தருமபுரி தீராத பஞ்சாயத்து… புதிய மாவட்ட பொறுப்பாளர் மணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

Published On:

| By Selvam

தருமபுரி மாவட்ட திமுகவில் அடுத்தடுத்து நடந்து வரும் மாற்றங்கள், அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட தர்ம செல்வன் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், ஒரே மாதத்துக்குள் அவர் நீக்கப்பட்டார். புதிதாக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மணி முதல்வர் ஸ்டாலினைக் கூட சந்தித்து வாழ்த்து பெற முடியாமல் ஊர் திரும்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.Dharmapuri new district secretary

தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பெட்டி, பென்னாகரகம், பாலக்கோடு, தர்மபுரி ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில், பென்னாகரம், தர்மபுரி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணியனுக்கு பதிலாக தர்மசெல்வன் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், தர்மசெல்வன் பேசிய ஆடியோக்கள் வெளியாகி கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மத்தியில் அவருக்கு எதிரான கோபத்தை உண்டாக்கின, மார்ச் 6 ஆம் தேதி நடந்த முதல் நிர்வாகிகள் கூட்டத்திலேயே அவருக்கு எதிராக ஒன்றிய செயலாளர்கள் வாக்குவாதம் செய்து கூட்டத்தை விட்டு வெளியேறினர்.

இப்படி தர்மசெல்வன் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியதால்,  தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஒரே மாதத்துக்குள் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், மாவட்ட பொறுப்பாளர் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு மார்ச் 18-ஆம் தேதி காலை மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் இன்பசேகரன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி ஆகியோர் காலையில் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டனர்.

சட்டமன்றத்திற்கு செல்ல ஸ்டாலின் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது தர்மசெல்வனிடம், ”நீங்க பேசுன ஆடியோ எனக்கு ரொம்ப தர்மசங்கடத்த உண்டாக்கியிருச்சு. அதனால உங்கள மாத்தலாம்னு இருக்கேன்” என்று சொல்லியிருக்கிறார். தர்மசெல்வன் அப்போது மெளனமாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது இன்பசேகரன் மெல்ல ஸ்டாலினிடம், ”தலைவர் கூட தான் நீ  இருக்கனும்னு எங்க அப்பா சொன்னதால நான் கடைசி வரை உங்க கூட மட்டும் தான் இருப்பேன். மாவட்ட செயலாளரா யாரை வேண்டுமானும் போடுங்க. ஆனா, திமுகவுக்கு ஓட்டு போடாதவங்களுக்கு மட்டும் மாவட்ட செயலாளர் பதவி கொடுக்காதீங்க.

உங்களுக்கே நல்லா ஞாபகம் இருக்கும். 2019 பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தலில் தோல்வியடைந்த பிறகு செல்வகணபதி, மணி ஆகியோரோடு உங்கள நான் சந்திச்சேன்.

அப்போது, ’கீழே (எம்.எல்.ஏ.) உதயசூரியனுக்கும் மேல (எம்.பி.) மாம்பழத்துக்கும் தான ஓட்டு கேட்டேன்னு’ நீங்க கோபமாக கேட்டீங்க. அப்படிப்பட்ட ஒருத்தருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்காதீங்கன்னு” என ஸ்டாலினிடம் தைரியமாக தெரிவித்துள்ளார்.

((2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தலில் மணி போட்டியிட்டார். அவர்தான் பாமகவினரோடு டீல் செய்துகொண்டார் என்று அப்போது ஸ்டாலினுக்கு புகார் சென்றது. இதை குறிப்பிட்டுதான் இன்பசேகரன் பேசியுள்ளார்))

உடனே அவரிடம் ஸ்டாலின், ”பரவாயில்ல இருக்கட்டும். உனக்கு நல்ல வாய்ப்பு இருக்கு. கட்சி வேலையை போய் பாரு. மணி நாடாளுமன்ற உறுப்பினரா இருக்காரு. அவரே கொஞ்ச நாள் மாவட்ட பொறுப்பாளரா இருக்கட்டும். எல்லோரும் ஒத்துழைப்பு கொடுங்க” என்று இன்பசேகரனிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு ஆகியோர் இருந்தனர். சந்திப்பு முடிந்ததும் முதல்வருடன் இருவரும் காரில் ஏறி சட்டமன்றத்திற்கு சென்றுவிட்டனர்.

இந்த பின்னணியில்… மார்ச் 21-ஆம் தேதி மாவட்ட பொறுப்பாளர் மணி, தருமபுரி மேற்கு, கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர செயலாளர்களிடம் ”தலைவர சந்திச்சு வாழ்த்து வாங்க டைம் வாங்கியாச்சு. அதனால எல்லோரும் வந்துருங்க” என்று அழைத்திருக்கிறார்.

இதன்படி 8 கார்களில் மாவட்ட நிர்வாகிகளுடன் மதியம் 2 மணிக்கு அறிவாலயத்திற்கு வந்திருக்கிறார் மணி. ஆனால், ”சிஎம் கொஞ்சம் பிஸியா இருக்காரு. அதனால இப்போது அவரை பார்க்க முடியாது” என்று தலைமையிலிருந்து மணியிடம் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையடுத்து, டிலிமிட்டேஷன் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஐடிசி ஓட்டலுக்கு சென்ற ஸ்டாலினை சந்திக்க அங்கே சென்றார் மணி. ஆனால், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் அங்கிருந்து கிளம்பி இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினை சந்திக்க குறிஞ்சி இல்லத்திற்கு மாலை 3.45 மணிக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் சென்றிருக்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே சூடான உதயநிதி, ”மேற்கு மாவட்ட நிர்வாகிகளையும் ஏன் அழைச்சுட்டு வந்தீங்க? உங்களுக்கு கட்சி வேலைன்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார். இதனால் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அங்கிருந்து கிளம்பினர்.

இதனைதொடர்ந்து கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் குறிஞ்சி இல்லத்திலேயே இருந்திருக்கிறார் மணி. இரவு 8 மணிக்கு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வந்தபிறகு முறைப்படி வாழ்த்து பெற்றுள்ளார். அப்போதும் உதயநிதி முகம் கொடுத்து பேசமறுத்திருக்கிறார்.

புதிதாக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு தலைவர், இளைஞரணி செயலாளர் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றுவிட்டு தருமபுரி திரும்பும்போது தடபுடல் வரவேற்புக்கு திட்டமிட்டிருந்தார் மணி. ஆனால், சென்னையில் ஏற்பட்ட நிகழ்வுகளால் வரவேற்பு வேண்டாம் என்று தனது நிர்வாகிகளிடம் தெரிவித்துவிட்டார்.

இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலினை நாளை (மார்ச் 24) காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற அப்பாயின்ட்மென்ட் வாங்கியுள்ளார் மணி.

தர்மபுரி திமுக பஞ்சாயத்து தீராது போலிருக்கிறது! Dharmapuri new district secretary

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share