தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பதவியிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (பிப்ரவரி 23) உத்தரவிட்டுள்ளார். மேலும், தருமபுரி கிழக்கு மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளாராக தர்மசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். Dharmapuri District Secretary change

இந்தநிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மசெல்வன் பாமக நிர்வாகி ஒருவருடன் தொலைபேசியில் பேசும் உரையாடலை திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தருமபுரி மாவட்ட செயலாளருமான இன்பசேகரன் வெளியிட்டுள்ளார்.
அந்த உரையாடலில், பாமக நிர்வாகியை உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்துமாறு தர்மசெல்வன் கூறுகிறார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் இன்பசேகரை காலி செய்தால் தான் நமக்கு எதிர்காலம் என்று பேசுகிறார்.
இந்த உரையாடலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள இன்பசேகரன், திமுகவை ஒழிக்க நினைத்த தர்மசெல்வன் மாவட்ட செயலாளர் பதவிக்கு தகுதியுடைய நபர்தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் ,மாவட்ட செயலாளராக இருந்த போதும், ரத்தமும் சதையுமாய் கட்சியை வளர்த்து, என்னால் இயன்ற முழு உழைப்பை செலுத்தினேன்.
ஆனால், கட்சியை அழித்து ஒழிக்க இது போன்ற திட்டங்களை தீட்டி, எந்த ஒரு தார்மீக உரிமையும் இன்றி, தலைமைக்கோ, தலைவருக்கோ எந்த ஒரு அறிமுகமோ, அடையாளமோ இல்லாத இந்த நபர் இன்று புறவாசல் வழியாக மாவட்ட செயலாளர் பதவியை பெற்றிருக்கிறார்.
திமுகவை எதிர்க்கட்சியுடன் (பாமக+அதிமுக) கூட்டணி சேர்ந்து கொண்டு ஒழிக்க நினைத்தவர் கட்சியின் உயரிய பொறுப்பான மாவட்ட செயலாளர் பதவிக்கு தகுதியுடைய நபர்தானா?” என்று தெரிவித்துள்ளார். Dharmapuri District Secretary change