விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.
காவல் நிலையத்தில் அளிக்கும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (அக்டோபர் 25) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அங்கு வந்த போலீசார் சி.வி.சண்முகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர், “இதுவரை எத்தனை கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறேன். நடவடிக்கை எடுத்தீர்களா? என்னுடைய லெட்டர்பேடை போர்ஜெரி பண்ணிருக்காங்க… ஏன் எப்.ஐ.ஆர் போடவில்லை. காரணம் சொல்லுங்க…
நான் கொடுத்த புகாரை ஏற்காததால் நீதிமன்றத்துக்கு போன பிறகு 4 வழக்கில் எப்.ஐ.ஆர் போட்டீர்கள். இன்னும் 20 வழக்கு இருக்கிறது. போலீஸ் என்ன செய்கிறீர்கள்… எஸ்.பி.யை இங்கு வர சொல்லுங்கள்… என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம்.. ” என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
சி.வி.சண்முகத்தின் போராட்டத்தை தொடர்ந்து அங்கு அதிமுகவினர் குவிந்ததால் மீண்டும் இரு போலீசார் அவரிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் சி.வி.சண்முகம் எஸ்.பி.யை வர சொல்லுங்கள் என்று கூறி தர்ணாவை தொடர்ந்ததால் அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் சாலையில் அமர்ந்து, “போலீஸ் அராஜகம் ஒழிக” என்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “நான் கொலை மிரட்டல் உட்பட 20க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்திருக்கிறேன். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. என் வீடு ஏறி வந்து வெட்டிவிடுவேன் என்று ஒருவர் வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார். அதன் மீது புகார் கொடுத்தபோது, அவரை அழைத்து காவல்துறை மன்னிப்பு கொடுத்து அனுப்புகின்றனர்.
என் வீட்டில் ஒருவர் புகுந்து போட்டோ எடுக்கிறார். அவரை நாங்களே பிடித்துக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் என்னுடைய எம்.பி. லெட்டர்பேடை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பினர். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் கொடுத்தும் இன்று வரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
கள்ளக்குறிச்சியில் நடந்த மது ஒழுப்பு மாநாட்டில் நான் பேசியது போல் ஒரு செய்தியை பொய்யாக வெளியிட்டார்கள். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதுவரை நான் அளித்த 20 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
ஸ்டாலின் தலைமையிலான இந்த காவல்துறை இப்படி நடந்துகொள்கிறது. நான் ஒரு வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர். எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலையை புரிந்துகொள்ளுங்கள்” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
அம்மாவின் கடனை அடைக்கவே நடிக்க வந்தேன்!- நடிகர் சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!