டிஜிட்டல் திண்ணை: அதானி விவகாரம்… திமுக எம்பிக்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ் என்ன?

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அறிவாலயத்தில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்ட போட்டோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“நாடாளுமன்றம் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி தொடங்க இருக்கிற நிலையில்…  திமுக எம்..பி.க்கள் கூட்டத்தை இன்று  (நவம்பர் 22) மாலை அறிவாலயத்தில் கூட்டினார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். மாலை 7 மணிக்கு  என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சரியாக 6.55க்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின் வந்துவிட்டார்.

கூட்டம் தொடங்கிய நிலையில் புதிய எம்.பி.க்கள் ஒவ்வொருவராக பேசச் சொன்னார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி எழுந்து, ‘சமீபத்தில் கோவைக்கு வந்து எங்கள் தொகுதிக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு திட்டங்களை கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பேசினார்.

அப்ப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘நன்றியெல்லாம் சொல்ல வேணாம். நாம அறிவித்த திட்டங்கள் எல்லாம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கணும். உங்களுக்கும் அதுல பொறுப்பு இருக்கு’ என்று சொல்ல சரிங்க தலைவரே என்று அதற்கு பதிலளித்து அமர்ந்தார் ஈஸ்வரசாமி.

ஈரோடு எம்பி பிரகாஷ் பேசுகையில், ‘நம்ம தொகுதியில எல்லாமே நல்லா போயிட்டிருக்குங்க தலைவரே… குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி மேலதான் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கு’ என்று கூறினார்.

இப்படி பேசிய பல எம்பிக்களும் தங்களது எம்பி தொகுதி எப்படி இருக்கிறது என்பதோடு… எம்பி ஃபண்டு விவகாரத்தில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒருமுறைக்கு பல முறை சொன்னால்தான் செயல்படுகிறார்கள் என்பதையும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். அதை குறித்துக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

நாடாளுமன்ற திமுக தலைவர் கனிமொழி பேசும்போது, ‘முக்கியமான தொகுதிப் பிரச்சினைகளை உடனடியாக கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். நாடாளுமன்றத்தில் நீங்கள் பேசுவதற்கு  என்ன உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன்’ என்று பேசினார்.

நிறைவாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நமது சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தீவிரமாக பணியாற்றி உங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  அதையே 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்கள் எம்பி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற வைக்க வேண்டியது உங்கள் கடமை.

நம்முடைய தீர்மானத்தில், நாம் எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, தமிழ்நாட்டிற்கான தேவைகள் என்ன என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் பேச வேண்டும். மாநில அரசை நடத்துவதில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே நிதி நெருக்கடிதான். எனவே, நிதி உரிமைகளை பெறும் வகையில் உங்கள் பேச்சு அமைய வேண்டும்.  மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியெல்லாம் முறையாக வந்தால், நாம் மகளிர் உரிமைத் தொகையை அனைவருக்கும் கூட செயல்படுத்த முடியும்.

12 பேர் மற்றும் மேசை படமாக இருக்கக்கூடும்

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாடுகளை அறிக்கையாக எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  சில எம்பிக்கள் தங்களது தொகுதிகளில் இருக்கும் பிரச்சினைகளை சொன்னீர்கள். அதையெல்லாம் சரி செய்து உங்கள் எம்பி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் வெற்றி பெற வைக்க வேண்டும்.  அதற்காகவே நீங்கள் பாடுபடணும். பார்லிமெண்ட்  நடந்தா டெல்லியில இருக்கணும். இல்லேன்னா தொகுதியில இருக்கணும்.  வேற எங்கயும் உங்களை நான் பார்க்க கூடாது. தொகுதியில மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்கணும்.

உங்க எம்பி ஃபண்டு விஷயத்துல சில சிக்கல்களை சிலர் சொல்லியிருக்கீங்க.  அதை முறையாக மக்களுக்காக பயன்படுத்தறதுக்கு எல்லா முயற்சியும்  பண்ணுங்க’ என்று அறிவுரை கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

நவம்பர்  24 ஆம் தேதி நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க திட்டமிட்டுள்ளது.  ராகுல் காந்தி ஏன் இன்னும் அதானியை கைது செய்யவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் திமுக சார்பில் இந்த பிரச்சினையில் ராகுல் அளவுக்கான ஓங்கிய கண்டனக் குரல் இல்லை என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

இந்நிலையில் இன்றைய எம்பிக்கள் கூட்டத்தில் அதானி விவகாரம் பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக பேசவில்லை என்றாலும்… நாடாளுமன்ற திமுக நிர்வாகிகளுடன் அதானி விவகாரம் பற்றி ஆலோசித்திருக்கிறார் ஸ்டாலின்.

‘மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள். எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.

நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பேசுங்கள். நாம் தீர்மானத்தில் சொல்லியிருக்கும் கருத்துகள் பற்றியும் உங்கள் தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றியும் பேசுங்கள்’ என்று ஸ்டாலின்  தொட்டுச் சென்றிருப்பதில் அதானி விவகாரமும் அடங்கி இருக்கிறது என்கிறார்கள் எம்பிக்கள் வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட்  கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!

மதுரை, திருச்சியில் விரைவில் டைடல் பார்க்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share