லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று (ஏப்ரல் 16) வீழ்த்தியது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. dhoni got shocked when he get potm after 6 years
கடந்த 5 போட்டிகளாக தோல்வியில் தள்ளாடிய அந்த அணியின் இந்த வெற்றிக்கு 43 வயதான தோனியின் பங்களிப்பு மிக முக்கியமாக அமைந்தது.
அவரது கேப்டன்ஷிப், ஒரு கேட்ச், ஒரு ஸ்டம்பிங், ஒரு ரன் அவுட் என தோனி பீல்டிங்கில் அசத்தினார். மேலும் 11 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரி மற்றும் 236.36 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 26 ரன்கள் குவித்தார். இறுதியில் அவரே 6 வருடங்களுக்கு பிறகு ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதனையடுத்து போட்டிக்கு பின்னர் அவர் பேசுகையில், “தொடர் தோல்விகளுக்கு பிறகு இதுபோன்ற ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறுவது நல்லது. இதன்மூலம் நீங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற விரும்புவீர்கள். துரதிர்ஷ்டவசமாக முந்தைய போட்டிகள் எக்காரணம் கொண்டும் எங்கள் வழியில் செல்லவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.
இந்த நிலையில் இன்று வெற்றி பெற்றது எங்கள் முழு அணிக்கும் நம்பிக்கையைத் தந்துள்ளது.
கடந்த 6 போட்டிகளில் பவர்பிளேயைப் பொறுத்தவரை, ஒரு அணியாக சிரமப்பட்டோம். பேட்டிங்கிலும் தவறான நேரத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து வருகிறோம். அதற்கு சென்னை மைதானம் சற்று மெதுவாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் சேப்பாக்கை விட்டு வெளியே ஆடும் போது எங்கள் பேட்டிங் யூனிட் சற்று சிறப்பாக செயல்பட்டது. இன்றைய போட்டி, பேட்ஸ்மேன்களுக்கு சற்று நம்பிக்கையைத் தரும்.
நாங்கள் அஸ்வின் மீது அதிக அழுத்தம் கொடுத்தோம். முதல் ஆறு போட்டிகளில் அவர் இரண்டு ஓவர்கள் வீசினார். நாங்கள் மாற்றங்களைச் செய்தோம். அது வெற்றியைத் தேடி கொடுத்துள்ளது. பந்துவீச்சில் சிறப்பாக செய்தோம். ஆனால் பேட்டிங்கில் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும்.
ஷேக் ரஷீத் இன்று மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கிறேன். அவர் சில ஆண்டுகளாக எங்களுடன் இருக்கிறார். இந்த ஆண்டு அவர் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் எதிராக வலையில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இது வெறும் ஆரம்பம். அவருடைய இயல்பான பேட்டிங்கால் ஆதிக்கம் செலுத்தும் திறன் அவருக்கு உள்ளது என்று நினைக்கின்றேன்.
இன்றும் கூட ’எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருது கொடுக்கிறார்கள்?’ என எனக்குள் கேள்வி எழுகிறது. உண்மையில் சுழற்பந்துவீச்சாளர் நூர் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்” என்று தோனி தெரிவித்தார்.