பொள்ளாச்சியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஜெயராமன் திமுகவில் இணைந்ததாக ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் இன்று (நவம்பர் 21) செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது திமுக தலைவர் மு. க ஸ்டாலின் அதிமுகவில் இணைய மனு கொடுத்தால் பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராமன், “அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே எம்ஜிஆர்-ன் கை பிடித்து வளர்ந்த பிள்ளை நான். எம்ஜிஆர் மறைவிற்கு பின் அம்மாவோடு தொடர்ந்து பயணித்தவன். அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு என் உயிர் மூச்சு உள்ள வரையில் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் அணி வகுத்து நிற்கும் தொண்டர்களிலேயே நானும் ஒருவனாக இருந்து வருகிறேன்.
பிரபல பத்திரிகை ஒன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னையும், என் மகனையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது. இதனால் அந்த ஊடகம் மீது ரூ. 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்டு இருக்கிறேன். அந்த வழக்கு தற்போது நடக்கத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் நான் திமுகவில் இணைந்ததாக செய்தி வெளியானது. இதை மற்ற ஊடகங்களும் பரப்ப துவங்கி உள்ளன. இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கி தருவேன்” என காட்டமாக தெரிவித்தார்.
மேலும் “அதிமுக என்ற இயக்கம் என் உயிரோடும், உணர்வோடும் கலந்தது. உயிர் உள்ளவரை தான் அதிமுகவில் தொடர்ந்து நீடிப்பேன். இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் .
வேண்டுமென்றால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிமுகவில் இணைவதற்காக மனு கொடுத்தால், அதை எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்வார் என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் திமுகவினர் தொடர்ந்து என் மேல் அவதூறு பரப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதிமுகவை யாரும் அசைக்க முடியாது.
தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக தேர்தலில் இணையுமா என்ற கேள்விக்கு, கட்சி தலைமை பதில் கூறும் என தெரிவித்தார்
