ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகர அதிகாரிகளை, மாநகர திமுக செயலாளரும் மாநகர மேயரின் கணவருமான ராஜா மிரட்டும் வீடியோ ஒன்று அதிகாரிகள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, கடலூர் மாநகராட்சி மேயராக இருக்கும் சுந்தரியின் கணவர் ஆவார். கணவன் மனைவி இருவர் மீதும் சொந்த கட்சியினர் மற்றும் கவுன்சிலர்களாலேயே தொடர்ந்து சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்த போது, அவர்களை மாநகர திமுக செயலாளரான கே.எஸ்.ராஜா தடுத்து மிரட்டி அனுப்பிய வீடியோ ஒன்று அதிகாரிகள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவை மின்னம்பலம்.காம் க்கு அனுப்பி வைத்தனர் மாநகராட்சி அதிகாரிகள்.
மேயரின் கணவரும், திமுக மாநகர செயலாளருமான ராஜா அதிகாரிகளை மிரட்டினாரா, நடந்தது என்ன என்று விசாரித்தோம்.
கடலூர் பஸ் நிலையத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் கடைக்காரர்கள் மற்றும் பிளாட்பாரத்தில் கடை வைத்துள்ளவர்கள், மக்களின் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ளனர். மேலும் சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் நிழலுக்காக ஒதுங்கினால் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் மக்களை விரட்டி பேசும் ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.
இதனைக் கேள்விப்பட்ட ஆர்.டி.ஓ அபிநயா ஏப்ரல் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை நேரடியாக சந்தித்து பயணிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கூறினார். ஆனால் ஆர்.டி.ஓ சொன்னதை அலட்சியப்படுத்தி ’அட போங்கம்மா’ என அவர்கள் பேசியது அபிநயாவை கோபப்படுத்தியது.
உடனடியாக கலெக்டரை நேரடியாக சந்தித்து நடந்த விஷயங்களை எடுத்துச் சொல்லியுள்ளார் அபிநயா. தகவல்களைக் கேட்டுக்கொண்ட கலெக்டர் நீங்கள் தனியாகப் போகாதீர்கள், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளை அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் மாநகராட்சி உதவி ஆணையர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற களத்தில் இறங்கினார்கள்.
அடுத்த பத்து நிமிடங்களில் ஸ்பாட்டுக்கு வந்தார் கடலூர் மேயரின் கணவரும், கடலூர் மாநகர திமுக செயலாளருமான கே.எஸ்.ராஜா. ”நிறுத்துங்க…அகற்றும் வேலையை நிறுத்துங்க” என குரலை உயர்த்தி சத்தம் போட்டுள்ளார்.
அங்கு வந்த அதிகாரிகள் கலெக்டரிடம் அனுமதி கேட்டுவிட்டு வந்திருக்கிறோம் என்றதும், கலெக்டரிடம் நான் பேசிக்கிறேன் என்று ஸ்பாட்டிலிருந்தபடி கலெக்டரை தொடர்புகொண்டு பேசினார் ராஜா.
அதன் பிறகு கலெக்டரிடம் சொல்லிவிட்டேன் நீங்கள் போங்கள் என்று சொன்ன ராஜா, ”நீங்கள் என்ன அதிமுக அதிகாரிகளா, நீங்கள் வேலை செய்யனுமா வேண்டாமா? குடிநீர் பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. அதைத் தீர்க்க வக்கில்லை, மாநகராட்சிக்கு வாடகை கொடுக்கின்ற வியாபாரிகளுக்கு தொல்லைக் கொடுக்கிறீங்க, வியாபாரிகளே வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்” என அதட்டலாக அதிகாரிகளை வாயா போயா என பேசி அனுப்பி வைத்துவிட்டார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றப் போன அதிகாரிகள் திரும்பி வந்ததை அவமானமாக நினைத்து அடுத்தது என்ன செய்யலாம் என யோசித்து வருகின்றனர்.
அதிகாரிகள் மிரட்டப்பட்டது பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டோம். ”குடிநீர் பிரச்சினை தீர்க்கவில்லை, வரி வசூல் பண்ண வக்கில்லை, ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்துட்டீங்கனு பப்ளிக் மத்தியில் கேட்கிறாரே? இவர் மனைவிதானே மேயர்…என்ன காரணம் என்று மக்களுக்கு தெரியாதா?” என பொங்கினார்கள்.
மாநகர திமுக செயலாளர் ராஜாவை தொடர்பு கொண்டோம். ”நான் மிரட்டலங்க, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து சப்ளை செய்ய முதல்வர் 180 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதையெல்லாம் விட்டுட்டு கடைக்காரர்களை தொல்லை செய்யறாங்க.
ஆளுங்கட்சியாக இருந்தும் மாநகராட்சி அதிகாரிகளும் சரி கலெக்டரும் சரி சொல்வதை செய்யமாட்றாங்க. அதிகாரிகள் இன்று இருப்பார்கள் நாளை போய்விடுவார்கள் சார், மக்களுக்கு நாங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் எங்களைத் தான் கேள்வி கேட்பார்கள்.
வரி வசூல் செய்யவில்லை, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவில்லை, கடைக்காரர்களை தொல்லை செய்ய வந்துட்டீங்களா போங்கயா என்று கேட்டது மிரட்டலா?” என நியாயப்படுத்துகிறார் ராஜா.
அதிமுக, திமுக என்று ஆட்சிகள் மாறினாலும் அதிகாரிகள் மிரட்டப்படுவது மட்டும் தொடர் கதையாகதான் உள்ளது.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து உயிரிழந்த அரசு மகப்பேறு மருத்துவர்!