கிச்சன் கீர்த்தனா: பருமனைக் குறைக்க உதவுமா டயட் உணவுகள்?

Published On:

| By admin

1975ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் உடல் பருமனுக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. 2016ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 190 கோடி பேர் அதிக உடல் எடை உடையவர்களாக இருக்கின்றனர். இவர்களி்ல் 65 கோடி பேருக்கு உடல் பருமன் உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கோவிட் கட்டுப்பாடுகள், ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ஃப்ரம் ஹோம் சூழல் ஆகியவற்றால் பெரியவர்களிடம் மட்டுமல்லாமல் குழந்தைகளிடமும் பருமன் பிரச்னை அதிகரித்திருக்கிறது.

ADVERTISEMENT

பருமன் என்பது ஒரு நோயா, குறைபாடா அல்லது நிலையா என்ற விவாதம் இன்றுவரை தொடர்கிறது. உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உடலில் அசாதாரண அல்லது அளவுக்கு அதிகமான கொழுப்பு திரள்வதே அதிக உடல் எடை (Over Weight), உடல் பருமன் (Obesity) என்று அழைக்கப்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாதவிடாய் பிரச்சினைகள், மனச்சோர்வு, தூக்கத்தில் மூச்சு தடைப்படுதல், இதயநோய், புற்றுநோய்க்குகூட உடல் பருமன் காரணமாக அமைகிறது. தொற்றா நோய்கள் மட்டுமல்ல, கோவிட் போன்ற தொற்று நோய்களுக்குக்கூட உடல் பருமன் முக்கிய காரணியாக அமைகிறது.

ADVERTISEMENT

மரபியல், தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்சினை, உடலுழைப்பு குறைந்து, ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொள்ளும் வாழ்க்கை முறை மாற்றம் ஆகிய மூன்று காரணங்களால் பருமன் ஏற்படுகிறது. 80-90% பேருக்கு வாழ்க்கை முறை மாற்றமே பிரதான காரணம்.

பெற்றோர் பருமனாக இருக்கும்பட்சத்தில் குழந்தைகளுக்கும் எடை அதிகரிக்காத வகையில், சிறிய வயதிலேயே உடலுழைப்பை அதிகரிக்கும் விளையாட்டுகள், ஆரோக்கிய உணவுகளைப் பழக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஹார்மோன் பிரச்சினைகள் இருப்பவர்கள் அதற்கான சிகிச்சையைத் தொடர்ந்து எடுக்க வேண்டும். வாழ்க்கை முறை மாற்றத்தால் உடல் எடை அதிகரித்தவர்கள் உடற்பயிற்சி, துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்துவிட்டு சரிவிகித உணவைப் பின்பற்ற வேண்டும்.

பேலியோ, கீட்டோ என வேறு எந்தவித டயட்டையும் பின்பற்றுவது நல்லதல்ல.

இந்த டயட் முறைகளில் நல்லதும் உள்ளது; கெட்டதும் உள்ளது என்ற வாதங்கள் தொடர்கின்ற நிலையில் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் சட்டென்று பின்பற்றாமல் இவற்றை தவிர்ப்பது நல்லது.

எனவே, ஆரோக்கிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி ஆறு மாதங்களுக்குப் பிறகும் எடை குறையவில்லை என்றால் மருத்துவரையோ, ஊட்டச்சத்து ஆலோசகரையோ அணுகலாம் என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share