தருமபுரி காட்டுப்பகுதியில் கைவிலங்கோடு தப்பித்த செந்தில் இரண்டு வாரங்களுக்கு பிறகு, சடலமாக மீட்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். Dharmapuri Senthil body retrieved
தர்மபுரி பகுதியில் தந்தத்துக்காக யானையை சுட்டுக்கொன்று பிடிபட்ட செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இறந்து போன யானையில் இருந்த இரண்டு தந்தங்களை வெட்டி எடுத்துக்கொண்டு தப்பித்த செந்தில், விஜயகுமார், துணையாக இருந்த செந்திலின் தந்தை கோவிந்தராஜ், தந்தத்தை வாங்க முயற்சித்த தினேஷ் ஆகிய நான்குபேரை காவல் துறையினர் உதவியுடன் பிடித்தனர் வனத்துறையினர்.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி கள விசாரணைக்காக இவர்களை யானை சுடப்பட்ட பகுதிக்கு நேரடியாக அழைத்துச் சென்றிருந்தனர். அப்போதுதான் கை விலங்கோடு செந்தில் தப்பிச்சென்றார் .
இவரை தமிழக மற்றும் கர்நாடக வனத்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர். இதுகுறித்து மின்னம்பலத்தில் மார்ச் 20 ஆம் தேதி, ’மீண்டும் ஒரு வீரப்பன்? – யானையை கொன்றவன் கை விலங்கோடு தப்பியது எப்படி?, மார்ச் 23 ஆம் தேதி, ’பைக்கை தூக்கி பரிசலில் போட்டு… மான் கறியால் விஐபிகளை மயக்கி… புதிய வீரப்பன் பற்றி பகீர் தகவல்கள்!’ என்ற தலைப்புகளில் தொடர்ச்சியாக புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வந்தோம்.
இந்நிலையில், மார்ச் 18 ஆம் தேதி கைவிலங்கோடு தப்பிச் சென்ற செந்தில், ஏப்ரல் 4-ஆம் தேதி பென்னாகரம் காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்ததை வனத்துறை கண்டுபிடித்தனர். வனத்துறையினர் கஸ்டடியில் கைவிலங்கோடு இருந்தவர் உடல் மீட்கப்பட்டபோது கைவிலங்கு இல்லை. அவரது மார்புக்கு மேல் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. மேலும், அவர் உடல் மீது நாட்டுத்துப்பாக்கி கிடந்தது. இதுதொடர்பாக காட்டுக்குள் புதிய வீரப்பன் உடல்! அதிர்ச்சித் தகவல்! என்ற தலைப்பில் ஏப்ரல் 4-ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனை தொடர்ந்து, பிஎன்எஸ்எஸ் 197 பிரிவில் வனத்துறை கஸ்டடியில் இருந்து செந்தில் இறந்து போனதாக வழக்குப்பதிவு செய்யப்பபட்டது.
மேலும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அவரது மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்யவும், உடலை வாங்கவும் இன்று வரை மறுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வனத்துறை மாவட்ட அதிகாரி ராஜாங்கத்திடம் தொடர்புகொண்டு கேட்டோம்….
“செந்தில் மீது இதுதான் முதல் வழக்கு. அவர் அப்பா கோவிந்தராஜ் மீது வனத்துறை இடத்தை ஆக்கிரமித்ததாக ஒரு பிரச்சனை உள்ளது” என்றார்.
மேலும், அவரிடம் “வனத்துறை கஸ்டடியில் இருந்து கைவிலங்கோடு தப்பித்தவர், இறந்து கிடக்கிறார். அவர் மீது நாட்டுத்துப்பாக்கி இருக்கிறதே எப்படி?” என்று கேட்டோம்.
அதற்கு, “இறந்து போன செந்திலின் உடலை கண்டுபிடித்து காவல்துறையினருக்கு தகவல் சொல்லிவிட்டோம். அவர்கள் தான் விசாரணை அதிகாரிகள். எப்படி தப்பித்தார்? எப்படி இறந்தார்? துப்பாக்கி எப்படி வந்தது? என அவர்களுக்கு தான் தெரியும்” என்று லைனை துண்டித்தார்.
வனத்துறை அதிகாரி ராஜாங்கம் கருத்தைப் பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்…
“யானையை சுட்டுக்கொன்று தந்தத்தை வெட்டி எடுத்து சென்று தலைமறைவான செந்திலின் கூட்டாளிகளை காவல்துறை தான் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தது. வனத்துறையினர் தான் செந்திலுக்கு கைவிலங்கு போட்டு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

வனத்துறை கஸ்டடியில் இருந்து தப்பித்து ஓடியவர் திடீரென இறந்து கிடக்கிறார் என்றால் அதற்கு போலீஸ் தான் பதில் சொல்ல வேண்டுமா? செந்தில் உயிரோடு இருந்திருந்தால், பல வனத்துறை அதிகாரிகளை கைகாட்டியிருப்பான்” என்கிறார்கள்.
“வனத்துறை கஸ்டடியில் இருந்து செந்தில் தப்பித்தது எப்படி? பின்னர் கைவிலங்கு அகற்றப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது எப்படி? அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது எப்படி? என பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்” செந்திலின் உறவினர்கள்.
செந்திலின் மரணத்தில் மலை போல மர்மங்களும் சந்தேகங்களும் குவிந்து வருகின்றது.
