சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதன்முறையாக தோனியின் பெற்றோர் வந்துள்ள நிலையில் ரசிகர்களிடையே பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது. dhoni parents first time presents at chepauk
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் இன்று (ஏப்ரல் 5) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பொதுவாக ஐபிஎல் தொடரில் சென்னை அணி பங்கேற்கும் போட்டிகளை காண தோனி மனைவி சாக்ஷியும், அவரது மகள் ஷிவாவும் உற்சாகத்துடன் கண்டுகளிப்பது வழக்கம்.

ஆனால் தோனியின் பெற்றோரை மைதானத்தில் காண்பது அரிதிலும் அரிது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே – டெல்லி அணிகள் இடையேயான போட்டியைக் காண அவரது பெற்றோர் இன்று வருகை தந்துள்ளனர்.
இதனையடுத்து தோனி இன்று ஓய்வை அறிவிக்க உள்ளாரா என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தோனி ஓய்வு குறித்து பேசப்படுவது இது ஒன்றும் முதல்முறையல்ல. கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனியின் ஓய்வு குறித்து முதல்முறையாக கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே (2021) சென்னை அணிக்கு 4வது கோப்பையை கைப்பற்றிக் கொடுத்தார்.
அதன்பின்னரும் அது குறித்த கேள்வி நின்றபாடில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து 2023ல் சென்னை அணியை 5வது முறையாக சாம்பியன் பட்டம் பெற வைத்தார்.
எனினும் இந்த முறை கொஞ்சம் பலமாகவே தோனியின் ஓய்வுக் குறித்து பேச்சு எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு முதல்முறையாக அவரது பெற்றோர் வந்தது ரசிகர்களிடையே பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக சமூகவலை தளத்தில் #Retirement என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகி வருகிறது.