கடும் சிக்கலில் தனுஷ் படம்: தீர்ப்புக்காக காத்திருக்கும் வியாபாரிகள்!

Published On:

| By Kavi

தமிழ் சினிமாவில் தனுஷ் நாயகனாக நடித்து கடந்த பத்தாண்டுகளில் வெளியான திரைப்படங்கள் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கி தாமதம் ஆனது இல்லை.

மாறன் படம் தோல்வி அடைந்தது. இந்தப்படத்தின் தோல்வி மனைவியுடனான விவாகரத்து என நடிகர் தனுஷ் நெருக்கடிக்குள்ளானார்.

ADVERTISEMENT

அவ்வளவுதான் தனுஷ் கதை முடிந்தது என்ற ஆருடங்கள் கோடம்பாக்கத்தில் வலம் வந்தன. அதனால் அவர் நடிப்பில் தயாராகி இருந்த” திருச்சிற்றம்பலம்” படத்தை வெளியிடுவதில் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில் வேண்டா விருப்பமாக சன்பிக்சர்ஸ் வெளியிட்ட ” திருச்சிற்றம்பலம் ”  திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியது.

ADVERTISEMENT

இந்த வருடம் வெளியான, வெற்றி பெற்ற முதல் பத்து நேரடி தமிழ் திரைப்படங்களில் திருச்சிற்றம்பலம் இடம்பெற்றுள்ளது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளிவந்த  ” நானே வருவேன் ”   திரைப்படம் தரமான படம் என்ற பெயரை எடுத்த போதிலும், பொன்னியின் செல்வன் படத்துடன் நேரடியாக மோதியதால் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தமிழகம் முழுவதும் 13 கோடி மட்டுமே வசூல் செய்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ” வாத்தி “தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் தயாராகியுள்ளது.

இந்த படத்தின் ” வா…வாத்தி ” பாடல் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது. வாத்தி  திரைப்படம் டிசம்பர் – 2ம் தேதி வெளியாகும் என படநிறுவனம் செப்டம்பர் – 19ம் தேதி தங்களுடைய சமூகவலைத்தள பக்கங்களில் அறிவித்தது.

படத்தை வாங்க ஆர்வம் காட்டிய விநியோகஸ்தர்களிடமும் டிசம்பர் – 2ம் தேதி உறுதியாக படம் வெளிவரும் என சொல்லப்பட்டது.

Dhanush vathi movie case hearing today

அதன் அடிப்படையில்  “ ஆரண்யா சினி கம்பைன்ஸ் “ என்ற நிறுவனம் 5 ஏரியாக்களுக்கான  விநியோக உரிமையை 8 கோடி ரூபாய் என பேசி முடிக்கப்பட்டு 3 கோடி ரூபாய் முன்பணத்தை ஆரண்யா சினிகம்பைன்ஸ் அக்டோபர் 18ம் தேதி செலுத்தியுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் அக்டோபர் 24 தீபாவளி பண்டிகைக்கு பின் கையெழுத்திட்டு தருவதாக தயாரிப்பாளர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சொன்னபடி தயாரிப்பு நிறுவனம் தீபாவளி முடிந்து, இருவாரங்கள் கடந்தும் ஒப்பந்தத்தை தரவில்லை.

விநியோக நிறுவனம் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக நவம்பர் – 6ம் தேதி ஒப்பந்தத்தின் மாதிரியை அனுப்பிய தயாரிப்பு நிறுவனம், படம் ஏப்ரல் அல்லது பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறியுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த விநியோக நிறுவனம், செலுத்தப்பட்ட முன் தொகை வட்டிக்கு வாங்கி செலுத்தப்பட்டுள்ளது. அதனால் பல மாதங்கள் காத்திருக்க இயலாது, ஏற்கனவே கூறியபடி டிசம்பர் – 2ம் தேதி படத்தை வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும். முடியாது என்றால் தாங்கள் செலுத்திய  முன் பணத்தை உடனடியாக  திருப்பித்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

படத்தை டிசம்பர் – 2ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் விரும்பாததால் முன்பணத்தை வட்டி எதுவும் இன்றி உடனே திருப்பித் தந்துவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதை ஏற்று கொண்ட விநியோக நிறுவனம் உடனடியாக பணத்தை கொடுத்தால் வட்டி எதுவும் தேவையில்லை என தெரிவித்தது.

ஆனால் சொன்னபடி நவம்பர் – 6ம் தேதி பணத்தை தராமல்  நவம்பர் – 23ம் தேதி ரூ.2 கோடி மட்டும் கொடுத்துவிட்டு, இரண்டு நாட்களில் மீதி ரூ.1 கோடியை தருவதாக தயாரிப்பு நிறுவனம் உத்திரவாதம் அளித்தது.

சொன்னபடி நவம்பர் – 26ம் தேதி 1 கோடி ரூபாய் பணத்தை  திரும்ப தரவில்லை.

இந்நிலையில் படம் பிப்ரவரி – 17ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டதால், வட்டி இழப்பை ஈடுகட்டும் பொருட்டு பேசிய விலைக்கே படத்தை விநியோகம் செய்வதாகவும், ரூ.1 கோடி பணத்தை முன்பணமாக வைத்து கொள்ளுமாறும் மீதி தொகை ரூ.7 கோடியை பட வெளியீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தருவதாகவும் விநியோக நிறுவனம் தயாரிப்பாளருக்கு கடிதம் அனுப்பியது.

அந்த கடிதத்திற்கு பதில் வராததாலும், ரூ.1 கோடி பணத்தையும் தராததாலும் விநியோக நிறுவனம் டிசம்பர் – 8ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி காப்புரிமை சட்டப்படி தங்களது முன்பணம் தயாரிப்பாளர் வசம் உள்ளதால் படத்தின் உரிமை தங்களுக்கே சொந்தம் என்றும், பேசிய தொகையில் மீதமுள்ள 7 கோடி ரூபாயை பட வெளியீட்டிற்கு இரண்டு வாரங்களுக்கு முன் நீதிமன்றத்தில் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தயாரிப்பாளர் தரப்பை டிசம்பர் – 15ம் தேதி ஆஜராகுமாறு கூறியது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் டிசம்பர் 15 அன்று யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தரவில்லை இதனையடுத்து வழக்கை டிசம்பர் – 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது

வாத்தி படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்குவதற்கு ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம், திருச்சி விநியோகஸ்தர் சண்முகம், ஆகியோர் முயன்றனர்.

தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்ட அதிகபட்ச விலை காரணமாக வியாபாரம் முடியவில்லை. இதற்கு இடையில் சென்னையை சேர்ந்த ஆரண்யா சினிகம்பைன்ஸ் குறிப்பிட்ட ஏரியாவுக்கு மட்டும் முன்பணம் கொடுத்து உறுதிசெய்த நிலையில் அதிலும் வெளியீட்டு தேதி, முன்பணத்தை உரிய காலத்தில்திருப்பிக் கொடுக்காததால் வாத்தி படத்தின் தமிழக உரிமை வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பை தமிழ் சினிமா வியாபாரிகள் வட்டாரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இராமானுஜம்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

.மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share