பிரதமர் மோடிக்குப் பின் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் நபராக தோனி இருக்கிறார் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் யூகோவ்(YouGov) என்ற நிறுவனம், 41 நாடுகளில் இருந்து 42,000 பேரிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் உலக அளவில் மக்களின் மனம் கவர்ந்தவர்கள் குறித்த பட்டியலில், சர்வதேச அளவில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்தார். பெண்கள் வரிசையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய அளவிலான பட்டியலில், மக்கள் மனம் கவர்ந்தவர்களில் முதல் இடத்தில் பிரதமர் மோடி இடம்பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார்.
தோனி இரண்டு மாத இடைவெளியில் இருந்தாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் அவரே மனம் கவர்ந்த நாயகனாக இருக்கிறார். நடந்து முடிந்த 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் விமர்சனங்களை எதிர்கொண்டார் தோனி. இருப்பினும், தோனி தனது ரசிகர்களால் நேசிக்கப்படுகிறார் என்பதற்கு இந்த ஆய்வு முடிவுகள் மற்றொரு சான்றாக அமைந்துள்ளன.
மூன்றாவது இடத்தை தொழிலதிபர் ரத்தன் டாட்டா பிடித்துள்ளார். தோனிக்கு அடுத்து விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களாக 6வது இடத்தை சச்சின் டெண்டுல்கரும், 7வது இடத்தை வீராட் கோலியும் பெற்றுள்ளனர்.
இந்திய அளவில் பெண்களுக்கான பட்டியலில், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் முதலிடம் பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியும், மூன்றாம் இடத்தை பாடகி லதா மங்கேஷ்கரும் பிடித்திருக்கிறார்கள்.
