SIR-ன்னா வாக்காளர் பட்டியல் திருத்தம்னு நினைச்சீங்களா? வைகோ தந்த புது விளக்கம்

Published On:

| By Mathi

Vaiko SIR

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR என்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புதிய விளக்கம் அளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

சென்னையில் SIR-க்கு எதிராக நேற்று (நவம்பர் 11) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது: சரியான சுள் என்ற வெயிலில் நான் உள்ளே நுழைந்தேன். இயற்கை நமக்கு மிக ஆறுதலாக இருக்கிறது. இப்பொழுது வானம் குடை பிடிக்கிறது. வெயிலைக் காணோம். வானம் கண்ணாமூச்சு விளையாடுகிறது. போர்க்களத்திற்குப் போகிறார்கள். இவர்களைக் களைப்படையச் செய்துவிடக் கூடாது. சிறிது வெயிலைக் காட்ட வேண்டும். பின்பு நிழலைக் காட்ட வேண்டும். பின்பு தென்றல் வீச வேண்டுடும் என்ற வகையில் மிகுந்த ஆரோக்கியமான இயற்கையின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்ற வாய்ப்பை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்கு என்னுடைய மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

உச்சந்தலைக்கு மேலே கொடுவாள்

பேராபத்து நம்மை நோக்கி வருகிறது. சிரத்தையே வெட்டக் கூடிய கொடுவாள் – கொலை வாள் நம் உச்சந்தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் ஆதார சுருதி வாக்குரிமை. பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள் நிறைந்திருக்கக்கூடிய இமயம் முதல் குமரி வரை பரந்திருக்கக்கூடிய இந்த உபகண்டத்துக்கு, நாடு சுதந்திரம் அடைந்தவுடன், உலகில் இதுபோன்ற ஒரு அரசியல் சட்டத்தை எந்த அறிஞனும் ஏற்படுத்தவில்லை என்று சொல்லக்கூடிய வகையில், இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை யாத்துத் தந்தவர் மாமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆவார்.

அம்பேத்கர் தந்த ஓட்டுரிமை

சுதந்திரம் கிடைத்தவுடன் அனைவருக்கும் ஓட்டுரிமை எந்த ஜனநாயக நாடும் தந்தது இல்லை. இது நம்முடைய உரிமை. அனைத்து மக்களும் வாக்களித்தால்தான், யார் அரசோட்ச வேண்டும் என்று முடிவெடுக்க முடியும். அரசியல் நிர்ணய சபைகூட கோடானு கோடி மக்களின் பிரதிநித்துவம் அல்ல. சொத்துரிமை உடையவர்கள். பட்டம் வாங்கியவர்களுக்கு மட்டும்தான் அரசியல் நிர்ணய சபையில் உரிமை வழங்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எல்லாவற்றையும் யோசித்து, முதலில் நாட்டுக்கு எது உகந்தது? என்று தீர்மானித்து அரிச்சுவடியைத் தருவோம்; ஆத்தி சூடியைத் தருவோம்; ஓட்டுரிமையைத் தருவோம் என்று அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கினார். யார் நம்மை ஆள்வது? ஆட்சி லகானை யார் கையில் ஏந்துவது? என்பதைத் தீர்மானிக்கின்றவர்கள்தான் வாக்காளப் பெருமக்கள். அவர்கள்தான் ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள். அவர்களுடைய வாக்குரிமையையே பறிக்க நினைக்கிறார்கள்.

ADVERTISEMENT

2022-ல் ஆர்.எஸ்.எஸ். தீட்டிய சதித் திட்டம்

இந்துத்துவா சனாதனக் கூட்டமும், நஞ்சாக உருவாகி வருகின்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டமும் ஒன்று சேர்ந்து 2022 பிப்ரவரி மாதத்தில் அலகபாத் நகரில் தர்மசன்சத் என்ற மாநாட்டைக் கூட்டினார்கள். அந்த மாநாட்டில், 32 பக்கங்களைக் கொண்ட ஒரு பிரகடனம் வெளியிட்டார். அதன் சுருக்க்ததைத் தருகிறேன். உங்களுக்கு மிகச் சுருக்கென்று தைக்கும். இனிமேல் இந்த நாட்டிற்கு இந்தியா என்ற பெயர் கிடையாது. பாரத் என்றுதான் அழைக்க வேண்டும். இந்தியாவுக்கு டெல்லிப் பட்டணம் தலைநகராக இருக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ். நச்சு மரத்தை வளர்த்த வாரணாசிதான் இந்தியாவின் தலைநகராக இருக்கும். இந்தியாவில் வாழ்கின்ற கோடானு கோடி முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஓட்டுரிமை கிடையாது.
இந்தியாவில் இனி இரண்டே மொழிகள்தான் இருக்கும். ஒன்று செத்துப்போன சமஸ்கிருத மொழி. மற்றொன்று நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தீரர்களால், மொழிப்போர் சிப்பாய்களால் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட வைத்தார்களே அந்த நாசகார இந்தி. இவை மட்டும்தான் இந்த நாட்டினுடைய ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும். இதனை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. சனாதன சக்திகள் எதிர்க்கவில்லை.இதை செயல்படுத்த என்ன வழி முதல் வழி, தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவது. ஓட்டுரிமையைப் பறிப்பது. குடியுரிமையைப் பறிப்பது.

