அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளருக்கு வாய்ப்புக் கொடுக்காமல், வெற்றியை சென்னை அணிக்கு கேப்டன் ரிஷப் பண்ட் தாரை வார்த்துவிட்டார் என்கின்றனர் லக்னோ ரசிகர்கள். Did Rishabh Pant deliberately loss against csk
நேற்று நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கடைசி 6 ஓவர்களில் 56 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கினார் தோனி. அவர் 20 பந்துகளில் 17 ரன்கள் என அடித்து களத்தில் இருந்த ஷிவம் துபேவுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் சேர்த்ததுடன் வெற்றியையும் உறுதி செய்தது.
இந்த நிலையில் தான் தோனிக்கு எதிராக கைவசம் ஒரு ஓவர் வைத்திருந்த லக்னோ அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோயை பயன்படுத்தாதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டெத் ஓவர்களில் தோனியின் அபார பேட்டிங் திறமை அனைவருக்குமே தெரியும். எனினும் அவர் டி20 போட்டியில் சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக தடுமாறி வருகிறார்.
இந்த சீசனில் 34 ஸ்பின் பந்துகளை எதிர்கொண்டுள்ள தோனி இதுவரை 15 டாட் பந்துகளுடன் 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதற்கு நேர்மாறாக, அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 37 பந்துகளில் 70 ரன்கள் குவித்துள்ளார்.
அதே நேரத்தில் லக்னோ அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய் நேற்றையை போட்டியில் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அவர் கைவசம் ஒரு ஓவர் மீதமிருந்தது.

எனினும் தோனிக்கு எதிராக அவரை பயன்படுத்தாமல், வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கினார் ரிஷப் பண்ட். ஆனால் அதுவே லக்னோவின் வெற்றி வாய்ப்பை பறித்துவிட்டது.
கடைசி ஓவர்களை வீசிய ஷர்துல், 4 வைடுடன் 4 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போட்டிக்கு பின்னர் அவர் பேசுகையில், “கடைசி ஓவர்களில் பிஷ்னோய் பந்துவீச்சு குறித்து விவாதித்தோம். ஆனால் அவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்க முடியாமல் போய்விட்டது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே கேப்டன் ரிஷப் பண்ட்டின் முடிவை ஆதரித்துள்ளார் பிஷ்னோய்.
அவர், “ஒருவேளை கேப்டன் மனதில் வேறு சில திட்டங்களை வைத்திருந்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, ஒரு கேப்டனாக, ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து, ஆட்டத்தின் நிலைமையை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே என்னைப் பொறுத்தவரை, அவர் சரியான முடிவை தான் எடுத்தார்” என்று பிஷ்னோய் தெரிவித்தார்.