தாராள பிரபு: ஆதரவு கேட்டு ஹரீஷ் கல்யாண்

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் புதிய திரைப்படங்களின் திரையிடல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துக் கடந்த வாரம் ரிலீஸான ‘தாராள பிரபு’ படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் கதாநாயகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கொரோனா வைரஸ் (CoVid-19) பாதிப்பு இன்று உலகம் முழுவதையும் ஸ்தம்பித்துப் போகச் செய்திருக்கிறது. இத்தகைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நம் மாநிலம், நாடு மற்றும் உலக அளவில் அரசாங்க அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுக்குரியவை. கடந்த வாரம் வெளியாகி, உங்களது பேராதரவைப் பெற்ற எங்கள் ‘தாராள பிரபு’ படத்தின் திரையிடல் அரசு ஆணைகளுக்கு இணங்க, மார்ச் 31ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

எங்களது ‘தாராள பிரபு’ திரைப்படத்துக்கு நீங்கள் அளித்துவந்த அன்புக்கும் ஆதரவுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் கூறும் விமர்சனங்கள் எங்களுக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது. இந்த இக்கட்டான சூழலைக் கடந்ததன் பின்னர், படம் மீண்டும் வெளியிடப்படும். அப்போதும் உங்களது மேலான ஆதரவை நாங்கள் எதிர்நோக்குகிறோம். அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

படம் வெளியான மூன்றே நாட்களில் அதைக் காட்சிப்படுத்த முடியாத சூழல் உருவானதால் பெரும் வருத்தத்தில் இருக்கும் படக்குழுவினர், மறு வெளியீட்டின்போது மீண்டும் அதே ஆதரவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share