ADVERTISEMENT

நேதாஜியும் சுதந்திரப் போராட்டமும்

வெள்ளைக்காரன் படையெடுத்து வந்தான் வியாபாரம் செய்ய. பின்னர் நாட்டையே ஆளத் தொடங்கினான். தலைவர்களின் மகத்தான தியாகத்தாலும், இலட்சக்கணக்கான மக்களுடைய இரத்தத்தாலும், அண்ணல் காந்தியாடிகள் தலைமையில் ஜனநாயகத்தின் இலக்கணமாகத் திகழ்ந்த பண்டித நேருவும் ஆயுதத்தைக் கொண்டு சென்று இந்த நாட்டை மீட்க முடியும் என்று முடிவெடுத்து, வெள்ளைக்கார காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, கல்கத்தாவில் இருக்கும் தன் வீட்டை விட்டு வெளியேறி, காபூல், ஆப்கானிஸ்தான் வழியாக ரஷ்யாவுக்குச் சென்று, அங்கிருந்து ஜெர்மனிக்குச் சென்று சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருடன் கை குலுக்கியபோது, இந்தியர்கள் ஜனநாயகத்திற்கு லாயக்கற்றவர்கள், அருகதையற்றவர்கள் என்று ஹிட்லர் கூறினார்.
நேதாஜியை அழைத்துச் சென்றவர்கள் அடுத்து இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்தார்கள். ஜெர்மனியில் ஹிட்லரை எதிர்த்து புருவத்தை நெரித்தால் அடுத்து பத்தாவது நிமிடம் அவன் சுட்டுக் கொல்லப்படுவான். நேதாஜி அவர்கள், ஹிட்லர் அவர்களே தயவு செய்து நிறுத்துங்கள். எங்கள் இந்திய நாட்டு மக்கள் ஜனநாயகத்தைக் காக்கும் வல்லவர்கள்; நடத்தவும் வல்லவர்கள். நீங்கள் கூறிய வார்த்தைகளை நீங்கள் திரும்பப் பெற வேண்டும் என்றார். வெல வெலத்துப் போனான் அடால்ஃப் ஹிட்லர். அப்படிப்பட்ட நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து, பலமுறை தாக்குதல் நடத்தினார்.தலைவர்கள் ஆண்டுக் கணக்கில் சிறையில் வாடி, பல தேசிய இனங்களாக பிரிந்து உள்ள இந்திய உபகண்டத்திற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்கள்.

இந்தியா ஒரு நாடு அல்ல..

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. அண்ணா முதலமைச்சரானதற்குப் பின்பு, நான் பிரிவினையைக் கைவிட்டுவிட்டேன். ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உயிரோடு இருக்கின்றன என்று 1967 ஜூன் மாதம் சட்டசபையில் முழங்கியதோடு, அபர்ட்ஸ்பரி மாளிகையில் நடைபெற்ற மாணவர் திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் நான் பிரிவினையைக் கைவிட்டுவிட்டேன் என்று சொல்கிறார்கள். அதைக் கேட்டதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று கூறினார். (அடியேனும் அதில் உரையாற்றியனேன்) இந்த மண்ணுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று எண்ணியபோது, விருதுநகர் மாரியம்மன் கோயில் திடலில் 72 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த உத்தமர் சங்கரலிங்க நாடாரின் கனவை நனவாக்க, இந்தத் தாயகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கூறினார்.SIR என்பது என்ன தெரியுமா?

இப்போது நம்மைச் சுற்றி வளைத்து அடிப்பதற்கு இந்த எஸ்.ஐ.ஆரைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
S என்றால், Sabotage சீர்குலைப்பது.
I என்றால், Intolerable தாங்க முடியாதது.
R என்றால், Remagadism

இதுதான் SIR.
வாக்குரிமைகளைப் பறிப்பதற்கு தேர்தல் ஆணையத்தின் உத்திகளில் ஒன்றுதான் இது. நேற்றைக்கு நான் சென்றிருந்த ஊரில் இந்தப் பதிவை செய்துகொண்டிருந்த நான்கு சகோதரிகள் என்னைச் சந்தித்தார்கள். அவர்களிடம், இந்த ஊரில் மொத்தம் எத்தனை வாக்காளர்கள்? என்று கேட்டேன். 960. இந்த ஐந்து நாட்களில் எத்தனை வாக்காளர்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டேன் 600 பேரை பதிவு செய்திருக்கிறோம் என்றார்கள். மற்றவர்கள் வீடுகளில் இல்லை என்றார்கள். எங்கே இருக்கிறார்கள் என்ற முகவரி தெரியவில்லை. பின்னர் அவர்களாக முயற்சித்து விண்ணப்பித்தால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். ஏறத்தாழ 75 இலட்சம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசும், அதற்கு எடுபிடியாக இருக்க்கூடிய இந்தியத் தேர்தல் ஆணையமும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.

SIR ஒழியட்டும்.. அழியட்டும்

SIR ஒழியட்டும்; அழியட்டும்; தகர்க்கப்படட்டும். நாம் விழிப்போடு எழுந்து நின்று நம் வாக்குரிமையைப் பதிவு செய்வோம். தேர்தல் களத்தைப் பற்றி எங்களுக்குத் துளியும் அச்சமில்லை. கவலையில்லை. வரட்டும் தேர்தல், அந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை இப்போது பெற்ற வெற்றியைவிட அதிகப்படியான வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். செயின் ஜார்ஜ் கோட்டையில் நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக அமர்வதற்கு உறுதி எடுத்துக் கொள்வோம். சபதம் ஏற்போம். ஒழியட்டும் SIR. இவ்வாறு வைகோ பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share