இளம் வீரர் ஒருவரை அணியில் எடுப்பதற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதும் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் அணி பதிவு செய்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் இளம்வீரர் சமர் ஜோசப்(24) தான். 7 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் உயிர் இருக்கிறது என்பதை இந்த உலகிற்கு உரத்துக் கூறியுள்ளார்.
இதனால் சமர் ஜோசப்பின் புகழ் ஒரே நாளில் உலகம் முழுவதும் தெரிந்த பெயராக மாறியுள்ளது. இந்த நிலையில் தற்போது அவருக்கு ஐபிஎல் தொடரிலும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
முன்னதாக டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சமர் ஜோசப் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. ஆனால் ஒரேநாளில் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது.
சமருக்கு தற்போது குஜராத், ராஜஸ்தான், பெங்களூர், சென்னை, கொல்கத்தா என 5 அணிகள் போட்டி போடுகின்றன.
இதில் சென்னை அணி சமரை அணியில் சேர்த்திட தீவிர ஆர்வம் காட்டுகிறதாம். வங்காள தேச வீரர் முஷ்டபிகுர் ரஹ்மான் மே மாதம் 11-ம் தேதி வரை மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடுவார்.
அதன் பிறகு அவர் சொந்த நாடு கிளம்பி விடுவார். இதனால் அவருக்கு மாற்றாக சமர் ஜோசப்பை அணியில் எடுக்கும் யோசனையில் சென்னை அணி இருக்கிறதாம்.
பந்துவீச்சு பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸின் பிராவோ அணியில் இருப்பதாலும், சென்னை அணியின் கேப்டன் தோனியின் கீழ் ஆடக்கிடைக்கும் வாய்ப்பு என்பதாலும், சமர் சென்னை அணிக்கு வரவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இது நடந்தால் சென்னை அணி கோப்பை வெல்லுவதை இந்த சீசனில் யாராலும் தடுக்க முடியாது என்பதால், ரசிகர்களும் தற்போது சமரின் வருகையை எதிர்பார்ப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அனைத்து பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே : சிவசங்கர்