தர்மபுரியில் யானையை வேட்டையாடியதாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபர் மர்ம மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜுவால் இன்று (ஏப்ரல் 7) உத்தரவிட்டுள்ளார். dharmapuri senthil case transfer
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ஏமனூர் வனப்பகுதியில், ஆண் யானையை சுட்டுக்கொன்று அதனை எரித்து, தந்தத்தை வெட்டி எடுத்து கடத்திய வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், கொங்கராபட்டியைச் சேர்ந்த செந்திலை விசாரணைக்கு, காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றபோது அவர் கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் அவரது மனைவி சித்ரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், “விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எனது கணவரை ரிமாண்ட் செய்தார்களா அல்லது வேறு எங்கேயாவது அழைத்துச் சென்றுவிட்டார்களா என தெரியவில்லை. அவரை பற்றி கேட்டால் அதிகாரிகள் உரிய பதில் சொல்லவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறாரா? என எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்தசூழலில் செந்திலின் உடல் வனப்பகுதியில் கடந்த 4ஆம் தேதி அழுகிய நிலையில் எடுக்கப்பட்டது. செந்திலின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கையெழுத்திட அவரது குடும்பத்தினர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்
இச்சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தநிலையில் செந்திலின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “தனது கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், முகம் மற்றும் கை கால்கள் சிதைந்துள்ளது என்றும், கடந்த 18ஆம் தேதியே தனது கணவரை வனத்துறையினர் அடித்து துன்புறுத்தி கொலை செய்து விட்டனர் என்றும், தனது கணவரின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம்” எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு வழக்கறிஞர் எம்.ஆர் ஜோதிமணியன் முறையீடு செய்தார்.
அதன்படி இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிரேத பரிசோதனை அறிக்கையை கேட்டு வழக்கு விசாரணையை நாளைய தினம் ஒத்திவைத்தார்.
இதற்கிடையே வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜுவால் உத்தரவிட்டுள்ளார். dharmapuri senthil case transfer