‘குபேரா’ படம் தன்னை மீண்டும் தனது எளிமையான ஆரம்பகால வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். Dhanush says Kubera reminded me of my early life
இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில், தெலுங்கு திரையுலகின் உச்சநட்சத்திரங்களான நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் குபேரா படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சி மும்பையில் உள்ள பி.வி.ஆர் ஜூஹு மல்டிபிளெக்ஸில் இன்று (ஜூன் 10) நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் கோட் சூட் அணிந்தபடி நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். அப்போது படத்தின் மூன்றாவது பாடலான ‘பிப்பி பிப்பி டம் டம் டம்’ வெளியிடப்பட்டது.

அதெல்லாம் பொய்!
தொடர்ந்து கதாநாயகன் தனுஷ் மேடையில் பேசுகையில், “நீங்கள் என்னை அடிக்கடி பார்க்க முடியாது. ஆனால் இந்தப் படத்துக்கு இப்படி ஒரு விளம்பரம் தேவை. குபேரா ரொம்ப ஸ்பெஷல் படம்.
இந்த படத்தில் நான் ஒரு பிச்சைக்காரன் மாதிரி நடிக்கிறேன். இதற்காக நான் நிறைய ஆராய்ச்சி, ஹோம்வொர்க் பண்ணினேன் என்பதெல்லாம் பொய். அப்படி எதுவுமே நான் பண்ணல. ஷூட்டிங் ஸ்பாட் சென்றேன். இயக்குநர் என்ன சொன்னாரோ அதை செய்தேன்” என்றார்.
மேலும் அவர், “இந்த படத்தின் கதையை கேட்டதும், 20 நிமிடத்தில் இயக்குனர் சேகர் கம்முலாவுக்கு ஓகே சொல்லிவிட்டேன். இந்தப் படத்தை உருவாக்குவதில் அவரது எனர்ஜி, நேர்மறை மற்றும் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது
குபேரா படம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. படத்தின் சூட்டிங் அருமையானதாக இருந்தது. நாங்கள் குப்பை கிடங்குகளிலும் குப்பை லாரிகளுக்குள்ளும் இதனை படமாக்கினோம். ரஷ்மிகாவும் நானும் குப்பை கிடங்கில் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை நடித்தோம். அது வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை எனக்குக் காட்டியது.
நடிகர்களாக நாங்கள் மிகவும் பாதுகாக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம். வசதியானதைச் செய்ய விரும்புகிறோம். ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நின்றபோது, எனது குழந்தைப் பருவ வாழ்க்கைக்கு சென்று அந்த உலகை மீண்டும் பார்க்கும் விதமாகவும், அறிவூட்டுவதாகவும் அமைந்தது. ஏனெனில் நான் அப்படி வாழ்க்கையில் இருந்து தான், இன்று கடவுளின் அருளால் இந்த நிலையில் இருக்கிறேன்” என தனுஷ் பேசினார்.