வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த திமுகவினரிடம் இன்று (மார்ச் 10) நேர்காணல் நடத்தப்பட்டிருக்கிறது.
அடுத்த மாதம் ஏப்ரலில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீட்டை நேற்று இறுதி செய்தது திமுக தலைமை.
இதனையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று காலை முதல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தினர்.
முதலில் கன்னியாகுமரி தொகுதிக்கு விருப்ப மனு செய்த 8 பேரையும் அழைத்து, ”தலைமை முடிவு செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்” என அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளிலிருந்து வந்தவர்களிடம் சில நிமிடங்கள் மட்டுமே பேசி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து தர்மபுரி தொகுதிக்கு விருப்ப மனு செய்திருந்த சிட்டிங் எம்.பி. டாக்டர் செந்தில் உள்ளிட்ட 25 பேருடன், மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியன் ஆகியோரும் அழைக்கப்பட்டனர். அப்போது விருப்ப மனு அளித்த ஒவ்வொருவர் பெயரையும் வாசித்தார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் அவர்களிடம், ”உங்களுக்குள் யாருக்கு சீட் கொடுத்தாலும் வெற்றி பெறவைப்பீர்களா?” என கேட்டபோது, ’வெற்றி பெற வைப்போம்’ என்றதும் ”சரி போயிட்டு வாங்க” என அனுப்பி வைத்தார்.
தர்மபுரி தொகுதியைப் பொறுத்த வரையில் பாமக தலைவர் அன்புமணி போட்டியிடுகிறாரா இல்லையா என பார்த்து அதற்கு ஏற்றதுபோல் வேட்பாளரை நிறுத்தக் காத்திருக்கிறது திமுக தலைமை என்கிறார்கள் தர்மபுரி நிர்வாகிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– வணங்காமுடி
போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை: ஆளுநரிடம் எடப்பாடி மனு!
ஜாபர் சாதிக் கைது.. என்சிபி-ஐ வைத்து திமுகவை மிரட்டுகிறது பாஜக: ரகுபதி குற்றச்சாட்டு!