நாட்டின் 14ஆவது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தன்கர். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. புதிய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி நடந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிட்டார்.

இதில் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு இன்று (ஆகஸ்ட் 11) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியல் பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குடியரசுத் துணைத்தலைவராக பதவியேற்றுள்ள ஜெகதீப் தன்கர் மாநிலங்களவை தலைவராகவும் செயல்படுவார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த அவர், சட்டப்படிப்பில் பட்டம் வென்றவர். ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறார்.
1989-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜூன்ஜூனு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990-ம் ஆண்டு மத்திய இணை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
2019-ம் ஆண்டு மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணைத்தலைவராக பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
கலை.ரா