என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியது தொடர்பான செய்திக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.
கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் 2021ஆம் ஆண்டு 300 கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் மற்றும் ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இவ்வழக்கில் சென்னை சேலையூரை சேர்ந்த லிங்கம் என்ற ஆதி லிங்கம் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவர் நடிகை வரலட்சுமியிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இதனால் வரலட்சுமியிடம் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும், அவருக்குச் சம்மன் அனுப்பியிருப்பதாகவும் இன்று பிற்பகல் செய்திகள் வெளியாகின.
இதற்கு வரலட்சுமி சரத்குமார் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 29) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது நடக்கும் நிகழ்வுகளுக்குப் பதிலளிக்க வேண்டியது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
ஆதிலிங்கம் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ.வினால் எனக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுப் பரப்பப்படும் அனைத்து செய்திகளும் தவறானவை. அது முற்றிலும் வதந்தி ஆகும்.
அப்படி எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ரிலான்ஸ் மேலாளராக ஆதிலிங்கம் என்னிடம் பணியாற்றினார்.
இந்தக்காலகட்டத்தில் நான் மேலும் பல ப்ரீலான்ஸர்களுடன் ஒரேநேரத்தில் பணியாற்றினேன்.
ஆதிலிங்கம் பணியிலிருந்து சென்ற பிறகு அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
இதுபோன்ற செய்திகளைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. எனினும் அரசுக்கு உதவுவதில் எனக்கு மகிழ்ச்சி தான்.
இன்றைய காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து உண்மையையோ, விளக்கத்தையோ பெறாமல் செய்தியாக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
உண்மைகளின் அடிப்படையில் கட்டுரைகள் மற்றும் தகவல்களை வெளியிடுமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
கடலூரில் பாமக பொதுக்கூட்டம் : நீதிமன்றம் மறுப்பு!
நாங்குநேரி சின்னதுரை குடும்பத்தை ஒதுக்கி வைக்க முடிவு: அதிர்ச்சி ரிப்போர்ட்!