தேசிய கல்வி கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். Dharmendra Pradhan writes letter
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் ரூ.2,152 கோடி கல்வி நிதியை விடுவிப்போம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இது மறைமுக இந்தித் திணிப்பு என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. திமுக கூட்டணிக் கட்சிகள் ஒன்று திரண்டு சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனிடையே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இருமொழிக் கொள்கையை பின்பற்றுவதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தனது கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “உலக அளவில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பரப்புவதில் மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். திருக்குறள் நூலை 13 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து அதனை வெளியிட்டுள்ளார். உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை மிகவும் மதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “ஒவ்வொரு மாணவரும் தங்கள் தாய் மொழியில் தரமான கல்வி கற்பதை புதிய தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. எந்தவொரு மொழியையும் எந்தவொரு மாநிலத்திலும் திணிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை.
சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்தில் முன்னோடி மாநிலமான தமிழ்நாடு திகழ்கிறது. பல்வேறு மாற்றங்களை செய்யும் சீர்திருத்தங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் இக்கொள்கையால் உருவாகும் வாய்ப்புகளை இழக்கின்றனர்.
பாஜக ஆளாத மாநிலங்கள் கூட கருத்து வேறுபாடுகளைத் தாண்டி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது . ஆகவே, மாணவர்களின் நலன்களை மனதில் வைத்து அரசியல் வேறுபாடுகளை கடந்து செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். Dharmendra Pradhan writes letter