ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: பாட்னா டு பட்டினப்பாக்கம்… ஆதவ் அர்ஜுனாவின் ஆட்டத்தை மாற்றிய பிரசாந்த் கிஷோர்

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்தித்த செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. digital thinnai Adhav arjuna vijay

அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

ADVERTISEMENT

அதிமுகவா, தவெகவா? digital thinnai Adhav arjuna vijay

“சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் நகர்வுகள் முக்கிய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை விசிகவில் இருந்து விலகிய, அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்தித்திருப்பது பரபரப்பான பேசு பொருள் ஆகி உள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. இதுகுறித்து டிஜிட்டல் திண்ணையிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதிமுகவில் ஆதவ் அர்ஜுனா இணையும்போது அவருக்கு அக்கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு செயலாளர் பதவி அளிக்கப்படும் என்றும் அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை திமுகவுக்கு அழைத்து வந்த ஆதவ் அர்ஜுனா, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரை அதிமுக பக்கம் கொண்டு வரவும் உத்திரவாதம் அளித்திருக்கிறார் என்றும் அதிமுக தரப்பில் பேசப்பட்டது. ஆதவ் அர்ஜுனா அதிமுகவுக்கு பார்ட்டி பண்ட் என்ற அடிப்படையில் எவ்வளவு ரூபாய் தரப்போகிறார் என்பது வரை கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தான், ஜனவரி 29ஆம் தேதி ஆதவ் அர்ஜுனா திடீரென தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளார். 

ADVERTISEMENT

பாட்னா டு பட்டினப்பாக்கம்

அதிமுகவோடு நெருங்கிய தொடர்பில் இருந்த ஆதவ் அர்ஜுனாவின் நகர்வுகளில் இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என விசாரித்த போது அதன் பின்னணி பாட்னா வரை சென்றது.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி பாட்னா சென்ற ஆதவ் அர்ஜுனா அங்கே தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்திருக்கிறார்.

அந்த சந்திப்பின்போது தான் அதிமுகவில் இணைய இருப்பதையும் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் அதிமுகவுக்கு பணியாற்ற வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசியல் பற்றி பிரசாந்த் கிஷோர்

இதுகுறித்து தனக்கு நன்கு அறிமுகமான ஆதவ் அர்ஜுனாவிடம் பிரசாந்த் கிஷோர் சில விஷயங்களை விரிவாக பேசியுள்ளார். ‘நாம் ஒரு கட்சியோடு ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு அந்தக் கட்சியின், அந்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பற்றி துல்லியமாக கணிக்க வேண்டும். அப்போதுதான் நமது கேரியரிலும் வளர்ச்சி ஏற்படும்.

அந்த வகையில் தமிழ்நாட்டு அரசியலை இப்போது பார்த்தால் திமுக கூட்டணி சற்று வலுவாகத்தான் இருக்கிறது. எதிர்க்கட்சியான அதிமுக அந்த அளவுக்கு வலிமையான கூட்டணியை உருவாக்க வேண்டும் அல்லது திமுக கூட்டணியின் உறுதித் தன்மையில் குலைவை ஏற்படுத்த வேண்டும்.

இந்த நிலை ஏற்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் தற்போது அதிமுக – தமிழக வெற்றி கழகம் கூட்டணி உருவாக வேண்டும். நீங்கள் அதிமுகவில் சேர்வதை விட விஜய்யை சந்தித்து அதிமுக தவெக கூட்டணிக்கு வற்புறுத்துங்கள். அப்படி இந்த இரு கட்சிகளும் இணைந்தால் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகள் கூட இந்தப் பக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த முயற்சியை மேற்கொள்ளுங்கள். இப்படி ஒரு வலிமையான எதிர் அணி அமைந்தால் நாம் நம்முடைய பணியை வெற்றியை நோக்கி இன்னும் எளிதாக நகர்த்த முடியும்’ என்று ஆலோசனை கூறி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர். இதே ஆலோசனையை விஜய்யிடம் வேறு நபர்கள் மூலமும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார் என்கிறார்கள்.

இந்த பாட்னா சந்திப்பின் அடிப்படையில் தான் விஜய்யை சென்னை பட்டினப்பாக்கத்தில் சந்தித்திருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.

அதற்குள் ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக வெற்றி கழகத்தில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட போகிறது என்றும் செய்திகள் உலவுகின்றன. ஆதவ் அர்ஜுனா தனக்கு தவெகவில் பொதுச் செயலாளர் பதவி வேண்டும் என கேட்டதாகவும். ஆனால் விஜய் துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவியில் இருங்கள் என கூறியதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆதவ் பற்றி நிலைப்பாட்டை மாற்றும் திருமா?

விஜய் – ஆதவ் அர்ஜுனா சந்திப்பு பற்றி திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  கூறியிருக்கும் கருத்து அரசியல் அரங்கில் மேலும் சில பரபரப்புகளை கூட்டி இருக்கிறது.

‘ஆதவ் அர்ஜுனா விஜய்யை சந்தித்தது பற்றி யூகமான தகவல்கள் வருகின்றன. அப்படி அது நடக்குமானால் மகிழ்ச்சி. அவருக்கு என் வாழ்த்துக்கள். ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தவரை தலைமைக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருந்தார்’  என தன்னால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆதவ் அர்ஜுனாவை பாராட்டித் தள்ளியிருக்கிறார் திருமாவளவன்.

இதன் மூலம் பிரசாந்த் கிஷோர் திமுக கூட்டணி பற்றி கணித்த கணிப்பு நடந்துவிடுமோ என்ற விவாதங்களும் தொடங்கிவிட்டன” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share