தருமபுரம் ஆதீனம் மிரட்டல் வழக்கு : தலைமறைவான உதவியாளர் கைது!

Published On:

| By christopher

தருமபுரம் ஆதீனம் தொடர்பான ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஆதீனத்தின் முன்னாள் நேரடி உதவியாளர் செந்தில் இன்று (ஜூன் 11) கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இந்த புகாரில், மயிலாடுதுறை போலீஸார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. அதன்படி மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், திருவெண்காடு சம்பா கட்டளை விக்னேஷ், செம்பனார்கோயில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், வழக்கில் தொடர்புடைய செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தருமபுர ஆதீனகர்த்தரின் நேர்முக உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், திருச்சியைச் சேர்ந்த பிரபாகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்படாததால் போலீசார் குறறப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆதீன மடத்தில் இருந்து ஆதின நேர்முக உதவியாளர் செந்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார். வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் பெறமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேர் 90 நாட்கள் சிறையில் இருந்ததை தொடர்ந்து நிபந்தனை ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 வது நபரான தலைமறைவாக உள்ள தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் முதல்முறையாக முன்ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனு நேற்று மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாயகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி வாதத்தில், தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது செய்யப்படாததால் வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யமுடியவில்லை என்றும் செந்திலை கைது செய்து நீண்ட விசாரணை செய்தால்தான் வழக்கு முடிவடையும் என்று வாதிட்டார்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏனைய குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனு விசாரணையில் செந்தில் அவசியம் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்ததை மேற்கோள்காட்டினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாயகிருஷ்ணன், செந்திலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கடந்த 4 மாதங்களாக தேடப்பட்டு வந்த ஆதீன கர்த்தரின் முன்னாள் நேரடி உதவியாளர் செந்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் தலைமறைவாக இருப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிறப்பு தனிப்படை போலீசார் சென்று செந்திலை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பயன்பாட்டுக்கு வந்த திருச்சி புதிய விமான முனையம் : விமானத்திற்கு வாட்டர் சல்யூட்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : நாம் தமிழர் தனித்து போட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share