அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிமுக நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்த கே.ஏ.செங்கோட்டையன் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் மனம் திறக்க உள்ளேன் என செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து நேற்று கட்சி அலுவலகத்தில் பவானி தொகுதி எம்எல்ஏ பண்ணாரி உள்ளிட்ட சுமார் 100 ஆதரவாளர்களுடன் 3 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார் செங்கோட்டையன். இதை தொடர்ந்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், செப்டம்பர் ஐந்தாம் தேதி காலை 9.15 மணி அளவில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன். வந்து விடுங்கள். மேற்கு மாவட்ட அதிமுக உட்பட வேறு யாரையும் நான் அழைக்கவில்லை என்றார்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் பெருமாநல்லூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருமண விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள், சசிகலாவை சந்தித்தீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நான் சசிகலாவை சந்திக்கவில்லை என கும்பிடு போட்டு பதில் தெரிவித்தார். இதை தொடர்ந்து மாற்று கட்சியில் சேர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு செப்டம்பர் 5ஆம் தேதி கூறுகிறேன் என்றார்.
