? என்ன முடிவு எடுக்கப் போறாங்கன்னுதான் ரொம்பவே எதிர்பார்ப்பாக இருக்காங்க..

அதிமுகவுல தம்மை சேர்த்தே ஆகனும்னு ரொம்ப எதிர்பார்க்குறாரு ஓபிஎஸ். ”இபிஎஸ்-க்கு டிசம்பர் 15-ந் தேதி வரை கெடுவிதிச்சுட்டேன்.. அப்புறமா ’ முக்கிய முடிவு’ எடுக்கப் போறேன்னு பரபரப்பை கிளப்பினாரு ஓபிஎஸ்.

ADVERTISEMENT

இப்படி சொல்லி முடிச்ச உடனேயே அவருக்கு டெல்லி ‘ஓலை’ அனுப்பியிருச்சு.. டெல்லியில போய் அமித்ஷாவை சந்திச்சுட்டு சென்னை ரிட்டன் ஆன ஓபிஎஸ் டோனை டவுன் செஞ்சுட்டாரு.. ‘இங்க நடக்குற எல்லாத்தையும் அமித்ஷாகிட்ட சொன்னேன்.. தனிக்கட்சி தொடங்கப் போறதா நான் சொல்லவே இல்லையே’ன்னு பம்மிவிட்டார் பன்னீர்.

அமித்ஷாவை சந்திச்சுட்டு சைலண்ட் மோடுக்கு போன ஓபிஎஸ்ஸை கோவையில கல்யாண நிகழ்ச்சியில சந்திச்சாரு அண்ணாமலை.. அப்புறமா ஓபிஎஸ்ஸும் அண்ணாமலையும் தனியா ரொம்ப நேரம் ஆலோசனை நடத்துனாங்க.. ஆனா,” ஓபிஎஸ் கிட்ட அரசியலே பேசலைன்”னு ஒரே போடா போட்டுவிட்டார் அண்ணாமலை.

இந்த பரபரப்புக்குள்ள, தவெக தலைமையிலான கூட்டணிக்கு சப்போர்ட்டா பேசிகிட்டு இருந்த டிடிவி தினகரனுக்கு டின்னர் விருந்து கொடுத்தாரு அண்ணாமலை.

இந்த டின்னருக்கு பின்னர் டிடிவி தினகரனின் பேச்சில் தடுமாற்றம் தெரியுது.. “தாம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுனது வருத்தம்தான்.. இப்பவும் அண்ணாமலை என்னை கூட்டணிக்கு வாங்கன்னுதான் சொல்றாரு.. போனுல பேசுறப்ப எல்லாம் கூட்டணிக்கு வாங்கண்ணே என்றுதான் சொல்லுவாரு அண்ணாமலை’ என சொல்லி வருகிறார் தினகரன்.

இப்படி இபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ், அண்ணாமலை, டிடிவி தினகரன் எல்லோரும் ஒன்னு சேர்ந்து நிற்கிறாங்க..

இன்னொரு பக்கம், அதிமுகவுலேயே இபிஎஸ்க்கு எதிராக சிவி சண்முகம், தங்கமணின்னு சீனியர்கள் கலகக் கொடியை உயர்த்தப் போறாங்கன்னும் சொல்றாங்க..

டிசம்பர் 6-ந் தேதி ஜெயலலிதா நினைவு நாளில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சிவி சண்முகம் தனியாக தமது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினாரு; தங்கமணி வரவே இல்லைன்னு நாம சொல்லி இருந்தோம்..

சிவி சண்முகத்தைப் பொறுத்தவரைக்கும் அதிமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை மீண்டும் கட்சிக்குள்ள கொண்டு வரனும்னு சொல்றாரு..

இவ்வளவு ‘பஞ்சாயத்துகளுக்கு’ மத்தியிலதான் அதிமுக பொதுக்குழுவை நாளைக்கு இபிஎஸ் கூட்டி இருக்காரு..

பொதுக்குழுவுல ‘திருப்புமுனை தீர்மானங்கள்’ இருக்குமா?

அப்படி எல்லாம் ஆசைப்பட்டா எப்பிடி?

நெருப்பை அணைக்கிற தீர்மானங்கள்தான் வரும்னு அதிமுக சோர்ஸ்கள் சொல்லுது.. இதுபத்தி அதிமுக சீனியர் தலைவர்களிடம் நாம் பேசுனப்ப, “நாலா பக்கமும் நெருக்கடிதான் பொதுச்செயலாளருக்கு (இபிஎஸ் எடப்பாடி பழனிசாமி) எப்படியாவது ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை அதிமுகவுக்குள் தள்ளிவிடனும்னு டெல்லி தொடங்கி எல்லா தரப்பும் நெருக்கடி கொடுத்துகிட்டே இருக்கு.. கட்சிக்குள்ளேயும் கூட இப்படி ஒரு நெருக்கடியை உருவாக்கிட்டாங்க..

இருந்தாலும் பொதுச்செயலாளரைப் பொறுத்தவரைக்கும், வெளியேறுனவங்களை மீண்டும் கட்சியில சேர்க்கப் போறதே இல்லை.. அதுக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை.. அப்படி சேர்த்தா கட்சியில பெரும் குழப்பம் வரும்.. கிடைக்கப் போற சீட்டுகளும் கிடைக்காம போயிடும்னு உறுதியா இருக்கிறாரு..

இப்படி எல்லாரும் நெருக்கடி கொடுக்கிறதுக்கு பதில் சொல்லும் வகையில, அதிமுகவுலதான் அவங்களை சேர்க்கலை.. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில அவங்க சேருவதை எதிர்க்கலைங்கிற மாதிரி ‘கூட்டணியை வலுப்படுத்துவோம்’ டோனில் தீர்மானம் கொண்டுவரலாம்னு டிஸ்கஷன் ஓடுது..

இப்படி தீர்மானம் போட்டு அதை ஓபிஎஸ், டிடிவி ஏத்துகிட்டா, நாங்களும் (அதிமுக) பாஜக கூட்டணியில இருப்போம்.. அவங்களும் (ஓபிஎஸ், டிடிவி) பாஜக கூட்டணியில இருப்பாங்க.. நாங்க பாஜகவுடன் கூட்டணி வெச்சிருக்கிற மாதிரி அவங்களும் பாஜக கூட்டணி வைச்சுக்குவாங்க.. நாங்களும் அவங்களும் வேற வேற.. இப்படி ஒரு விசித்திரமான காட்சிதான் நடக்கும்.

அதோட இதைப் பற்றி எல்லாம் முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுச்செயலாளருக்கு தருகிறோம்னு ‘தெளிவாக தீர்மானத்துல’ சொல்லப் போறாங்க” என்றனர் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share