தம் மீதான டிஐஜி வருண்குமாரின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை திருச்சி நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. DIG Varunkumar Case Accepted
திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்து மிரட்டல் விடுத்து பதிவிட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோருக்கு எதிராக டிஐஜி வருண்குமார் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்காமல் நிராகரிக்க வேண்டும் என சீமான் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு நிறைவடைந்தன.
இதனையடுத்து டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சீமானின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் டிஐஜி வருண்குமார் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், ஜூலை 7-ந் தேதி சீமான் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. அன்றைய தினம் சீமான், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
