ஆஸ்திரேலியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் பார்டர்- கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளில் திடீரென ஒரு அறிவிப்பை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியிட்டார்.
முன்னதாக 2008 ஆம் ஆண்டு கும்ப்ளேவும் 2014 ஆம் ஆண்டு தோனியும் இது போன்று டெஸ்ட் தொடரில் பாதியில் ஓய்வு அறிவித்துள்ளனர். அதே போல, அஸ்வினும் திடீரென்று இப்படி ஒரு முடிவெடுக்க என்ன காரணம் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. திடீர் ஓய்வு அறிவிப்பின் பின்னணி என்னவென்று பார்ப்போம்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக, இந்திய மண்ணில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. முக்கியமாக ஸ்பின்னுக்கு சாதகமான மும்பை, புனே மைதானங்களில் கூட இந்தியா தோற்றது.
இந்த தொடரில் 9 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார். ரவீந்தர ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் தலா 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இத்தனைக்கும் வாஷிங்டன் சுந்தர் 2 போட்டிகளில்தான் விளையாடியிருந்தார்.
இதனால், அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் 11 வீரர்களில் இடம் கொடுத்தால் மட்டுமே நான் வருவேன் என்று அணி நிர்வாகத்திடம் கூறியிருந்தார்.
நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். ஆனால், பெர்த்தில் நடந்த முதல் போட்டியிலேயே பெஞ்சில் வைக்கப்பட்டார். இந்த போட்டிக்கு பும்ரா கேப்டனாக இருந்தார்.
இந்த சமயத்தில் தனக்கு குழந்தை பிறந்திருந்ததால், கேப்டன் ரோகித் சர்மா தாயகம் வந்திருந்தார். இந்த போட்டியில் கோச் கம்பிர் செய்த காரியத்தால் விளையாடும் அணியில் அஸ்வின் இடம் பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்திருந்தார். அப்போதே அஸ்வின் ஓய்வு குறித்த முடிவை எடுத்து விட்டார்.
பின்னர், ரோகித் மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற போது, அஸ்வினை சமாதானம் செய்து அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தார்.
பிரிஸ்பேனில் நடந்த அடுத்த டெஸ்டில் மீண்டும் அஸ்வின் கரையில் வைக்கப்பட, ஜடேஜா உள்ளே வந்தார். இதையடுத்து, டெஸ்ட் அணியில் இருந்து நிரந்தரமாக விடை பெற அஸ்வின் முடிவு செய்தார். தொடர்ந்து, அவரின் 14 வருட தேசிய அணிக்கான கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
கடந்த 2017- 2019 ஆம் ஆண்டு முதல் அஸ்வினுக்கு மூட்டு வலி உள்ளது. பல சிகிச்சைகள் எடுத்தும் பலன் இல்லை. பின்னர், பெங்களூருவில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
ஓய்வு குறித்து அறிவிக்க இதுவும் ஒரு காரணமென்று கூறப்படுகிறது. ஏனென்றால், இனிமேல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்ற காரணத்தினால் திடீர் ஓய்வு முடிவுக்கு அவர் வந்து விட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
234 கோடிகள்…திமுகவின் அதிரடி வசூல் திட்டம்!
‘சக எம்பிக்கள் மண்டையை உடைக்கத்தான் குங்ஃபூ படிச்சாரா? : ராகுல் மீது கிரண் ரிஜிஜூ விமர்சனம்!