வைஃபை ஆன் செய்ததும் கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முகாம், அண்ணாமலை ஆதரவாளர்களின் ஓவர் அலப்பறையால் டெல்லியில் குவியும் புகார்கள் என பாஜக தொடர்பான தகவல்களை வாசித்தபடியே மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். digital thinnai : admk again plead to bjp
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்தாலும், இந்த கூட்டணி எவ்வளவு காலம் நீடிக்கும்? தேர்தலுக்கு முன்னர் அதிமுக நம்மை கழற்றிவிடுமோ என்ற பதற்றத்தில் டெல்லி இருந்து வருகிறது என நமது மின்னம்பலத்தில் எழுதி இருந்தோம்.
தற்போது பாஜகவின் பதற்றத்தை தணிக்கும் வகையில் தாமாகவே வலையில் வந்து விழுந்திருக்கிறது அதிமுக என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
அப்படி என்ன பாஜகவுக்கு மகிழ்ச்சியான செய்தியாம்?
பொதுவாக டெல்லி அரசியல் தலைவர்கள் ஆயுர்வேத சிகிச்சைக்காக கர்நாடகாவுக்கு செல்வதுதான் வழக்கம். அண்மைக்காலமாக டெல்லி பாஜக தலைவர்களுக்கு தமிழ்நாட்டின் கோவையில் இருந்து பறந்து சென்று ஆயுர்வேத சிகிச்சை அளித்து வருகின்றனராம் சிலர். பாஜக உள்ளூர் தலைவர்கள், இதனை கட்சி கடமையாகவே செய்தும் வருகின்றனராம்.
இந்த அடிப்படையில் கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முகாமிட்டிருக்கிறார். டெல்லியில் இருந்து நிர்மலா சீதாராமன், நேற்று ஜூன் 1 பிற்பகல் 2.20 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் கோவை வந்து சேர்ந்தார்.
இந்த தகவலுக்கும் பாஜக- அதிமுக உறவுக்கும் என்னதான் தொடர்பு?
இப்போது பாஜக- அதிமுக கூட்டணி என்பதால் நிர்மலா சீதாராமன் கோவை வந்த போது பாஜக தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களுடன் அதிமுக மூத்த தலைவர்களான எஸ்பி வேலுமணியும் வட தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவி சண்முகமும் நிர்மலா சீதாராமனை வரவேற்றனர்.
நிர்மலா சீதாராமனை கோவையைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி வரவேற்றது ஓகேதான்.. ஆனால் சிவி சண்முகம் வரவேற்றதுதானே புதிராக இருக்கிறதே என பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்தோம்.
இது பற்றி நம்மிடம் விவரித்த பாஜக நிர்வாகிகள், எஸ்பி வேலுமணியுடன் சிவி சண்முகமும் வந்ததால் இருவருடனும் தனி அறையில் சுமார் 30 நிமிடம் பேசினாராம் நிர்மலா சீதாராமன். இந்த சந்திப்பின் போது, ‘தேர்தல் நெருங்கிடுச்சு.. நம்ம இரு கட்சி தொண்டர்களும் இன்னும் நெருக்கமாக செயல்படனுமே.. திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை நம்ம இரு கட்சிகளும் இணைந்தே செய்யனும்’ என நிர்மலா சீதாராமனிடம் அதிமுகவின் எஸ்பி வேலுமணியும் சிவி சண்முகமும் சொல்லி இருக்கின்றனர்.
இதை கேட்டுக் கொண்டே இருந்த நிர்மலா சீதாராமனிடம் எஸ்பி வேலுமணியும் சிவி சண்முகமும் சில கோரிக்கைகள் வைத்தனர்.
அப்படி என்ன கோரிக்கை தான் நிர்மலா சீதாராமனிடம் வைக்கப்பட்டது என அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். கோவையில் நிர்மலா சீதாராமனிடம் பேசிய எஸ்பி வேலுமணி, ‘திமுக அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ நடவடிக்கை எடுத்தது போல அதிமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. என் மீதும் தங்கமணி, கேசி வீரமணி, விஜயபாஸ்கர் மற்றும் எடப்பாடி அண்ணனின் உறவினர்கள் மீதும் சிபிஐ, வருமான வரித்துறை நடவடிக்கைகள் எடுத்துள்ளது. விஜயபாஸ்கர் மீது அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கைகளால் எங்களுடைய பேங்க் அக்கவுண்ட்ஸும் முடக்கப்பட்டிருக்கிறது.. இதனால் எந்த செலவும் செய்ய முடியலை… தேர்தல் நெருங்கிவிட்டது. எங்களுடைய வங்கி அக்கவுண்ட்ஸை ரிலீஸ் செய்துவிட்டால் ரொம்ப உதவியாக இருக்கும் மேடம்’ எனவும் பவ்யமாகவே வேண்டுகோள் வைத்தனராம்.
நிர்மலா சீதாராமனும், ‘சரிங்க பார்க்கலாம்’ என நம்பிக்கையான குரலில் சொன்னாராம். இதுதான் அதிமுகவினரை ரொம்பவே மகிழ்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
சரி அண்ணாமலை ஆதரவார்கள் என்னதான் ஓவராக அலப்பறை செய்துவிவிட்டனர்?
சென்னை கமலாலயத்தில் உள்ள சிலரிடம் பேசிய போது, தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டாலும் முதல் சில நாட்கள் ‘மவுசு’ குறையாமல்தான் இருந்த அண்ணாமலை, பின்னர் மெல்ல மெல்ல பாஜக சீனில் இருந்து ஒதுங்கினார்.
இந்த நிலையில் ஜூன் 4-ந் தேதி அண்ணாமலையின் பிறந்த நாள் வருகிறது. இதனையொட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் என கொங்கு பகுதி முழுவதும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

கொங்கு மண்டல மாநகரங்களின் சுவர்களிலும், பெரிது பெரிதாக, ‘ஹேப்பி பர்த்டே சிங்கம்!’ ‘ஹேப்பி பர்த்டே அண்ணா’ என்பது உள்ளிட்ட அலப்பறையான வாசகங்களுடன் மிரட்டும் வகையில் போஸ்டர்களை ஒட்டி வைத்துள்ளனர் அண்ணாமலை ஆதரவாளர்கள். அத்துடன் ரத்த தான முகாம்களையும் நடத்துகின்றனராம். ’அண்ணாமலையின் அன்பு படை’ என்ற வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கி அதில் இந்த தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனராம்.
இந்த அலப்பறையான போஸ்டர் விவகாரம்தான் இப்போது பிரச்சனையாகிவிட்டதாம். பொதுவாக பாஜகவில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் தனி மனித துதிபாடலை அக்கட்சி மேலிடம் அனுமதிப்பது இல்லை. இந்த அறிவிக்கப்படாத பாஜகவின் கொள்கையை அப்பட்டமாக அண்ணாமலை மீறுகிறாரே என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ரொம்பவே அதிருப்தி அடைந்துள்ளாராம். இதனால் கோவை எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மூலமா, அண்ணாமலையின் ஆதரவாளர்களின் ஓவர் அலப்பறைகள் தொடர்பாக புகார்கள் குவிக்கப்பட்டுள்ளதாம்.. இது அண்ணாமலை ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துக் கொண்டிருக்கிறது என டைப் செய்தபடியே Sent பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.